Tuesday, October 13, 2020

சொந்த நாட்டுலயே அகதியா வாழுறோம்! - குடிநீர், மின்சாரமின்றி தவிக்கும் குடும்பங்கள்!

தனியார் சர்க்கரை ஆலையின் ஜப்தி நடவடிக்கை…


பாம்பு, தேள் என விஷ ஜந்துக்கள் உலவுகிற அச்சமூட்டும் இருட்டுப் பகுதியில், குடிநீரும் மின்சாரமும் இன்றி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, 40 குடும்பங்கள் கடலூர் மாவட்டம் இறையூரில் ‘கற்கால’ வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். ஏன்..?


கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தை அடுத்த இறையூரில் ‘திரு ஆரூரான்’ குழுமத்துக்குச் சொந்தமான ‘ஸ்ரீஅம்பிகா’ எனும் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கிவந்தது. பல்வேறு நிர்வாகக் கோளாறுகளால் கடந்த 2018-ம் ஆண்டு அந்த ஆலை மூடப்பட்டது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்; ஆலைக்குடியிருப்பில் வசித்துவந்த 100 நிரந்தரத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. 663.22 கோடி ரூபாய் கடன் தொகையை ஆலைத் தரப்பு திருப்பிச் செலுத்தாததால், ஆலை மற்றும் அதற்குச் சொந்தமான சொத்துகளைக் கடந்த 2019 செப்டம்பர் மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, ஆந்திர வங்கி உள்ளிட்ட 10 வங்கிகள் கையகப்படுத்தின.அன்றிலிருந்து ஆலைக் குடியிருப்புகளுக்குக் குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே சம்பளம் வராமல், சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த அந்தத் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையால் நொடிந்துபோனார்கள். இது குறித்து 21.08.2019 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ‘மூடப்பட்ட சர்க்கரை ஆலை... முடங்கிப்போன விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்க்கை’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். ஒரு வருடம் கடந்தநிலையில் அந்தத் தொழிலாளர்களின் தற்போதைய நிலையை அறிய நேரில் சென்றோம். ஆலையின் பிரதான வாயிலிலிருந்து 600 மீட்டர் தூரம்... கும்மிருட்டு... புதர்மண்டிய சாலையைக் கடந்து குடியிருப்புப் பகுதியை அடைந்தோம்.


பழுப்பேறிய ஒற்றை குண்டு பல்பு ஒன்று 30 அடி உயர மின் கம்பத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. “கீழ பார்த்து வாங்க சார்... பாம்பு, தேளுங்கல்லாம் இங்கன சாதாரணமா கெடக்கும்” என்று டார்ச் லைட்டை அடித்து நம்மை அழைத்துச் சென்றார்கள். அவர்களிடம் பேசத் தொடங்கிய சில விநாடிகளிலேயே, கொடிய விஷம்கொண்ட நட்டுவாக்காலி ஒன்று நமது கால்களுக்கு கீழே ஊர்ந்தது. அதை அடித்துப் போட்டுவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார் தொழிலாளி சகாயத்தின் மனைவி ரீத்தா. “என் வீட்டுக்காரர் நிரந்தரத் தொழிலாளியா இந்த ஆலையில இருந்தாரு. 2017-ம் வருஷத்துலருந்து அவரு வேலை செஞ்சதுக்கு சம்பளமும் குடுக்கலை; செட்டில்மென்ட்டும் குடுக்கலை. போன வருஷம் என் வீட்டுக்காரரு செத்துட்டாரு. 21 வருஷம் இங்கன வாழ்ந்துட்டேன். பேங்க்காரங்க ஆலையை எடுத்துக் கிட்டதும் எங்களை காலி பண்ணச் சொன்னாங்க. ‘இந்த நிலைமையில நாங்க எங்க போக முடியும்’னு கேட்டதுக்குத்தான் ஒரு வருஷமா தண்ணியையும் கரன்ட்டையும் நிறுத்தி வெச்சுருக்காங்க. சுத்தியும் புதர் மண்டிப்போச்சு... பாம்பு, தேளுனு அங்கிட்டும் இங்கிட்டும் ஊர்ந்து திரியுது. பொண்டு, பொடிசுளை வெச்சுக்கிட்டு அன்னாடம் உசுரைக் கையில புடிச்சிக்கிட்டு இருட்டுல வாழுறோம். கலெக்டருகிட்ட மனு குடுத்தும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்று கண்கலங்கினார்.“கொசுக்கடியிலயும் வெக்கையிலயும் தூக்கம்போய் பல மாசம் ஆச்சு. கரன்ட் இல்லாததால எங்க புள்ளைங்க ஆன்லைன் கிளாஸ்லயும் படிக்கிறது இல்லை. ஏற்கெனவே ஒண்ணுமில்லாம வாழ்க்கை இருண்டுபோய்க் கிடக்கு. இதுல எல்லா சப்ளையையும் நிறுத்தி, அரசாங்கமும் எங்களைச் சாவடிக்குது. சொந்த நாட்டுலயே அகதியா வாழுறோம்” ராதாவின் குரலில் அவ்வளவு துயரம்!


குடியிருப்புகளை காலிசெய்யச் சொல்லி நிறுவனம் அழுத்தம் கொடுத்தபோது, குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சுரேஷ்குமாரிடம் பேசினோம். “எவ்வளவோ போராட்டம் பண்ணிப் பார்த்தாச்சு, எதுவும் நடக்கலை. எங்களை காலி பண்ணவெக்கிறதுக்காக வங்கிகள்லாம் ‘அனுராக் கோயல்’னு ஒருத்தரை நியமிச்சிருக்கு. அவருதான் தண்ணி, கரன்ட்டயெல்லாம் நிறுத்தினாரு” என்றார் கோபமாக.


கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமுரியைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டபோது, “நான் வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. இதுவரை என்னைச் சந்தித்து யாரும் புகாரளிக்கவில்லை. அது குறித்த விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.


சந்திரசேகர சாகமுரி

‘ஸ்ரீஅம்பிகா ஆலை’ இணையப் பக்கத்தில் ‘தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்’ ஜப்தி குறித்து வெளியிட்ட வழிமுறை மற்றும் உத்தரவு அறிக்கை இடம்பெற்றிருக்கிறது. அதில் ‘நிறுவனங்களின் திவால் முறையைத் தீர்க்கும் செயல்முறை’ (Corporate Insolvency Resolution Process–CIRP) அடிப்படையில், வங்கிகள் கொடுத்த கடனுக்காக ஆலையை ஜப்தி செய்யும் பொறுப்பை டெல்லியைச் சேர்ந்த ‘அனுராக் கோயல்’ என்பவரை நியமித்திருக்கும் தீர்ப்பாயம், 10-வது பக்கத்தில் அத்தியாவசியப் பொருள்களையும் தேவைகளையும் தடுக்கக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறது. அதை மீறி அந்த மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றைத் தடைசெய்தது ஏன் என்பதற்கு விளக்கம் கேட்டு, அனுராக் கோயலுக்கு (agoel@caanurag.com) மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால், அதற்கு எந்த பதிலும் இதுவரை நமக்கு வரவில்லை.


இது ஒருபுறமிருக்க, `இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமை’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இம்மக்களின் துயர்துடைக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.


இவர்களின் கண்ணீர் துடைக்குமா அரசின் கரங்கள்?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment