Tuesday, October 13, 2020

அறிவுரைகள் இனி ஆண்களுக்குத்தான்!

செப்டம்பர் 14 அன்று உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், புல்கடி கிராமத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இரு வாரங்கள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்தது நாடு முழுவதையும் கொந்தளிக்கவைத்தது. செப்டம்பர் 17 அன்று அதே ஹத்ராஸைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்து, அவரும் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 5 அன்று இறந்தார். செப்டம்பர் 29-ம் தேதி உ.பி-யின் பல்ராம்பூர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை இருவர் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்திருக்கிறார்.


உ.பி-யில் தொடர்கதையாகும் இந்தச் சம்பவங்கள் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உலுக்கியிருக்கின்றன. பெண்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளையும் அறிவுரைகளும் இந்தச் சமூகம் வழங்கிக்கொண்டே இருக்கிறது. போதும். பெண் பிள்ளைகளை `பாதுகாப்பாக இருங்கள்’ என்று சொல்வதைவிட, ஆண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும்.`சக ஆண்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’ என்று பெண்களிடம் கேட்டோம்...


* “நான் பழக்கடை வெச்சிருக்கேன். என்கிட்ட பழம் வாங்க வர்றப்ப சிலர் அநாகரிகமா பேசுவாங்க. ‘நீங்கள்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?’ அப்டின்ற பழைய கேள்வியை நான் கேட்க மாட்டேன். ‘அம்மா வயித்துலதானே பொறந்த?’னு கேட்பேன். ஒரு பொண்ணை ஒரு ஆம்பளை மோசமா பேசினா, பார்த்தா, தொட்டா இன்னொரு ஆணா, அதை நீ தட்டிக் கேட்கணும். நீங்க உங்களுக்கு நல்லவங்களா மட்டும் இருந்து பிரயோஜனமில்லை. என்னை மாதிரி குடும்பச் சூழல் காரணமா வெளியில இருக்குற பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கறவங்களாவும் இருக்கணும்.”


- மீனா, நடைபாதை வியாபாரி, நெல்லை.


மீனா - முருகேஸ்வரி

* “நான் ஒரு எல்.ஐ.சி ஆலோசகர் என்பதால், தினமும் சிலரைச் சந்தித்து, பாலிசி தொடர்பாக விளக்கம் கொடுக்கணும். பிரீமியம் தொகை வசூல் செய்யணும். மூன்றாவது நபரிடம் பாலிசி குறித்துப் பேசும்போது, சில இடங்களில் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். கசப்பான அனுபவங்களும் உண்டு. ‘வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் மோசமானவர்கள் என எண்ணாதீர்கள்’ என்பதே நான் சக ஆணுக்குச் சொல்ல விரும்புவது. வெளியில் நீங்கள் சந்திக்கும் பெண்களை உங்கள் வீட்டிலுள்ள அம்மா, சகோதரிபோல நடத்துங்கள். அது போதும்!


- முருகேஸ்வரி, எல்.ஐ.சி ஆலோசகர், தேனி.


* “ஆட்டோவுல சவாரி செய்யுற சில ஆம்பளைங்க ரெட்டை அர்த்தத்துல ஜாடைமாடையாப் பேசத்தான் செய்யறாங்க. அப்படிப்பட்ட பேச்சு என் காதுல விழுந்த அடுத்த நொடியே ஆட்டோவை நிறுத்தி, கடுமையா திட்டியிருக்கேன். ஒரு ஆணுக்கு என்ன சொல்லணும்னு கேட்கறீங்க... ஒரு மணி நேரம், உங்களை ஒரு பொண்ணா நினைச்சுப் பார்த்துக்கோங்க. ஒரு ஆண் பார்க்குற தப்பான பார்வை பெண்ணை எவ்ளோ சங்கடப்படுத்தும்னு உங்களுக்குப் புரியும், பெண் ஒரு போகப்பொருள் இல்லைங்கறது புரியும்.”


- ரூபாதேவி, ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி.


ரூபாதேவி - காளியம்மாள்

* “என் பையன் அஞ்சாவது படிக்கிறான். அவனுக்கு சாதாரணமா நீதிக்கதைகள் சொல்றதோட மட்டுமில்லாம, `பெண்களிடம் இயல்பா நடந்துக்கோ’ன்னும், அவங்ககிட்ட என்ன பேசணும், பேசக் கூடாதுன்னும் சொல்லிக் கொடுத்துக் கிட்டிருக்கேன். பெண்கள் அப்படின்னாலே ஒதுங்கி, பேசத் தயக்கப்பட்டு வளர்ற பசங்க பெரியவனானதும் பெண்களோட இயல்பா பழக மாட்டேங்கறாங்க. அதிகாரிகள் லெவல்ல போனதும், கீழ வேலை பார்க்கற பெண்களை தவறாகப் பார்க்கறாங்க... நடத்தறாங்க. ஸ்கூல்ல இருந்தே பெண்களுடன் ஆண்கள் இயல்பா பழகத் தொடங்கிட்டாலே வன்கொடுமைகள் பாதிக்கு மேல குறைஞ்சுடும்.’’


- பா.காளியம்மாள், செவிலியர், தேனி


* “முன்முடிவோடு என்னிடம் பழகாதே” என்பதைத்தான் என் நட்புகளிடம் எப்போதும் நான் சொல்வேன். ஒரு பெண் இந்தச் சமூகத்தின் புறவெளியில் எப்படி இயங்குகிறாள், அவள் என்ன பேசுகிறாள், எதைப் பேசுகிறாள், எப்படியான ஆடை உடுத்துகிறாள், எத்தனை ஆண்களோடு நட்பாகயிருக்கிறாள் என்பதைக்கொண்டு அவளை ஒரு வட்டத்துக்குள் அடைத்து, அவள் இப்படித்தான் இருப்பாள் என்று முன்முடிவு செய்வதில் ஆரம்பிக்கிறது இந்தப் பிரச்னை. எனக்கென்று ஓர் உணர்வு, எனக்கென்று ஒரு சமூகப் பார்வை, எனக்கென்று ஒரு மனநிலை உண்டு என்பதை என்னுடன் இருக்கும் சக நண்பர்கள் புரிந்துகொண்டாலே போதும். இனி வரும் தலைமுறை இப்படி இருக்க வேண்டும் என்பதே என் ஆசையும்கூட!”


- ஜீனத் அமீதா பர்வீன், பல் மருத்துவர், சென்னை.


ஜீனத் அமீதா பர்வீன் - மேகா - ஐஸ்வர்யா

* “சோஷியல் மீடியால ஏதாவது போஸ்ட் பண்ணினாலே, காஸிப் பேசாதீங்க; அநாகரிகமா கமென்ட் பண்ணாதீங்க. ஒரு ஹோட்டலுக்குத் தங்கப் போனா, டிரெஸ் மாத்துற ட்ரையல் ரூம் போனா ஆண்களை நினைச்சு பயப்படுற நிலையை மாத்துங்க. உங்ககிட்ட நட்பா இருக்க விரும்புற எங்களை மதிச்சு அந்தச் சூழலை உருவாக்குங்க!”


- மேகா, கல்லூரி மாணவி, சென்னை


* “ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளியில வாங்க. உடன் பணிபுரியும் பெண்களை சரிசமமா நடத்துங்க. `நீ ஆண், நான் பெண்’ அப்படிங்கற ஈகோவையெல்லாம் தள்ளிவெச்சுட்டு, பெண்கள் சொல்லுற ஆக்கபூர்வமான கருத்துகளைக் காது கொடுத்துக் கேளுங்க. `பாரத மாதா’ங்கறீங்க... நதிகள்ல ஆரம்பிச்சு புனிதமானதுக்கெல்லாம் பெண்கள் பேரைவெச்சிருக்கீங்க. புதுசா தொழில் தொடங்கினா அம்மா பேரோ, மனைவி, சகோதரி பேரோவெக்கறீங்க. ஆனா வெளியில ஒரு பொண்ணை மட்டும் எப்படி வேற பார்வையில பார்க்க முடியுது... புனிதமா மதிக்காட்டியும் சக மனுஷியாவாவது பார்க்கப் பழகுங்க!


- ஐஸ்வர்யா, தனியார் பள்ளி ஊழியர். கோவை


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment