Thursday, October 15, 2020

வன்கொடுமை... வாயிலும் மூக்கிலும் மின்சாரம்!.

கொடூரமாகக் கொல்லப்பட்ட சிறுமி... நீதி, அநீதியானது ஏன்?


ஒருவேளை ஆன்மா என்பது உண்மையாக இருந்தால், வானத்திலிருந்து கதறி அழுதிருப்பார் அந்தச் சிறுமி. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வாயிலும் மூக்கிலும் மின்சாரம் செலுத்திக் கொடூரமாகக் கொல்லப்பட்ட அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு சிறுமியின் குடும்பம் மட்டுமல்லாமல், பலரும் கொந்தளிக்கிறார்கள். ஆம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் சிறுவனை விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். இந்த அநீதிக்குக் காரணம், காவல்துறையின் படு அலட்சியம்!


கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கிராமம் ஒன்றில், வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சப்பட்டு, உடல் முழுவதும் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணை செய்த வடமதுரை போலீஸார், சிறுமியின் எதிர் வீட்டில் வசிக்கும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததையும், மின்சாரம் பாய்ச்சிக் கொன்றதையும் அவன் வாக்குமூலமாக அளித்ததைத் தொடர்ந்து அவனைக் கைதுசெய்தது போலீஸ்.


திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சிறுவன் விடுதலை செய்யப்பட்டதாகத் தீர்ப்பு. இதுதான், சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமியின் தந்தை முடிதிருத்தும் தொழிலாளி என்பதால், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ததுடன், மாநிலம் முழுவதும் போராட்டங்களையும் நடத்தினர்.


தீர்ப்பு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத சிறுமியின் தாயிடம் பேசினோம். “அன்னிக்கு வேலைக்குப் போயிட்டு, மதியம் வீட்டுக்கு வந்தப்போ கதவு திறந்து கிடந்துச்சு. உள்ளே பார்த்தா, எம்மவ தரையில கிடந்தா. அவ போட்டிருந்த சட்டையும் பாவாடையும் ரத்தக்கறையோட உடம்பு மேல கிடந்துச்சு. வாயில, மூக்குல வயர் இருந்துச்சு... மாரு, உடம்பெல்லாம் நகக்கீறலா இருந்துச்சு. எம்புள்ளையை அந்தக் கோலத்துல பார்த்ததும் மயங்கி விழுந்துட்டேன்... பெத்த புள்ளையை அந்தக் கோலத்துலயா நான் பார்க்கணும்...” என்றவர் அதைச் சொல்லும்போதே கதறியழத் தொடங்கினார். அவரைத் தேற்றிப் பேச வைத்தோம்.


“அப்பவே போலீஸ் சரியா விசாரிக்கலை. அதனால, சாலைமறியல் செஞ்சோம். அதுக்கப்புறம்தான், மோப்ப நாயைக் கூட்டிட்டு வந்தாங்க. அந்த நாய், எதிர் வீட்டுக்குள்ள போச்சு. அங்கிருந்த பீரோவுக்குள்ள இருந்து ரத்தக்கறையோட சட்டையை எடுத்தாங்க. அப்புறம்தான் அந்தப் படுபாவியைப் பிடிச்சாங்க. அவனே செஞ்ச தப்பையெல்லாம் ஒப்புக்கிட்டான். ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே போலீஸ்காரங்க எங்களைத்தான் மிரட்டிக்கிட்டே இருந்தாங்க. எம்புள்ளையைச் சீரழிச்சவங்களுக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும்னு இருந்தோம். அதுலயும் மண்ணு விழுந்துருச்சு’’ என்று பொங்கி அழுதார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்த விஷயத்தைக் கையிலெடுத்துப் போராடிவருகிறது. சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ராணி கோபம் பொங்கப் பேசினார். ‘‘சம்பவம் நடந்து மூணு நாளாகியும் வடமதுரை போலீஸ்காரங்க கொலை வழக்கா பதிவு செய்யலை. `சந்தேக மரணம்’னு முடிக்கப் பார்த்தாங்க. அந்தக் குழந்தையோட பெற்றோரை போலீஸ்காரங்க மிரட்டினது எங்களுக்குத் தெரிஞ்சதும், வடமதுரையில போராட்டம் நடத்தினோம். அதுக்கப்புறம் அந்தப் பையனையும், அவனோட நண்பர்கள் ரெண்டு பேரையும் போலீஸ்காரங்க பிடிச்சாங்க. ஆனா, அந்தப் பையன் மேல மட்டும் கேஸைப் போட்டுட்டு, மீதி ரெண்டு பேரையும் விட்டுட்டாங்க. இப்போ குற்றம்சாட்டப்பட்ட அந்தப் பையனும் விடுதலையாகிட்டான். அந்தப் பிஞ்சோட கொலைக்கு நீதி கிடைக்கிற வரைக்கும் எங்க போராட்டம் தொடரும்’’ என்றார் உறுதியாக.


இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி, ‘‘விசாரணை அதிகாரியோட மெத்தனத்தாலதான் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை யாகியிருக்கார். விசாரணையின் போக்கை உயரதிகாரிகளும் ஆய்வு செய்யத் தவறிட்டாங்க. அரசு வழக்கறிஞரும் குற்றப்பத்திரிகையில் இருக்கும் தவறுகளைக் கண்டுபிடிச்சு, குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர முயற்சி எடுக்கலை. 12 வயசு சிறுமியை இவ்வளவு கொடூரமா சிதைச்சிருக்காங்க. ஆனா, தண்டனை வாங்கித் தர்ற அதிகாரத்துல இருக்குற யாருமே கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாம செயல்பட்டிருக்குறது வேதனையா இருக்கு. நீதிமன்றங்களை மக்கள் மலைபோல நம்புறதால, எக்காரணம் கொண்டும் நீதி மறுக்கப்படக் கூடாது’’ என்றார் ஆவேசமாக!


மனித உரிமை ஆர்வலரான ஹென்றி டிபேன், “பாலியல் கொலை வழக்குகள்ல நேரடி சாட்சிகள் இல்லைன்னாலும்கூட, மோப்ப நாய் ஆதாரம், டி.என்.ஏ ரிப்போர்ட், காவல்துறையால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைவெச்சு நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும். ஆனா, ஏன் விடுதலை செஞ்சாங்கன்னு தெரியலை’’ என்றார் கவலையுடன்.


திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யான முத்துசாமியோ, ‘‘வழக்கை மேல்முறையீடு செய்யவிருக்கிறோம்’’ என்றார் சுருக்கமாக. இதற்கிடையே, “சிறுமியின் வழக்கை அரசே மேல்முறையீடு செய்யும்’’ என்று அறிவித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்.


கொலையைவிடவும் வலிக்கிறது தீர்ப்பு!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment