Friday, October 02, 2020

பா.ம.க-விடம் வாக்குச்சுத்தம் இல்லை! - வெடிக்கிறார் வேல்முருகன்

‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ நிறுவனத் தலைவரான தி.வேல்முருகனிடம் புதிய வேளாண்மைச் சட்டங்கள், தமிழர்களுக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்புகள், டோல்கேட் கட்டண விவகாரங்கள் எனச் சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்.


‘‘புதிய வேளாண்மை சட்டங்களால் ‘இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைந்து, விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்’ என்று மத்திய அரசு கூறுகிறது. அதில் என்ன பிரச்னை இருப்பதாக நினைக்கிறீர்கள்?”


‘‘விவசாயம் செய்யாத, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தான் இப்போது இருக்கும் இடைத்தரகர்கள். அவர்களை ஒழித்துவிட்டு அதானி, அம்பானி போன்றவர்களை இடைத்தரகர்களாக மாற்றக்கூடியதுதான் இந்தப் புதியச் சட்டம். அதுதான் பிரச்னை. அதனால்தான் எதிர்க்கிறோம்.’’


‘‘தமிழகத்தில் அடிமட்டப் பணிகளில்தான் பெரும்பாலான வெளிமாநிலத்தினர் வேலை செய்கிறார்கள். தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் அதையும் நீங்கள் எதிர்ப்பது சரியா?’’


‘‘கொத்தனார், சித்தாள் போன்ற சாதாரண வேலைகளையும் இத்தனை நாள்களாக இங்குள்ள மக்கள்தான் செய்துகொண்டிருந்தார்கள். வெளிமாநிலத் தொழிலாளர்களால், அவர்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறதா... இல்லையா? வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் இங்கு வந்து குடியேறும்போது மொழித் திணிப்பு, மொழிக்கலப்பு ஏற்படுகின்றன. உடையில் தொடங்கி நம் பண்டிகைகள் வரை பண்பாடுகள் சிதைவடைகின்றன. நம் தனித்த அடையாளங்களைச் சிதைக்கிற படையெடுப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.’’


‘‘அப்படியானால், தமிழர்களும் வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லாமல், இங்கிருந்தே பண்பாட்டைக் காக்க வேண்டும் என்கிறீர்களா?’’


‘‘அப்படி நான் சொல்லவேயில்லை. கடல் கடந்து வணிகம் செய்த பெருமைக்குரியவர்கள் நம் முன்னோர்கள். அதேபோல், கல்வி - பணிச் சூழலுக்காக நமது இளைஞர்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று வெற்றிக்கொடி நாட்டலாம். தமிழர்களும் ஈழத்தமிழர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் நம் பண்பாட்டுக் கூறுகளை மாறாமல் பாதுகாத்துவருகின்றனர். இப்படி நம் பண்பாட்டைக் காக்க வேண்டும் என்ற அக்கறையில்தான் குரல் கொடுக்கிறோம்.’’


‘‘உங்களது ‘தமிழர் வேலை தமிழருக்கே’ என்ற கோரிக்கையைப்போலவே, பிற மாநிலத்தினரும் குரல் எழுப்பினால் அங்குள்ள தமிழர்களின் நிலை என்னவாகும்?’’


‘‘எங்கள் கோரிக்கையின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள். அந்தந்த மாநிலங்கள், அந்தந்த மாநில மக்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். மாநில அரசுப் பணிகளில் 100 சதவிகிதமும், மத்திய அரசுப் பணிகளில் 90 சதவிகிதமும், தனியார் துறைகளில் 80 சதவிகிதமும் சொந்த மாநிலத்தினருக்கு உருவாக்கிக் கொடுத்தால் எந்த மாநிலத்திலும் பிரச்னையே உருவாகாது. தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில் திட்டமிட்டே வட இந்தியர் களைப் புகுத்தும்போது நாங்கள் அதை எதிர்க்கிறோம்.’’‘‘மத்திய அரசுப் பணியிடங் களுக்கான தேர்வுகளில் தமிழக இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் பங்கேற்கச் செய்வதை விட்டுவிட்டு, மத்திய அரசைக் குறைகூறுவது நியாயமா?’’


‘‘சமீபத்தில் நடைபெற்ற யூ.பி.எஸ்.சி மற்றும் ரயில்வே தேர்வுகளில்கூட தமிழில் வரும் விண்ணப்பங்களைத் திட்டமிட்டே அனுமதி மறுத்திருக்கிறார்கள். தேர்வு கமிட்டிகளிலும் வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் பாகுபாடு பார்க்கப்படுகிறது. தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. மாணவர்கள் காப்பியடித்து எழுதுவதை சில மாநிலங்களே அனுமதித் திருக்கின்றன. இது குறித்து நான் தொடர்ந்த வழக்கின்பேரில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.’’


‘‘டோல்கேட்களில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விசிட்டிங் கார்டுகளைக் காண்பித்தால், கட்டணமின்றி வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனவே... இதற்காகத்தான் போராடினீர்களா?’’


(சிரிக்கிறார்...) ‘‘அப்படியில்லை... உள்ளூர் மக்களின் உரிமைகளை, டோல்கேட் நிர்வாகத்திடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடிப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதுதான் உண்மை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளிலேயே, ‘அந்தந்த மாவட்டத்திலுள்ள உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டண விதிவிலக்கு கொடுக்க வேண்டும்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது.”


“ஆனால், தற்போதைய டோல்கேட் கட்டண உயர்வுக்கு எதிராக அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டு, அமைதியாகிவிட்டீர்களே..?’’


“இது உண்மையில்லை. கட்டணம் உயர்த்தப்பட்ட டோல்கேட் பகுதிகளில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதற்கான புகைப்படங்களும் இருக்கின்றன. டோல்கேட் போராட்டங்களைவைத்து, ஊடகங்கள் எங்களை வன்முறையாளர்கள்போலச் சித்திரிப் பதால், ஜனநாயகரீதியாகப் போராட்டங்களை வடிவமைத்திருக்கிறோம். தவிர, இது கொரோனா காலகட்டம் என்பதால், ஆயிரக்கணக் கானவர்களாகத் திரளாமல் எண்பது பேர், நூறு பேர் என தனிமனித இடைவெளியுடன் போராடினோம்.’’


‘‘வருகிற சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ன?’’


‘‘பா.ம.க இருக்கும் கூட்டணியில் நாங்கள் பங்குபெறுவதோ, அவர்களுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதோ மிகவும் கஷ்டம். நாங்கள் வளரக் கூடாது, கிராமங்களில் எங்கள் கட்சிக்கொடி ஏறக் கூடாது என்று பல்வேறு துன்பங்களையும் வழக்குகளையும் கொடுத்தவர்கள் அவர்கள். எனவே, எங்கள் தொண்டர்களும், பா.ம.க தொண்டர்களும் இணக்கமாகத் தேர்தலைச் சந்திக்கும் சூழலே இல்லை.’’


‘‘ `பா.ம.க பங்குபெறும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற வாய்ப்பில்லை’ என்கிறார் திருமாவளவன். நீங்களும் திருமாவும் ஒதுக்கிவைக்கும் அளவுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டது பா.ம.க?’’


‘‘பா.ம.க-விடம் வாக்குச்சுத்தம் இல்லை. ‘எடப்பாடிக்கு பட்ஜெட் என்றால் என்னவென்று தெரியுமா, டயர் நக்கிகள், ஓட்டுக்கேட்டு வந்தால் மக்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்’ என்றெல்லாம் பேசிவிட்டு, அதே அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து, விருந்து பரிமாறி நட்பு பாராட்டுகிறார்கள். இந்த அநாகரிக அரசியலால்தான் அவர்களை ஒதுக்குகிறோம்!”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment