Sunday, October 11, 2020

தி.மு.க-வே ஈ.வெ.ரா-வைத் திட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது!

“வேளாண் சட்டத் திருத்த மசோதா, பாபர் மசூதி தீர்ப்பு, ஹத்ராஸ் சம்பவம் என மத்திய அரசின் மீதான விமர்சனங்கள் பெருகிவரும் நிலையில், தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் திருப்பங்கள், பா.ஜ.க-வின் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்துப் பேச, தமிழக பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணனை அவரின் இல்லத்தில் சந்தித்தோம்...


“வரப்போகும் தேர்தல் எப்படியிருக்கும், பா.ஜ.க-வின் கூட்டணி யாரோடு?”


“தமிழகத்தின் வரலாற்றில் இந்தத் தேர்தல், திருப்புமுனை மிக்கதாக இருக்கப்போகிறது. கடந்த ஐம்பது வருடங்களாக, கருணாநிதியின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை ஒட்டித்தான் தேர்தல் இருக்கும். கருணாநிதிக்கு எதிராக வலிமை மிக்க தலைவர்களாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் இருந்துவந்தார்கள். தற்போது தமிழகத்தில், ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. நல்ல ஆளுமைகளைப் பார்த்து வாக்களித்த மக்கள், இந்த முறை நல்ல நிர்வாகம்கொண்ட கட்சி எது என்பதைப் பார்த்து வாக்களிக்கப்போகிறார்கள். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டணி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்துத் தேர்தல் நேரத்தில்தான் முடிவுசெய்ய முடியும்.”


“பா.ஜ.க கொண்டு வந்த ‘வேளாண் சட்ட மசோதா’வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றனவே...”


“இந்தச் சட்டங்கள் குறித்துத் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழகத்தில், அரசியல் கட்சியினர்தான் பெரும்பாலும் இடைத்தரகர்களாக இருக்கிறார்கள். தங்கள் தொழிலில் மண் விழுந்துவிடுமோ என்றுதான் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.”


“மத்திய அரசின் ‘ஒரே தேசம் ஒரே ரேஷன்’ திட்டத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றனவே..?”


“ஒரு திட்டத்தின் மீது எப்போதுமே பல்வேறு விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். கொரோனா வுக்கு முன்னர், ‘ஐயோ... வடமாநிலத் தொழிலாளர் களெல்லாம் இங்கு வந்துவிட்டார்களே...’ என்று கூறினார்கள். அதே தொழிலாளர்கள் வேலை யில்லாமல் சொந்த ஊர்களுக்குத் திரும்பியபோது, ‘ஐயோ பாவம்... இவர்கள் கஷ்டப்படுகிறார்களே...’ என்று பாவப்பட்டார்கள். அவர்கள் ஏன் சென்றார்கள்... அவர்களுக்கு இங்கு உணவுப் பாதுகாப்பு இல்லை; இங்கு ரேஷன் பொருள்கள் வாங்க முடியவில்லை. ஒரே ரேஷன் திட்டம் இருந்திருந்தால், அவர்கள் இங்கேயே உணவுப் பொருள்களை வாங்கியிருக்க முடியுமே... அனைத்தையும் குறைசொல்ல வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லையென்று சொன்னால், தமிழகத்தைக் கட்டமைத்திருக்க முடியுமா?” என்று கூறிய ஸ்டாலின், இன்று இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார். தமிழ்நாட்டைக் கட்டமைத்தவர் களுக்கு ஒரு வாய் உணவளிக்க மாட்டீர்களா... உங்களுக்கு வெட்கமாக இல்லையா... அரிசியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்?


“ `சி.பி.ஐ-யும் நீதிமன்றங்களும் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே..?”


“பாபர் மசூதி வழக்கு, பா.ஜ.க அரசு ஆட்சியிலிருந்தபோது போடப்பட்ட வழக்கு அல்ல. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கின் பெரும்பாலான விசாரணை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்க்கும் தி.மு.க., 2ஜி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என்று கூறுமா?”


“தமிழக பா.ஜ.க தலைவர் முருகனின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”


“அவர் இன்று, நேற்று கட்சிக்கு வந்தவரில்லை. அவரின் இளம் வயது முதலே எங்கள் சித்தாந்தங்களோடு இணைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களாகக் கட்சியில் இருக்கிறார். கட்சி குறித்து அனைத்தும் அறிந்தவர் அவர். இன்று, கட்சியில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறார். அவரின் சிந்தனையில் கலந்து, செயல்பாடுகளோடு பலரும் எங்கள் கட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்.”


திருப்பதி நாராயணன்

“பல்வேறு குற்றப் பின்னணிகொண்ட நபர்கள் பா.ஜ.க-வில் இணைந்துவருகிறார்களே?”


“இது குறித்து நாங்கள் கட்சியில் பேசியிருக்கிறோம். `இனி சேர்க்கப்படும் நபர்களைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும்’ என்று முருகனும் கூறியிருக்கிறார்.”


“ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தரப்பில் ஒட்டப்பட்ட ‘போஸ்டர்’, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?”


“ஒரு வினைக்கு எதிர்வினை என்பது தவறு. அந்த வினையும் தவறுதான். `ஹத்ராஸ் சம்பவத்துக்கு பா.ஜ.க-தான் காரணம்’ என்று சொல்ல, பதிலுக்கு `அதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்தான் காரணம்’ என்று போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுமே தவறுதான்!”


“ `தலித் சமூகத்திலிருந்து ஒருவரைத் தலைவராக்கி யிருக்கிறோம்’ என்று நீங்கள் கூறியதற்குப் பல விமர்சனங்கள் எழுந்தனவே..?”


“ ‘தலித் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை’ என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தாரே... அது தவறான விஷயமில்லையா? இந்தியாவிலேயே அதிக அளவு பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பதவியிலிருப்பது பா.ஜ.க-வில்தான். பட்டியலினத்தவர், பா.ஜ.க-வில் அகில இந்தியத் தலைவராக இருக்கிறார். இவ்வளவு சித்தாந்தம் பேசும் கம்யூனிஸ்ட்டுகளில் எத்தனை முதல்வர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்..? நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள்தானே... கேட்டால், `நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம்; பிராமணர்களை அல்ல’ என்பார்கள்.”


“பெரியார் பிறந்தநாளுக்கு எல்.முருகன் வாழ்த்து சொன்னதில் உங்களுக்கு என்ன முரண்பாடு?”


“ஈ.வெ.ரா-வின் கருத்துகள் இறைமறுப்பாக இருப்பதில் தவறில்லை. ஆனால், அவர் கடவுளை நிந்தித்தார், தமிழர்களை நிந்தித்தார், தமிழ் நாட்டையே நிந்தித்தார். யாரையுமே நான் தனிநபர் விமர்சனம் செய்ய மாட்டேன். ஆனால், என் நம்பிக்கைகளைச் சிதைக்குமாறு நடந்துகொண்டால், உறுதியாக அதற்கு எதிர்வினை செய்வேன். அப்படித்தான் ஈ.வெ.ரா விஷயத்தில் நடந்தது.’’


“அப்படியானால், பெரியார் பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறியது அரசியல் உத்தியா?”


“அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது. தி.மு.க-வே ஈ.வெ.ரா-வைத் திட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது. ஈ.வெ.ரா-வை அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, வன்மமாகப் பேசி, கொச்சைப் படுத்திய இரு அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால் ஒருவர் அண்ணாதுரை மற்றொருவர் கருணாநிதி. பா.ஜ.க-விலுள்ள யாரும் அப்படிச் செய்ததில்லை. அச்சில் கோக்க முடியாத வார்த்தைகளையெல்லாம் கொண்டு ஈ.வெ.ரா-வைப் பேசியவர்கள் அவர்கள். எனக்கு ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கலைஞர் மீதெல்லாம் எந்தப் பிரச்னையும் கிடையாது. கொள்கை முரண்பாடுகளைத்தான் எதிர்க்கிறோம்!


“பா.ஜ.க-வின் கூட்டணியில் ரஜினி இடம்பெறுவாரா?”


“சொல்ல முடியாது. தேர்தல் நெருங்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரஜினி கட்சி ஆரம்பித்தால், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை கண்டிப்பாக மாறும்.”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment