Friday, October 02, 2020

மீட்பு முகாம்களிலும் மீளாத துயரங்கள்...

‘வெந்த புண்ணுல முள்ளு குத்துனது மாதிரி’ என்றொரு பழமொழி உண்டு. கிட்டத்தட்ட அந்த வலியில்தான் இருக்கிறார்கள்... நீலகிரியில் மழைவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி, மீட்பு முகாமில் தங்கியிருக்கும் மக்கள்.


“தொடரும் காடழிப்பு, அடுத்தடுத்து முளைக்கும் கான்கிரீட் கட்டடங்கள், எஸ்டேட்டுகள் அமைப்பதற்காகச் சிதைக்கப்படும் குன்றுகள், அடுத்தடுத்த ஆக்கிரமிப்புகள்... என வசதியும் அதிகாரமும் படைத்தவர்கள் இயற்கைமீது தொடுக்கும் சூழல் போரின் விளைவுதான், நீலகிரியில் அடுத்தடுத்து ஏற்படும் இயற்கைச் சீற்றங்கள்” என எச்சரித்துவருகிறார்கள் சூழலியலாளர்கள். ஆனால், ஒவ்வோர் இயற்கைச் சீற்றத்தின்போதும் சிதைக்கப்படுவதென்னவோ, விளிம்புநிலையில் வாழும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரம்தான்.சமீபத்தில், நீலகிரியில் கொட்டித் தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். வீட்டையும் உடைமைகளையும் இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தவித்த கூலித் தொழிலாளர்களை மீட்டு, எமரால்டு பகுதியில் அமைந்திருக்கும் முகாமில் தங்க வைத்திருக்கிறது நீலகிரி மாவட்ட நிர்வாகம். ஆனால், ‘முகாம்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்’ என்ற செய்தி நமக்குக் கிடைக்க, அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் மீட்பு முகாமுக்குச் சென்றோம். அங்கு நாம் கண்ட காட்சிகள் அதிர்ச்சியாக இருந்தன.


சுழன்றடிக்கும் காற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்த தகரக்கூரைகள் முகாமில் ஆங்காங்கு விழுந்துகிடந்தன. முகாமிலுள்ள பல வீடுகளில் மேற்கூரையே இல்லை. வீட்டின் சுவர்களில் நீர் கோத்து, சொட்டுச் சொட்டாக உள்ளே வடிந்துகொண்டிருந்தது. வீடுகளுக்குள், ஈரத்தரையில் கம்பளியைப் போர்த்தியபடி, கோழிகளைப்போல உடலைக் குறுக்கிக்கொண்டு, குழந்தை குட்டிகளுடன் அடைந்துகிடந்தார்கள் அப்பாவி மக்கள். குளிர்காயக்கூடக் காய்ந்த விறகுகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.ரத்தத்தை உறையவைக்கும் குளிரில், ஈர விறகுகளைப் பற்றவைக்கப் போராடிக் கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் பேசினோம். “போன மழையில வீட்டோட செவுரு கண் முன்னாலயே சரிஞ்சிபோச்சு. புள்ளகுட்டிங்களைக் காப்பாத்துனா போதும்னு எல்லாத்தையும் இழுத்துக்கிட்டு நைட்டோட நைட்டா இங்கே யிருக்கிற பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டேன். உண்மையச் சொல்லணும்னா, அங்க எந்தக் குறையும் இல்லை. அதிகாரிங்கல்லாம் வந்து பார்த்துக் கிட்டாங்க. சோறு தண்ணிக்கும் கொறை இல்லை. அங்க வந்த அதிகாரிகள், ‘மழை கொறஞ்சதும் வீடுகட்டித் தர்றோம். அதுவரை முகாம்ல இருங்க’னு இந்த முகாமுக்கு அனுப்பினாங்க. போன வருஷம் மழை வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்கள தங்க வைக்கிறதுக்காக கட்டப்பட்ட முகாம் இது. புதுசாக் கட்டுன வீடுங்கதானேனு வந்தோம். ஆனா, இங்க வந்து பார்த்ததும், பதறிப்போனோம்... குழந்தை குட்டிகளைவெச்சு எப்படிக் காப்பாத்துவோம்னு குலைநடுங்கிப் போச்சு. செவுருலெல்லாம் தண்ணி கொப்பளிக்கிது. வீட்டுக்குள்ள இருக்கும்போதும் வெட்டவெளியில இருக்குற மாதிரிதான் தெரியுது. உள்ள நிக்கவே இடமில்லை, எங்கிட்டுப் படுக்கிறது... இங்க வந்து ரெண்டு மாசமாகுது. ஒரு நாள்கூட நிம்மதியா கண்ணை மூடித் தூங்கலை. ஒரு பிடிச் சோத்தைக்கூட ஒழுங்கா ஆக்கிச் சாப்பிடலை. கூரை பேர்ந்துடுமோ, செவுரு விழுந்துருமோனு பயத்துலதான் இருக்கோம். சின்னக் குழந்தைகளை நினைச்சாத்தான் ரொம்ப பயமா இருக்கு” என்றார்.


வீட்டை இழந்த ஊட்டி ஊராட்சி கவுன்சிலர் கண்ணன் என்பவரும் அந்த முகாமில் தங்கியிருந்தார். “பதினஞ்சு நாளா ஸ்கூல்லதான் தங்கியிருந்தோம். ‘ஸ்கூல் தொறக்கப் போறாங்க’னு இந்த முகாமுக்கு அனுப்பிவெச்சாங்க. 70 குடும்பங்க இங்க இருக்கோம். குடும்பத்துல எத்தனை பேர் இருந்தாலும் ஒரு குடும்பத்துக்கு ஒரு ரூம்தான் கொடுத்திருக்காங்க. அதுலயும் ஏகப்பட்ட பிரச்னை. மழையால அனுபவிச்ச வேதனையைவிட இங்க ரொம்ப வேதனையா இருக்கு. ஒடனடியா எங்களுக்கு நெரந்தர வீடு கட்டித் தந்தாத்தான் நிம்மதி” என்றார் கண்ணன்.


கண்ணன் - ஜனார்த்தனன்

மக்கள் நலச் செயற்பாட்டாளர் ‘ஊட்டி’ ஜனார்த்தனனிடம் பேசினோம். “மீட்பு முகாமை இந்த இடத்தில் கட்டியதே தவறு. இந்த மலை முகட்டில் மக்கள் வாழவே முடியாது. கடந்த ஆண்டு மழையால் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகுதான் இந்தத் தற்காலிக மீட்பு முகாம் கட்டப்பட்டது. ஒரு வீட்டின் திட்ட மதிப்பீடு 60,000 ரூபாய் என்ற கணக்கில் 150 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், கொஞ்சம்கூடத் தரமில்லை. தரமான பொருள்களைப் பயன்படுத்தாமல், கடமைக்குக் கட்டியிருக்கிறார்கள்” என்றார்.


நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் பேசினோம். “மக்கள் தற்போது தங்கியிருக்கும் இடம், தற்காலிக முகாம்தான். அந்த மக்களுக்கு நல்ல தரத்துடன் நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. விரைவில் தற்காலிக முகாமின் குறைபாடுகள் சரிசெய்யப்படும்” என்றார்.


மீட்பு முகாம், வதைமுகாம் ஆகிவிடக் கூடாது. இந்த மலைவாழ் மக்களுக்கு மனமிரங்குங்கள் அதிகாரிகளே!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment