Monday, October 19, 2020

58 வயதில் சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் செல்ல முடியுமா?

கடந்த 1981-ம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தில் கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவர் சத்யதேவ் என்கிற பூரே. கீழமை நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள்தண்டனையை 37 ஆண்டுகள் கழித்து 2018-ம் ஆண்டு உறுதிசெய்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். நீதிமன்ற விசாரணையில், `குற்றம் நடைபெற்றபோது தனக்கு 18 வயதைவிடக் குறைவு. சிறார் நீதி வழங்கும் வாரியத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்’ என்று சத்யதேவ் தரப்பில் வாதாடப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம், ‘அவரது வழக்கு, சாதாரண நீதிமன்றத்தில் நடைபெற்று தண்டனை விதிக்கப்பட்டது சரி’ என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

‘1981-ல் குற்றம் நடைபெற்றபோது அவர் 18 வயதுக்குக் குறைவானவர்; அவருக்கு 2000-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இளம் சிறார் சட்டம் பொருந்தும். எனவே, அவரது தண்டனையை இளம் சிறாருக்கான நீதி வழங்கும் வாரியமே முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறி அவரது வழக்கை அலகாபாத் இளம் சிறார் நீதி வழங்கும் வாரியத்திடம் அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இளம் சிறார் வாரியத்தால் குற்றவாளி சத்யதேவுக்கு சிறைத் தண்டனையும் வழங்க முடியாது. 58 வயதான அவரைச் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்ப முடியாது. இதற்கிடையில் 40 ஆண்டுகள் கடந்துபோனதுதான் இந்திய நீதித்துறையின் சாதனை.

17 வயதில் குற்றமிழைத்து, 54 வயதில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் தோற்று, 58 வயதில் உச்ச நீதிமன்றம், மீண்டும் சிறார் நீதி வழங்கும் வாரியத்திடமே சத்யதேவ் வழக்கை ஒப்படைத்திருக்கிறது. என்னவொரு விநோதம்! இந்தக் குழப்பங்களை விளங்கிக்கொள்ள சிறார் தண்டனைக்கான சட்ட வரலாற்றைத் தெரிந்துக்கொள்வது அவசியம்.

1860-ல் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 82-ல், ‘ஏழு வயது சிறுவன் செய்த செயல் எதுவும் குற்றமாகக் கருதப்படாது; அதேசமயம், ஏழு முதல் 12 வயது வரை சிறுவன் செய்யும் செயல்களுக்கு, நீதிபதி அவர்களது முதிர்ச்சியின் தன்மையைச் சோதித்து தண்டனை அளிக்கலாம்’ என்று விதிக்கப்பட்டது.

`சிறுவர்கள் இழைக்கும் குற்றங்களுக்கு சிறையில் அடைக்கக் கூடாது; அவர்களைச் சீர்திருத்தி, சமூகத்தின் மையநீரோட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று வெகுகாலமாகச் சொல்லப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்டதுதான் 1986-ம் வருடத்திய இளம் சிறார் நீதிச் சட்டம். அந்தச் சட்டத்தில், குற்றமிழைத்த இளம் சிறார்களை நல்வழிப்படுத்துவதற்கும் மறுவாழ்வு அளிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது. `ஆண் சிறார்கள் எனில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள்’ என்றும், `பெண் சிறார்கள் எனில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்’ என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.


20.11.1989 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை குழந்தைகளுக்கான உரிமை மாநாட்டைக் கூட்டியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி உறுப்பு நாடுகள் அனைத்தும், குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டது. அந்தத் தீர்மானத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டது. அதன்படி 1985-ல் உருவாக்கப்பட்ட பீஜிங் விதிகள் மற்றும் 1990-ல் ஐக்கிய நாடுகளின் ‘உரிமை மறுக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கும் 1990 விதிகளி’ன்படி இந்திய நாடாளுமன்றத்தில் 2000-ம் ஆண்டில் இளம் சிறார்களுக்கான நீதிச் (கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தில் இளம் சிறார்கள் ‘குற்றவாளிகள்’ என்று அழைக்கப்படாமல், ‘சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள்’ என்றழைக்கப்படுகிறார்கள். அதில், இளம் சிறார் என்பதற்கான வரையறை ஆண், பெண் வித்தியாசமில்லாமல் 18 வயது நிரம்பாதவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர்கள்மீது வழக்கு தொடுத்தால், அதை விசாரிக்கும் அதிகாரம் இளம் சிறார்களுக்கு நீதி வழங்கும் வாரியங்கள் மூலம் அளிக்கப்பட்டது. அதில் நீதிபதி ஒருவருடன் சமூக ஆர்வலர் ஒருவரும் இருப்பார். வழக்கு முடிந்தவுடன் அவர்களுக்கு சிறைத்தண்டனை இல்லை. மாறாக, சிறப்பு இல்லத்துக்கு அனுப்பி, 18 வயது வரும்வரை அங்கு பயிற்சியளித்து, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஊத்தங் கரையைச் சேர்ந்த இரண்டு இளம் சிறார்கள்மீது பொடா குற்றம் ஜெயலலிதா ஆட்சியில் சுமத்தப்பட்டது. ஒருவேளை பகத் சிங், பிரபாகரன் என்று அவர்களின் பெயர்கள் இருந்ததால், வழக்கு தொடரப்பட்டிருக்கலாம். அவர்களை பொடா சட்டத்தில் மட்டுமே விசாரிக்க வேண்டுமென்று அரசு வாதாடியது. ‘பயங்கரவாத குற்றமிழைத்தவர் களுக்கு இளம் சிறார் சட்டம் பொருந்தாது’ என்றும் வலியுறுத்தினர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் அரசின் வாதத்தை நிராகரித்து, அவர்களை இளம் சிறார் நீதிமன்றங்கள் மூலம் மட்டுமே விசாரிக்க முடியுமென்று தீர்ப்பளித்தது.

பம்பாய் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியாக ஆக்கப்பட்ட அஜ்மல் கசாப், இளம் சிறார் சட்டத்தின் கீழ்தான் தண்டிக்கப்பட வேண்டுமென்று வாதாடப்பட்டதை நீதிமன்றங்கள் நிராகரித்தன. டெல்லி மாணவி நிர்பயா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரின் வயது 17. நடைமுறைச் சட்டங்களின்படி குற்றமிழைத்த இளம் சிறார்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டாலும், மூன்றாண்டுகளில் சீர்திருத்தப் பள்ளியைவிட்டு வெளியே வர வாய்ப்பு இருந்ததால், இளம் சிறார் சட்டத்தைத் திருத்தி, அந்தச் சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கும்படி போராட்டங்கள் வலுத்தன. அதன்படி சட்டம் திருத்தப்பட்டாலும், அந்தத் திருத்தம் எதிர்காலத்தில் நடக்கும் குற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி எந்தக் குற்றத்துக்கும் பின்தேதியிட்டு, சட்டமியற்றி தண்டிக்க முடியாது என்பதைப் போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ளவில்லை.


எனினும், நடைமுறையிலிருந்த குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கு ஆலோசனை வழங்க, முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. வர்மா குழு பரிந்துரையில், இளம் சிறார் சட்டத்தைத் திருத்துவதற்கான ஆலோசனை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனாலும், சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான இளம் சிறாருக்கும் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 2000-ம் வருடத்திய சட்டத்தை ரத்து செய்ய வேண்டினார். ஆனால், உச்ச நீதிமன்றம் அவரது வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

நிர்பயா வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும், அந்தக் குற்றத்தில் பங்குகொண்ட இளம் சிறார் ஒருவரை மட்டும் சீர்திருத்தப் பள்ளியில் மூன்றாண்டுகள் தீவிர கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது. மூன்றாண்டுகள் முடிந்த பிறகு அவர் சீர்திருத்தப்பள்ளியை விட்டு வெளியேறி, வேறு பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவல்துறையின் ரகசியப் பாதுகாப்புடன் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே வெகுஜன ஓட்டுகளைக் கவர்வதற்காக 2015-ம் ஆண்டு மத்திய அரசு சர்வதேசத் தீர்மானங்களைப் புறக்கணித்து புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. `16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் சிறாராக இருந்து, அவர் தீவிரமான குற்றமிழைப்பின் அவரையும் சாதாரண குற்றவாளியாகக் கருதி குற்றவியல் நீதிமன்றங்கள் முன் குற்றவாளியாக நிறுத்தலாம்’ என்கிறது அந்தச் சட்டம். எனினும், இளம் சிறார் என்று வாதாடும் ஒருவரை 1986-ம் வருட சட்டத்தின்படி தண்டிப்பதா அல்லது 2000-வது வருட சட்டத்தின்படி தண்டிப்பதா என்ற சட்டப் பிரச்னை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய சட்டத்தில் ஆண் சிறாருக்கு 16 வயது, பிந்தைய சட்டத்தில் 18 வயதும் நிர்ணயிக்கப்பட்டதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது.

2015 புதிய சட்டத்தில், ‘1986-ம் வருடச் சட்டத்தின்படி விசாரணை அல்லது மேல்முறையீடு எதிர்நோக்கியிருப்பவரின் சிறார் வயது வரம்பை 2000-வது வருட சட்டத்தின்படிதான் நிர்ணயிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. அப்படித்தான் இப்போது சத்ய தேவ்வின் வழக்கிலும் விநோத தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். ஆனால், சிறுவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாமா, அவர்கள் தவறிழைத்தால் தண்டனை என்ன? `கன்றைக் கொன்ற இளவரசனை தேர்க்காலிலிட்டு கொன்று தண்டனை வழங்கினார் மனுநீதி சோழன்’ என்பார்கள். அந்தக் கதையையொட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிலைகூட வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குழப்பங்கள்தான் தீர்ந்தபாடில்லை!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment