Monday, October 19, 2020

லவ் ஜிகாத்தை எதிர்த்து டாடாவைக் குறிவைத்த இந்துத்துவ ஆர்மி!

ரூபாய் 1,500 கோடி. இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாள்களிலேயே கொரோனா நிவாரணத்துக்காக டாடா நிறுவனங்களும், டாடா அறக்கட்டளையும் கொடுத்த நன்கொடை இது. வழக்கமான பிரதமர் நிவாரண நிதியை ஒதுக்கிவைத்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி புதிதாக உருவாக்கிய ‘பிஎம் கேர்ஸ்’ கணக்கு பற்றிப் பல சர்ச்சைகள் எழுந்தபோதும், தயக்கமே இல்லாமல் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா இந்த நன்கொடையை அளித்தார்.


அப்போது வலதுசாரி சிந்தனையாளர்களும், இந்துத்துவ ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் டாடாவைக் கொண்டாடி னார்கள். ‘தேசபக்தியுடன் நன்கொடை அளித்த டாடாவைப் போற்றுவோம். இனி டாடா தயாரிப்புகளையே வாங்குவோம்’ என வெறித்தனமாக மீம்களை ஷேர் செய்தார்கள்.


ஆறே மாதங்களில் அதே ஆட்களே ‘டாடா நிறுவனத்தைப் புறக்கணிப்போம்’ என ஹேஷ்டேக் போட்டு வெறுப்பைப் பரப்புவார்கள் என்று ரத்தன் டாடா எதிர்பார்த்திருக்கமாட்டார். வெறுப்புக்குக் காரணம், ஒரு விளம்பரம்.


ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் ஒரு நிறுவனம் டைட்டன். வாட்ச் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இது, பிறகு பல்வேறு துறைகளிலும் தடம் பதித்தது. தனிஷ்க் ஜுவல்லரி அவற்றில் ஒன்று. இன்று டைட்டன் நிறுவனத்தின் 80 சதவிகித வருமானத்தைத் தருவது தனிஷ்க் ஜுவல்லரியே! இந்தியா முழுக்க இதன் ஷோரூம்கள் உள்ளன.


கொரோனா பொருளாதாரச் சூழலாலும், தங்கம் விலை உயர்வாலும், நகை விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டது. இந்தப் பண்டிகை சீஸனில் நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜுவல்லரி துறையினர் பல முயற்சிகளைச் செய்கின்றனர். ‘ஏகத்துவம்’ என்ற பெயரில் புதிய டிசைன்களை அறிமுகம் செய்து தனிஷ்க்கும் களத்தில் இறங்கியது. ‘வெவ்வேறு சூழலில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து, எந்த நெருக்கடியையும் கடக்கும் வல்லமை பெற்ற நாடு இந்தியா’ என ஒரு கான்செப்ட் விளம்பரம் எடுத்தார்கள். 43 நொடிகள் ஓடும் அந்த விளம்பரத்தில், இஸ்லாமியக் குடும்பம் ஒன்றில் இந்து மருமகளுக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு கொண்டாடுகிறார்கள். ‘‘உங்கள் வீட்டில் இதெல்லாம் வழக்கம் இல்லையே...’’ என ஆச்சர்யத்துடன் கேட்கிறார் மருமகள். ‘‘மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எல்லாக் குடும்பங்களிலும் மரபுதானே!’’ என்று சொல்லி அணைத்துக்கொள்கிறார் மாமியார்.


சுஷ்மா ஸ்வராஜ்

இந்த விளம்பரம் வெளியானதுமே, ‘இந்துப் பெண்களைக் கடத்திச் சென்று, இஸ்லாமியர்கள் திருமணம் செய்யும் லவ் ஜிகாத்தை இது ஆதரிக்கிறது’ என்று சிலர் தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து #BoycottTanishq என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.


‘அது என்ன முஸ்லிம் குடும்பத்தில் இந்து மருமகள்... ஓர் இந்துக் குடும்பத்தில் முஸ்லிம் மருமகளைக் காட்ட மாட்டீர்களா?’ என்று கேம்சந்த் சர்மா என்ற பி.ஜே.பி பிரமுகர் கேட்டி ருந்தார். ‘அப்படிக் காட்டியிருந்தால் அமைதியாக இருப்பீர்களா... ஓர் இந்துக் குடும்பத்தில் இஸ்லாமிய மரபுகளைப் பின்பற்றுவதாகக் காட்டியிருந்தால் இதைவிட அதிகமாகப் பொங்கியிருப்பீர்கள்’ என அவருக்கு பதிலடி கொடுத்தார் இன்னொருவர். இந்துக் குடும்பங்களில் வாழ்க்கைப்பட்ட இஸ்லாமியப் பெண்கள் சிலர், தங்கள் திருமணப் படங்களைப் பதிவிட்டு தனிஷ்க் ஜுவல்லரிக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.


எனினும், உடனே விளம்பரத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது தனிஷ்க் ஜுவல்லரி. அக்டோபர் 13-ம் தேதி, ‘விளம்பரத்தின் நோக்கம் திசைமாறி, தவறுதலாக உணர்ச்சிகளைத் தூண்டியதால் வருந்துகிறோம். எங்கள் ஊழியர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஷோரூம் பணியாளர்கள் நல்வாழ்வை மனதில் கொண்டு விளம்பரத்தைத் திரும்பப் பெறுகிறோம்’ என்று அறிக்கை வெளியிட்டது.


ஆனாலும் எதிர்ப்புகள் நிற்கவில்லை. ‘விளம்பரத்தை அகற்றியதுடன் விடக் கூடாது. அதை உருவாக்கியவர்களை நிறுவனத்திலிருந்து நீக்க வேண்டும்’ என அடுத்த கோரிக்கை எழுந்தது. தனிஷ்க் நிறுவனத்தின் பிராண்ட் மேனேஜர் மன்சூர் கான் என்பவரின் போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரியைச் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக் கானவர்கள் ஷேர் செய்து, ‘இவர்தான் இந்த விளம்பரத்துக்கு மூளையாக இருந்தவர். இனி என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். தொடர் மிரட்டல் களால் அவர் தலைமறைவாகிவிட்டார்.


பகத்சிங் கோஷ்யாரி

இன்னொரு பக்கம், ‘தனிஷ்க் ஷோரூம்களை மூன்று மாதங்களுக்கு மூட வேண்டும்’ என்று சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். ‘தனிஷ்க் என்ன... ஒட்டுமொத்த டாடா குழுமத்தையே புறக்கணிப்போம்’ என்று சிலர் கிளம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு தனிஷ்க் ஷோரூமில் சிலர் போய் மிரட்டியதால், மன்னிப்பு கோரும் அறிவிப்பை அந்த ஷோரூம் மேனேஜர் வாசலில் வைத்தார்.


‘வியாபாரத்துக்காக மதத்தைப் பயன்படுத்தும் போக்கை இனியும் தொடரவிடக் கூடாது’ என இந்துத்துவ ஆதரவாளர்கள் முழக்கமிட, ‘மிரட்டலுக்கு தனிஷ்க் நிறுவனம் அடிபணியக் கூடாது’ என இதற்கு எதிர்ப்புகளும் அதிகம் கிளம்பின. இரண்டு தரப்பினருமே, ‘ரத்தன் டாடா மௌனம் கலைத்து இது குறித்துப் பேச வேண்டும்’ என்கின்றனர்.


Advertising Standards Council of India என்பதுதான் இந்தியாவில் விளம்பரங்களைக் கண்காணிக்கும் அமைப்பு. அதற்கும் புகார் செய்திருக்கின்றனர். அது, ‘வழக்கறிஞர்கள், தொழில்துறையினர், நுகர்வோர் அமைப்பினர், விளம்பர நிபுணர்கள் என்று பலர் அடங்கிய சுயேச்சையான குழுவைவைத்து விளம்பரத்தை ஆய்வு செய்தோம். இதில் ஆட்சேபகரமாகவோ, சட்ட விரோதமாகவோ, தரக்குறைவாகவோ எதுவுமே இல்லை’ என்று சொல்லிவிட்டது.


கடந்த ஆண்டு ஹோலி பண்டிகை நேரத்தில் சர்ஃப் எக்ஸெல் ஒரு விளம்பரம் வெளியிட்டது. உடை முழுக்க வண்ணங்கள் பூசியிருக்கும் சிறுமி, தன் சைக்கிளில் ஓர் இஸ்லாமியச் சிறுவனை அழைத்துச் செல்வதுபோல காட்சி. அதையும் ‘லவ் ஜிகாத்’ எனக் கண்டித்தார்கள். விளம்பரம் நீக்கப்பட்டது.


ஓர் இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்ட இந்துப் பெண் ஒருவர், தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கச் சென்றபோது மோசமாக நடத்தப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் புகார் செய்தார். சுஷ்மா உடனே நடவடிக்கை எடுத்தார். அந்த அதிகாரி மாற்றப்பட்டார். அப்போது சுஷ்மாவை அவரின் சொந்தக் கட்சிக்காரர்களே காய்ச்சி எடுத்தனர்.திரைப்படங்கள், விளம்பரங்கள், புத்தகங்கள், பேச்சுகள் என அனைத்திலும் ஏதோ ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு எதிர்க்கும் சகிப்புத்தன்மையற்ற சமூகமாக மாறிவருகிறோம். இதைச் செய்வது சமூக வலைதளங்களில் புழங்கும் சராசரி மனிதர்கள் மட்டுமல்ல. சில நாள்களுக்கு முன்னர் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஒரு கடிதம் எழுதியிருந்தார். கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்கும் கோயில்களைத் திறக்கச் சொல்லும் கடிதம் அது. ‘முன்பு இந்துத்துவ நம்பிக்கைகொண்டிருந்த நீங்கள் திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா?’ என்று நக்கலும் குத்தலுமாக நீளும் கடிதம் அது. கவர்னர் என்ற பதவியின் மாண்பையே குலைக்கும் வாசகங்கள். எல்லோருமே அதைக் கண்டித்தனர். மத்திய அரசு வழக்கம்போல மௌனம் காத்தது.


‘சகோதரத்துவம்’, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ போன்றவை கெட்ட வார்த்தைகள் ஆகிவிட்ட புதிய இந்தியாவை உருவாக்கிவைத்திருக்கிறோம்.


தமிழக அரசுக்கும் பங்கு இருக்கிறது!


டாடா குழுமம் ஒரு பங்குதாரருடன் சேர்ந்தே டைட்டன் நிறுவனத்தைத் தொடங்கியது. அந்தப் பங்குதாரர், தமிழக அரசுதான். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் எனப்படும் ‘டிட்கோ’, தொழில் பங்குதாரராக டாடாவுடன் இணைந்திருக்கிறது. டைட்டன் நிறுவனத்தை நிர்வகிப்பது 11 இயக்குநர்கள்கொண்ட குழு. தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தமே டைட்டன் நிறுவனத்துக்குத் தலைவராக இருக்கிறார். டிட்கோ தலைவர் காகர்லா உஷா, தொழில்துறை கூடுதல் செயலாளர் அருண் ராய் ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டைட்டன் இயக்குநர்கள் குழுவில் இருக்கிறார்கள். அதனால்தான் கனிமொழி, ‘இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment