Thursday, October 01, 2020

கண்டுகொள்ளாத தென்னிந்தியா... கதவைத் தட்டும் மோடி!

எந்த வகையிலும் இந்தியாவின் இதர பகுதிகளுடன் ஒத்துப்போகாத வடகிழக்கு மாநிலங்களிலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு, அந்தக் கட்சியை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியிருக்கிறது. ஆனாலும், ஒடிசாவுக்குக் கீழே தென்னிந்தியாவுக்கு வந்தால், கர்நாடகா தவிர வேறு எங்கும் பா.ஜ.க-வுக்கு கதவு திறக்கப்படவில்லை. தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் அதிரடி அரசியல் மூலம் வேரூன்றப் பார்க்கிறது பா.ஜ.க. கர்நாடகாவில் தன் பலத்தை அதிகரிக்கவும் திட்டங்களைத் தீட்டுகிறது. இப்படி கொரோனா பேரிடர் காலத்திலும் இந்த மூன்று மாநிலங்களில் அரசியல் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்கிறது பா.ஜ.க.


தெலங்கானா...நண்பேன்டா எதிர்க்கட்சிகள்!


யாருக்காவது நிதி திரட்ட, இரண்டு நாட்டு கிரிக்கெட் அணிகள் நட்புரீதியான போட்டியில் விளையாடும். ஆக்ரோஷமே இல்லாத ஆட்டமாக அது இருக்கும். ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்), ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுடன் பா.ஜ.க இப்படித்தான் மோதிவந்தது.


இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இந்த மூன்று கட்சிகளும் அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இரண்டு, மாநிலங்களவையில் போதுமான பலம் இல்லாத பா.ஜ.க-வுக்கு, பல மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ள இந்தக் கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. தெலங்கானா தவிர மற்ற இரு மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்த நிலையில், மாநிலங்களவையிலும் ஆதிக்கம் பெற்றுவிட்ட பா.ஜ.க., நிஜமான மோதலுக்கு இப்போது தயாராகிவிட்டது.முதல் குறி ராவ்!


இந்த வரிசையில் டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், பா.ஜ.க-வின் ஹிட் லிஸ்ட்டில் முதல் நபராக இருக்கிறார். காங்கிரஸ் தேய்ந்துபோன நிலையில், மூன்றாவது அணியும் ஓய்ந்துபோன சூழலில், தேசிய அரசியலில் தனக்கு ஓர் இடம் இருப்பதாக ராவ் நினைக்கிறார். ஏற்கெனவே மகன் ராமா ராவ் அமைச்சராக இருக்கிறார். மகள் கவிதாவை இன்னும் சில நாள்களில் எம்.எல்.சி ஆக்கி அமைச்சரவையில் சேர்க்கப்போகிறார். அடுத்த தேர்தலுக்குள் மகனை முதல்வராக்கி, மகளைக் கட்சித் தலைவராக்கிவிட்டு, தேசிய அரசியலில் கால் பதிக்கத் துடிக்கிறார் ராவ். இதற்காக ஒடிசா மற்றும் கர்நாடகாவில் தெலுங்கு பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். சமீபகாலம் வரை நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை ஆதரித்துவந்த டி.ஆர்.எஸ் கட்சி, இப்போது வேளாண் மசோதாக்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருப்பதே இதை உணர்த்துகிறது.


சந்திரசேகர ராவ்

புது ரத்தம் பாய்ந்த பா.ஜ.க!


தெலங்கானாவில் ஒரு பெரிய சக்தியாக பா.ஜ.க இதற்கு முன் இருந்ததில்லை. 2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, வெறும் 7.5 சதவிகித வாக்குகளுடன் ஒரே ஓர் இடத்தில்தான் பா.ஜ.க ஜெயித்தது. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த ராவ், எதிர்க்கட்சி வரிசையைப் பார்த்தார். காங்கிரஸில் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைப் பேசிக் கரைத்ததில் 15 பேர் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்துவிட்டனர். வெறும் ஐந்து எம்.எல்.ஏ-க்களுடன் பரிதாபமாக இருக்கிறது காங்கிரஸ்.


2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்ற முடிவை எதிர்பார்த்தார் ராவ். ஆனால், டி.ஆர்.எஸ்-ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி 10 இடங்களில்தான் ஜெயித்தது. காங்கிரஸ் மூன்று இடங்களைப் பிடிக்க, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 19.5 சதவிகித வாக்குகள் பெற்று நான்கு இடங்களைப் பிடித்தது பா.ஜ.க. அப்போது முதல் புது ரத்தம் பாய்ந்த வேகத்துடன் இயங்குகிறது பா.ஜ.க.


எல்லா திசைகளிலும் எகிறும் அம்புகள்!


முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம்... போதாக்குறைக்கு இஸ்லாமியக் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியுடன் கூட்டணி... எனவே வழக்கம்போல ‘வாக்கு வங்கி அரசியல் செய்கிறார் ராவ்’ என்ற குற்றச்சாட்டை வைக்கிறது பா.ஜ.க. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்தியாவிலேயே மோசமாகச் செயல்படும் மாநிலமாக தெலங்கானா இருக்கிறது. ‘‘அலட்சியமான, சோம்பேறித்தனமான ஆட்சி’’ என்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா திட்டுகிறார். ‘‘ராவ் மற்றும் ஓவைசி குடும்பங்கள் தெலங்கானாவை தங்கள் குடும்ப கம்பெனி போல நடத்துகின்றன’’ என தெலங்கானாவிலிருந்து வென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி விமர்சனம் செய்கிறார். ‘‘கொரோனா வந்ததிலிருந்து முதல்வர் காணாமல் போய்விட்டார். எப்போதாவது அவர் வைக்கும் பிரஸ்மீட்கள் மூலம்தான் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதையே தெரிந்துகொள்கிறோம்’’ என்று மாநில பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார் சொன்னது விமர்சனத்தின் உச்சம். இதையெல்லாம் பார்த்து, ‘காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவைக்கூடக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தோம். இப்படி நம்மைக் குதறுகிறார்களே...’ என நொந்துபோயிருக்கிறார் சந்திரசேகர ராவ்.


பினராயி விஜயன்

ஆந்திரா... சர்ச்சையில் ஜெகன்!


திருப்பதி பிரம்மோற்சவத்தில் பட்டு வேட்டியும் அங்கவஸ்திரமும் அணிந்து, நெற்றியில் நாமத்துடன் காட்சிதந்த ஜெகன்மோகன் ரெட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல். பிரம்மோற்சவ விழாவில் பெருமாளுக்கான பட்டாடையை ஆந்திர முதல்வர் சுமந்துவந்து அளிப்பது மரபாக இருக்கிறது. அப்படித்தான் ஜெகன் செப்டம்பர் 23-ம் தேதி பட்டாடையைக் கொண்டுவந்தார். ஆனால், அதையும் சர்ச்சையாக்கிவிட்டார்கள். இந்து அல்லாதவர்கள் திருப்பதி கோயிலுக்கு வந்தால், ‘பெருமாள் மீது நம்பிக்கை இருப்பதாக’ ஒரு படிவத்தில் கையெழுத்து போட்ட பிறகே உள்ளே செல்ல வேண்டும் என்பது மரபு. ‘கிறிஸ்தவரான ஜெகன் அப்படிக் கையெழுத்து போட்டாரா?’ என்று கேள்வி எழுப்புகிறது பா.ஜ.க (கடந்த ஆண்டு பிரதமர் மோடி திருப்பதி வந்தபோது, அவருடன் ஜெகனும் சென்றார். அப்போது பா.ஜ.க இப்படிக் கேள்வி எழுப்பவில்லை!).


ஜெகன்மோகன் ரெட்டி

‘‘கடவுளுக்குப் பிரச்னை இல்லை!’’


ஜெகன் குடும்பத்தின் பின்னணியைவைத்து மதவாத அரசியல் நடப்பதுதான் ஆந்திராவின் அவலநிலை. திருப்பதி தேவஸ்தானம், பல மாநிலங்களிலிருக்கும் தனது அசையா சொத்துகள் சிலவற்றைப் பராமரிக்க முடியாததால், அவற்றை சில மாதங்களுக்கு முன்னர் ஏலத்தில் விற்கத் தீர்மானித்தது. இதற்கும் ஜெகனின் மத அடையாளத்தைவைத்தே விமர்சனம் எழுந்தது. கடைசியில் அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது. திருப்பதி கோயில், ஆந்திர மக்களுடன் உணர்வுபூர்வமாகப் பிணைந்தது. அதனால், அந்தக் கோயிலைவைத்தே அரசியல் சர்ச்சைகளை எழுப்பி ஆதாயம் தேட முயற்சி நடக்கிறது.


சில மாதங்களாக ஆந்திராவில் சில கோயில்களில் சிலைகள் உடைக்கப்பட்டன. சமீபத்தில் அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் தேர் எரிக்கப்பட்டது. இதற்காக ஆந்திர அரசுமீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனு கொடுத்தது பா.ஜ.க. ஜெகன் இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார். ஆனால், ஜெகன் சார்பாக பா.ஜ.க-வைச் சீண்டிக்கொண்டிருக்கிறார் மாநில சிவில் சப்ளை துறை அமைச்சர் கோடலி நானி. ‘‘இந்தத் தாக்குதல்களால் கடவுளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தேரைப் பழுது பார்த்துவிடலாம். சிலைகளை மீண்டும் செய்துகொள்ளலாம். நீங்கள் இதை அரசியலாக்க வேண்டாம்’’ என்றார் அவர். ‘கோடலி நானி இந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டார். அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என இப்போது போராடிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.


ஆனால், நானி அசருவதாக இல்லை. ‘‘திருப்பதி கோயிலுக்கு ஏன் தன் மனைவியுடன் ஜெகன் போகவில்லை?’’ என்று பா.ஜ.க தலைவர்கள் கேட்க, ‘‘அயோத்திக்கு மோடி ஏன் தனியாகப் போனார்... உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் யாரைக் கூட்டிக்கொண்டு போவார்?’’ என்று உக்கிரமாகக் கேட்டார் அவர். போராட்டம் இன்னும் தீவிரமாகியிருக்கிறது.


உறவு கசந்தது ஏன்?


மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசுவதில்லை ஜெகன். தன்மீது நிலுவையிலிருக்கும் சொத்துக்குவிப்பு வழக்குகள் அவ்வப்போது நினைவுக்கு வருவதால், மௌனம் காக்கிறார். ஆனால், சந்திரபாபுவின் தெலுங்கு தேசமும் செல்வாக்கு இழந்திருக்கும் சூழலை, தனக்கான வாய்ப்பாக பா.ஜ.க பார்க்கிறது. ஜனசேனா கட்சியை நடத்திவரும் நடிகர் பவன் கல்யாணை பா.ஜ.க-வில் சேர்த்து, கட்சியை வலுப்படுத்த, பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த கொரோனா நேரத்திலும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூன்று ரசிகர்கள் இறந்தார்கள். எல்லா நடிகர்களும் வாழ்த்துச் சொன்னார்கள். செல்வாக்கு குறையாத மனிதராகவே அவர் வலம்வருகிறார்.


ஜெகன் கட்சியின் நர்சாபுரம் எம்.பி-யான ரகுராம கிருஷ்ணம் ராஜு தலைமையுடன் மோதலில் ஈடுபட்டு, சொந்தக் கட்சியின் அரசையே கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். நாடாளுமன்றத்தில் அவரைப் பெயர் சொல்லி அழைத்து, அன்பாகப் பேசினார் மோடி. மத்திய அமைச்சர்கள் பலரும் அவரைச் செல்லப்பிள்ளைபோல நடத்துகின்றனர். இதெல்லாம் ஜெகன் கட்சியினரைக் கொந்தளிக்க வைத்திருக்கின்றன.


இன்னொரு முனையில் சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, அமராவதியிலிருந்து தலைநகரை மாற்றும் விவகாரம் போன்ற உண்மையான பிரச்னைகளை விட்டுவிட்டு பா.ஜ.க-வைப்போலவே ஜெகனுக்கு எதிராக மத அரசியல் செய்கிறார்.


குமாரசாமி


கர்நாடகா... காலியாகும் குமாரசாமி கூடாரம்?


முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சில நாள்களுக்கு முன்னர் சந்தித்தார். உடனே, ‘குமாரசாமி தன் கட்சியை பா.ஜ.க-வுடன் இணைக்கப்போகிறார்’ என்று வதந்திகள் கிளம்பிவிட்டன. குமாரசாமி இதை மறுத்திருக்கிறார்.


துமகூரு மாவட்டம், சிரா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்தான் இப்போது அனைவரின் கவனமும் இருக்கிறது. குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ மறைந்ததால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஒக்கலிக சமூகத்தினர் அதிகம் வாழும் மைசூர், மாண்டியா, துமகூரு போன்ற மாவட்டங்களில் செல்வாக்கான கட்சியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் இருக்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேவ கவுடா உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தினரே பல தொகுதிகளில் போட்டியிட்டதால், அந்தக் கட்சிமீது அதிருப்தி எழுந்தது. விளைவாக, அவர்கள் அனைவருமே தேர்தலில் தோற்றனர்.


இப்போது அந்தக் கட்சியை இன்னும் கரைத்து, தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள பா.ஜ.க., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே முனைப்பு காட்டுகின்றன. ஒக்கலிக சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவகுமாரை மாநிலத் தலைவராக்கி ஆட்டத்தை ஆரம்பித்தது காங்கிரஸ். இன்னொரு பக்கம், குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார் எடியூரப்பா. சில எம்.எல்.ஏ-க்களின் கட்சித் தாவல் செய்தி எந்த நிமிடமும் வெளியாகலாம்.


ஊழல் செய்தாரா முதல்வர் மகன்?


எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்தான் கடந்த முறை பா.ஜ.க அரசை வீழ்த்தின. இந்தமுறையும் ஊழலை முன்வைத்தே அவரைத் தனிமைப்படுத்தித் தாக்குகிறது காங்கிரஸ். ஒரு தனியார் டி.வி நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ இதற்கு உதவியது. ‘பெங்களூரு நகர வளர்ச்சிப் பணிக்கான 666 கோடி ரூபாய் கான்ட்ராக்டைப் பெறுவதற்கு முதல்வர் மகன் விஜயேந்திராவுக்கு லஞ்சம் கொடுத்தேன்’ என அந்த கான்ட்ராக்டர் பேசியதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது டி.வி. இந்த விவகாரம், முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் அளவுக்குப் போனது. தன் ஆதரவாளர்கள் பலரை அமைச்சராக்க முடியாத அவஸ்தையில் இருந்த எடியூரப்பாவுக்கு இது இன்னும் நெருக்கடி தந்திருக்கிறது.


கேரளா...தங்கத்துக்கு அடுத்து வீடு!


கேரளாவின் தங்கக் கடத்தல் விவகாரம் தேசமே அறிந்த செய்தி. அந்த வழக்கில் மாநில அமைச்சர் கே.டி.ஜலீல் சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்பட, அவரைப் பதவிநீக்கம் செய்யும்படி போராட்டங்கள் தகிக்கின்றன. இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னொரு விவகாரமும் வெடித்திருக்கிறது. ‘லைஃப் மிஷன்’ என்ற வீடு கட்டும் திட்டத்தில் 350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி அறிக்கை குற்றம்சாட்டியது.


இதில் பெரும் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கொடுத்த புகாரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. பொதுவாக நீதிமன்றம் உத்தரவிட்டாலோ, மாநில அரசு பரிந்துரை செய்தாலோதான் சி.பி.ஐ ஒரு வழக்கை எடுக்கும். மரபை மீறிய இந்த விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், ‘‘மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் கேரள அரசியலில் நுழைய பா.ஜ.க முயல்கிறது’’ என்று குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தடுத்த இந்த வழக்குகளைவைத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது காங்கிரஸ் கூட்டணி.


வரும் மே மாதம் கேரள சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக இந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணியிலும், இடதுசாரிக் கூட்டணியிலும் சில குழப்பங்கள் இருந்தாலும், தேர்தலுக்கு அவசரமாகத் தயாராகி வருகின்றனர். இந்தக் கூட்டணிகளில் அரைமனதாகத் தொடரும் சிறிய கட்சிகள் ஏதேனும் தங்கள் பக்கம் வருமா என இலவு காத்த கிளியாக வேடிக்கை பார்க்கிறது பா.ஜ.க.


நான்கு மாநிலங்களிலுமே மத அரசியலைக் கையிலெடுத்து, அதிகாரத்தின் கதவுகளை பலமாகத் தட்டுகிறது பா.ஜ.க. உண்மையில், அந்தக் கட்சி மத அரசியலைக் கைவிட்டுவிட்டு, மக்களுக்கான அரசியலைக் கையிலெடுப்பதுதான் ஆரோக்கியமான வெற்றிக்கு வழிவகுக்கும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment