Sunday, October 11, 2020

எங்களுக்கு எது நடந்தாலும் அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு!

`கர்ணனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த வீடியோ எங்கே?’ என்பதை மையமாகவைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள் உடுமலைப்பேட்டை போலீஸார். கர்ணன் வேறு யாருமல்ல, தமிழகக் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர். கர்ணனைக் கடத்தியவர்களும் அ.தி.மு.க-வினர்தான். கடந்த மாதம் 23-ம் தேதி, அமைச்சரின் அலுவலகத்திலிருந்தே அவருடைய உதவியாளர் கடத்தப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கர்ணனைக் கடத்துவதற்கு உதவியாக இருந்த கோயில் பூசாரி ரகுநாத் தலைமறைவாக இருக்கிறார். போலீஸின் தேடுதல் ஒருபுறம், ரௌடிகளின் மிரட்டல் மறுபுறம் என அச்சத்தோடு பதுங்கி வாழும் ரகுநாத்திடம் பேசினோம்.


``கர்ணனை ஏன் கடத்த வேண்டும்?”


``நான் அ.தி.மு.க-வில் நீண்டகாலமாக உறுப்பினராக இருக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நின்றபோது, அவருக்காகத் தேர்தல் வேலைகள் பார்த்தேன். அந்தத் தேர்தலில் அதிக வாக்குகளை வாங்கிக்கொடுத்த என்னை அருகில் நிற்கவைத்து, புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக அமைச்சரின் உதவியாளராக இருக்கும் கர்ணனின் செயல்பாடுகள் எல்லைமீறிப் போய்விட்டன. அவரால் நான் உட்பட கட்சிக்காரர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி, ஏராளமான சொத்துகளை அவர் சேர்த்துவிட்டார். சில பெண்களை ஏமாற்றி, லட்சக்கணக்கில் பணம் பறித்தார் கர்ணன். அதை வெளிக்கொண்டு வரப்போய் நாங்கள் சிக்கிக்கொண்டோம்.”


ராதாகிருஷ்ணன்


``அமைச்சரிடம் உதவியாளராக இருப்பவர்கள், சம்பாதிக்க நினைப்பது இயல்புதானே..?”


``ஆமாம். ஆனால், கட்சியின் தொண்டர்களைக் காயப்படுத்திச் சம்பாதிப்பதைத்தான் ஏற்க முடியவில்லை. இதே கர்ணனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். 2017-ம் ஆண்டு, திருப்பூர் சட்டப் பணிகள் குழுவில், நேரடி நியமனத்தில் வேலை கொடுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. நான் கலப்புத் திருமணம் செய்தவன் என்பதால், என் மனைவி ஜீவிதாவை விண்ணப்பிக்க வைத்தேன். இதற்காக கர்ணனை நேரில் சந்தித்துப் பேசினேன். அவரோ, `இவனுக்கு இப்படியோர் அழகான மனைவியா?’ எனக் கிண்டலடித்துவிட்டு, தவறான கண்ணோட்டத்தில் என் மனைவியிடம் பேசினார். இதனால் ஏற்பட்ட மோதலில், என் மனைவிக்கு வேலை கிடைக்கவில்லை.


அதேபோல், என் அண்ணனின் மனைவியை சத்துணவு உதவியாளர் பணியில் சேர்ப்பதற்கு முயன்றேன். அதுவும் கிடைக்கவில்லை. அதே நேரம், லட்சக் கணக்கில் பணம் கொடுத்தவர் களுக்கெல்லாம் வேலை தேடிவந்தது. அமைச்சரிடம் கர்ணன் சேர்ந்த இந்த நான்கு ஆண்டுகளில் காந்திநகரில் எண்பது லட்ச ரூபாயில் வீடு வாங்கிவிட்டார். அமராவதி ஆற்றில் மணல் திருடி சம்பாதிக்கிறார். ரிசார்ட்டுகளுக்குப் பெண்களைக் கூட்டிப் போய் தவறான தொழில் செய்கிறார். அவருக்குப் பல வகைகளில் வருமானம் வருகிறது. நாங்கள் அவரைக் கடத்திய அன்றுகூட இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தோட்டத்தைக் கிரயம் செய்வதற்கான வேலைகளில் இருந்தார். இதுதவிர, 15 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்குவதற்காக 35 லட்ச ரூபாய் அட்வான்ஸும் கொடுத்திருந்தார். இதுநாள் வரையில், 15 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்து விட்டார். இதை எங்களால் ஏற்க முடியவில்லை.”


``கர்ணனைக் கடத்திய அன்று என்ன நடந்தது?”


``என்னைப்போலவே, பிரதீப் என்பவரும் கர்ணனால் பாதிக்கப்பட்டிருந்தார். எங்கள் திட்டத்துக்கு சுரேந்தர், சேக் அகமது சாகா, வினோத், செல்வகணபதி உள்ளிட்டவர்கள் உதவிசெய்ய முன்வந்தனர். எனவே, கர்ணனைக் கடத்தி வாக்குமூலமாக செல்போனில் பதிவுசெய்ய வேண்டும் எனத் திட்டமிட்டோம். அன்று காலை 11 மணியளவில் காரில் சென்றோம். இதில், சுரேந்தர் மட்டும் பைக்கில் எங்களைப் பின்தொடர்ந்து வந்தார். உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்குள் நுழைந்து, `வெளிய வாடா...’ எனக் கர்ணனைக் கூப்பிட்டோம். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் எங்களுடன் வந்துவிட்டார். அங்கிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள தோட்டத்துக்குக் கூட்டிச் சென்றோம். அங்கு போனதும், `நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் தர்றேன். என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க’ என்று அழுதார். `பணமெல்லாம் எதுவும் வேண்டாம். அமைச்சரோடு இருக்கறதால எந்தெந்த வழிகளில் வருமானம் வருது... அதை அப்படியே வீடியோவில் சொல்லு. பொய் சொன்னா காலி பண்ணிடுவோம்’ என மிரட்டினோம். உடனே பயந்துகொண்டு, இதுவரை செய்த அனைத்து சட்டவிரோத காரியங்களையும் விரிவாகச் சொன்னார். அவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துவிட்டு உடனே அனுப்பிவிட்டோம். அந்த வீடியோவை அமைச்சரிடம் காட்டுவது என முடிவெடுத்தோம். அதற்குள் போலீஸ் எங்களைத் தேடத் தொடங்கிவிட்டது.”


``அமைச்சருக்காகச் செய்தீர்கள் என்றால் ‘ஏன் நகைப் பறிப்பு, கொள்ளை வழக்கு’ பதிவுசெய்யப்பட்டது?”


``அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கர்ணனை நாங்கள் பணத்துக்காகக் கடத்தவில்லை. அவரைக் கடத்திய சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிரான கொங்குமண்டல சீனியர் ஒருவர், இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அமைச்சர் ராதாகிருஷ்ணனின் பெயரைக் கெடுக்கக் கிடைத்த வாய்ப்பாக இந்தச் சம்பவத்தை அவர் பயன்படுத்திக்கொண்டார்.”


கர்ணன் - ரகுநாத்

``யார் அந்த கொங்கு மண்டல சீனியர்?”


``பொள்ளாச்சி ஜெயராமன்தான். அவருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் முட்டல் மோதல் நீடித்துவருகிறது. அவர் சொல்லித்தான் எங்கள்மீது செய்யாத தவறுகளை யெல்லாம் சேர்த்து வழக்கு பதியப்பட்டதாகக் கருதுகிறோம். எங்களுக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் வருவதைக்கூட போலீஸ் தடுக்கிறது. என்னோடு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரும் சிறையில் இருக்கிறார்கள். கர்ணனைக் கூட்டிச்சென்ற தோட்டத்தின் உரிமையாளர் தேவராஜுலுவும் சிறையில் இருக்கிறார். கடந்த சில நாள்களாக என் மனைவியின் செல்போனைத் தொடர்புகொள்ளும் ரௌடிகள், `உன் புருஷன் எவ்வளவு நாள் தலைமறைவா இருப்பான்னு பார்க்குறோம். அவன் வெளிய வந்ததும் போட்டுத் தள்ளுவோம்’ என மிரட்டுகிறார்கள். நான் ஒரு சாதாரண கோயில் பூசாரி. எனக்குப் பெரிதாக எந்த வருமானமும் இல்லை. இப்படியெல்லாம் செய்வது எந்த வகையில் நியாயம்?”


``உதவியாளரின் தவறான செயல்பாடுகள் குறித்து அமைச்சரிடம் சொல்லலாம். அதைவிடுத்து, கடத்தியது சரியா?”


``நாங்கள் செய்தது தவறுதான். கர்ணனின் ஆட்டம் குறித்துப் பலமுறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். சிதம்பரசாமி என்ற கட்சிக்காரர், அமைச்சர் முன்னிலையிலேயே கர்ணனை அடித்தார். ஒருகட்டத்தில், கர்ணனின் செயல்பாடுகளைப் பொறுக்க முடியாமல்தான் கடத்தல் திட்டத்தைச் செயல்படுத்தினோம். எங்களிடம் கர்ணன் கொடுத்த வாக்குமூலம் அடங்கிய செல்போனை போலீஸார் பறிமுதல் செய்து விட்டனர். வேறு ஏதாவது வீடியோ இருக் கிறதா என்பதற்காக என்னை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கூலிப்படை இல்லை; இது எங்கள் தொழிலும் இல்லை.


ஊழல் செய்து சம்பாதித்தவர்களெல்லாம் நன்றாக இருக்கிறார்கள். எங்களுக்கு எது நடந்தாலும் அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், கர்ணனும், காவல்துறையும்தான் காரணம். எங்களுக்கு நியாயம் கேட்க யாராவது வர மாட்டார்களா எனக் கதறிக்கொண்டிருக்கிறோம். மணல் கடத்தல், பெண்களைவைத்து தொழில் நடத்துவது, வட்டிக்கு விடுவது போன்றவற்றைச் செய்வதற்கு இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது... இந்தச் சம்பவத்தைவைத்து நிறைய பேர் அரசியல் செய்கிறார்கள். எங்கள் பின்னணியில் யாரும் இல்லை. எங்கள் உயிர்களைப் பறித்துவிட முயல்கிறார்கள். இதே நிலைமை நீடித்தால் வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.”


பணம், சொத்து, பாலியல், கடத்தல், வாக்குமூலம், மிரட்டல், வழக்கு என விஷயம் விஸ்வரூபமெடுத்துச் செல்கிறது. ஆளும்கட்சி அமைச்சர் விவகாரம்... வில்லங்க வீடியோ வெளியாகுமா... உண்மை வெளிச்சத்துக்கு வருமா?


எஃப்.ஐ.ஆர் குளறுபடி!ரகுநாத்தின் வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். ``அமைச்சர்களும் உதவியாளர்களும் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஓர் உதாரணம். தொடக்கத்தில் ஆள்கடத்தல் வழக்காக மிகத் தாமதமாகத்தான் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த எஃப்.ஐ.ஆர் மூன்று நாள்கள் கழித்துத்தான் நீதிமன்ற நடுவருக்குப் போகிறது. இந்த மூன்று நாள்கள் காலதாமதம் ஏன்... எதைச் சரிசெய்வதற்காக இந்த தாமதத்தைச் செய்தார்கள்? மேலும், 449, 395 ஆகிய இரண்டு பிரிவுகளும் ஆயுள் தண்டனைக்குரிய குற்றங்கள். ஊழலை வெளிக்கொண்டுவர முயன்ற நபர்களை அமைச்சர் பாராட்டியிருக்க வேண்டும். மாறாக, உதவியாளரைக் காப்பாற்றும் நோக்கில், கட்சிக்காரர்கள் மீதே இப்படி இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது, குடும்பத்தை மிரட்டுவது போன்றவற்றை ஏற்க முடியாது. இதை அமைச்சரே முன்னின்று நடத்துவதுதான் கொடுமை. இதுநாள் வரையில் அந்த எஃப்.ஐ.ஆரை இணையதளத்தில் போலீஸார் பதிவேற்றவும் இல்லை என்பது சந்தேகத்துக்குரியது” என்றார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment