Thursday, October 01, 2020

துரோகிகளை அடையாளம் கண்டுகொண்டோம்! - சிறையிலிருந்து சசி கடிதம்...


அ.தி.மு.க-வில் கடந்த சில நாள்களாகவே திடீர் பரபரப்பு. முதல்வரும் துணை முதல்வரும் முகம்கொடுத்தே பேசிக்கொள்வதில்லை. எதிரெதிரே பார்த்தாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு போகிறார்கள். `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை கடந்த சில மாதங்களாகவே இருந்தது என்றாலும், சமீப நாள்களாக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம், செயற்குழுக் கூட்டம் என அவசரக் கூட்டங்களில் ரணகளங்கள் வரிசைகட்டுகின்றன. சட்டையைக் கிழித்துக்கொள்ளாத குறையாக எடப்பாடி, பன்னீர் தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொள்கிறார்கள். `முதல்வர் வேட்பாளரை உடனே அறிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் அவசர கோஷங்கள் எழுகின்றன. ஏன் இந்த திடீர் களேபரம்? விசாரித்தால் இதன் பின்னணியில், சசிகலா எழுதிய சில கடிதங்கள் நமக்குக் கிடைத்தன. கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதங்களால், அவர் விடுதலைக்குப் பிறகு கட்சியை மீண்டும் கைப்பற்றிவிடுவாரோ என்கிற பதற்றம் கட்சியின் இரட்டைத் தலைமைக்கு ஏற்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்தக் கடிதங்களின் சாரம்சம் இதுதான்...“...அம்மா தெய்வமாக இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நம் அம்மா, நம் கூடவே இருந்து துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டார். அம்மா எனக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்களைத் துணையாக விட்டுச் சென்றிருக்கிறார். நான் தைரியமாக இருக்கிறேன். என்னைச் சிறைவைத்தாலும் என் மனதை யாரும் சிறைவைக்க முடியாது. எத்தனை சோதனைகள் வந்தாலும், நல்லவர்கள் அவற்றிலிருந்து மீண்டுவர பெருமாள் உதவிசெய்வார். ராமபிரானுக்கே சோதனை வந்து வனவாசம் சென்று, மீண்டும் அவர் நல்லாட்சி செய்ததையும் எழுதியிருந்தீர்கள். நல்லவர்கள் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. நிறைய தெய்வ வழிபாடுகளைச் செய்துவருகிறேன். நிச்சயம் தெய்வங்கள் என்னைக் காப்பாற்றும். நிச்சயம் விரைவில் வந்துவிடுவேன். கவலைப்படாமல் கழகப் பணிகளைச் செய்யுங்கள்.”


- இது போன்ற வரிகளே அ.தி.மு.க-வில் இப்போது நடக்கும் களேபரங்களுக்குக் காரணம் என்கிறார்கள்.


கடிதம் பற்றிப் பேசும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள், “கடந்த 43 மாதங்களில் தனக்குக் கடிதம் எழுதும் தொண்டர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு சளைக்காமல் கடிதம் எழுதிவருகிறார் சசிகலா. கட்சிப் பிரச்னைகள் மட்டுமன்றி, முகம் தெரியாத கடைநிலைத் தொண்டனின் குடும்பம் வரை விசாரித்து அவர் எழுதியிருக்கும் கடித வரிகள் பல தொண்டர்களை நெகிழச் செய்திருக்கின்றன” என்கிறார்கள். எல்லாம் சரி, நடப்பு அரசியலுக்கு வருவோம்...செப்டம்பர் 18-ம் தேதி நடந்த அ.தி.மு.க-வின் தலைமை நிர்வாகிகளின் அவசரக் கூட்டமாகட்டும்... செப்டம்பர் 28-ம் தேதி நடந்த செயற்குழு ஆகட்டும்... சசிகலா விடுதலையை மையமாகவைத்தே அவை அரங்கேறின. கூட்டங்களில் அவர் பெயர் உச்சரிக்கப்பட்டாலும், உச்சரிக்கப்படாவிட்டாலும்... கட்சியில் அவர் இருந்தாலும், இல்லாவிட்டாலும்... கட்சியை ஆட்டுவிக்கும் ரிமோட் கன்ட்ரோல் எப்படியோ அவர் கையிலிருக்கிறது என்கிறார்கள். கடந்த காலங்களில் சசிகலா சிபாரிசின் பேரில் ‘பின்வாசலில்’ அதிகாரத்துக்கு வந்த பலரும் ‘மதில்மேல் பூனை’யாக எந்தப் பக்கம் பாய்வார்கள் என்பதை இன்றைய அ.தி.மு.க கட்சித் தலைமையால் யூகிக்கவே முடியவில்லை. அதனால்தான் சசிகலாவின் விடுதலை, கட்சிக்குள் கடும் களேபரங்களை ஏற்படுத்தியிருக் கிறது. சிறையிலிருந்து அவர் வெளிவருவதற்கு முன்பாகவே கட்சிக்குள் பல அதிரடி மாற்றங்களை நடத்தி, கட்சியைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் பன்னீர் மற்றும் பழனிசாமி. சரி, சிறையில் எப்படியிருக்கிறார் சசிகலா?பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அலுவலர்கள் சிலரிடம் பேசினோம். “கொரோனா ஆரம்பித்த கடந்த ஆறு மாதங்களாக சசிகலாவைப் பார்க்க, பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. விடுதலைக்கான நாள்கள் நெருங்க நெருங்க உற்சாகமாக இருக்கிறார் சசிகலா. அவருக்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. ஒவ்வொரு கடிதத்தையும் படித்து, மணிக்கணக்கில் பதில் எழுதுகிறார். தினமும் பல மணி நேரம் தமிழ் சேனல்களில், தமிழக அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கிறார். ஒரு தனி நோட்டில் சில விஷயங்களை எழுதிவருகிறார். விசாரித்தபோது சுயசரிதை எழுதத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார்.


சசிகலாவின் தெய்வ வழிபாடுகள் அதிகமாகிவிட்டன. காலையில் எழுந்ததும் நான்கு மணி நேரம் தொடர்ந்து தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுகிறார். சிவன் படத்தை வைத்து, வேதப் புத்தகங்களிலுள்ள மந்திரங்களை ஓதுகிறார். வழிபாடு முடியும்வரை தண்ணீர்கூட அருந்துவதில்லை. உணவிலும் முழு சைவமாக மாறிவிட்டார். சர்க்கரைநோய் இருப்பதால் பத்தியச் சாப்பாடுதான். அதையும் அவரே சமைத்து உண்கிறார்.


சென்னை தி.நகரின் ஒரு கடையிலிருந்து காய்கறி விதைகளை வரவழைத்து, சிறையில் காலியாக இருந்த ஓரிடத்தில் கிச்சன் கார்டன் அமைத்திருக்கிறார். அங்கு விளையும் காய்கறிகளைச் சமைத்து உண்கிறார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும், ‘என்னை நம்பியிருக்கும் கோடானு கோடித் தொண்டர்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன். விரைவில் சந்திப்பேன்’ என்று மட்டும் சொல்கிறார்” என்றார்கள்.`சசிகலா வரும் ஜனவரி 27-ம் தேதி விடுதலையாவார்’ என்று ஆர்.டி.ஐ கேள்வி ஒன்றுக்கு சிறை நிர்வாகம் பதில் கொடுத்திருந்தது. அதைக் கேட்டு அதிருப்தியடைந்தாராம் சசிகலா. தன்னைப் பற்றிய தகவல்களை எப்படி மூன்றாம் நபர்களுக்குத் தரலாம் என்பதே அவரது அதிருப்திக்குக் காரணம் என்கிறார்கள்!


சமீபத்தில் சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கியபோது, அது குறித்த கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தனர். அதைப் படித்த சசிகலா, அவரின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு அந்தக் கடிதத்தை அனுப்பி, ஆடிட்டரிடம் ஆலோசனை கேட்கச் சொன்னாராம். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், சசிகலாவுக்கு வரும் ஒவ்வொரு கடிதமும்... அவர் பதில் அனுப்பும் கடிதங்களும் எடை சரி பார்க்கப்பட்ட பிறகே பரிமாறப்படுகின்றன. சிறைத்துறையின் விதிமுறை இது என்கிறார்கள்!


`எல்லாம் சரி... சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தாலும், அவரால் தேர்தலில் போட்டியிட முடியுமா?’ தமிழக அரசியல் களத்தில் எழுந்திருக்கும் மிக முக்கியமான கேள்வி இது. ஏனெனில், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்றவர் சசிகலா. அதனால், அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.


ஆனால், சசிகலா வழக்கை உற்று கவனித்துவரும் சட்ட வல்லுநர் ஒருவரோ, “சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சிங் தமாங் என்பவர் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டுச் சிறைத் தண்டனை பெற்றவர். இவராலும் ஆறு வருடங்கள் தேர்தலில் நிற்க முடியாது என்றுதான் சொன்னார்கள். ஆனால், அவரது கோரிக்கையைப் பரிசீலித்த தேர்தல் கமிஷன், தமாங் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்தது.எனவே, தமாங்குக்குத் தேர்தலில் போட்டியிட கிடைத்த அனுமதி, சசிகலாவுக்குக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கு மத்திய தேர்தல் கமிஷனும், மத்திய அரசும் மனதுவைக்க வேண்டும்” என்கிறார். அதேசமயம் டெல்லி பா.ஜ.க தலைமை சசிகலாவை சந்தேகத்துடனேயே பார்ப்பதால், இது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை.


சசிகலாவின் தீவிர ஆதரவாளரான அ.ம.மு.க-வின் பொருளாளர் வெற்றிவேலிடம் பேசினோம். “சின்னம்மா எப்போதுமே தொண்டர்களுடன் தொடர்பிலிருப்பவர்தான். அந்த வகையில்தான், சிறைக்குள் இருக்கும்போதும் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி கட்சியை வளர்த்துவருகிறார். அம்மா மறைவுக்குப் பிறகு, சின்னம்மா காலில் விழுந்து அவரைப் பொதுச்செயலாளராக, முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்று சொன்ன கும்பல்தான் இப்போது வசைபாடுகிறது. அ.ம.மு.க-வின் தலைவர் பதவியைக் காலியாக வைத்திருக்கிறோம். அதேபோல், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சின்னம்மா போட்ட வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் வேண்டுமானால் தலையிடலாம். கட்சிக்குள் சசிகலா வரக் கூடாது என்று சொல்ல மாட்டார்கள். இவையெல்லாம் எடப்பாடி, பன்னீர் கோஷ்டியினர் கிளப்பிவிடும் வதந்தி. பொறுத்திருந்து பாருங்கள்... சின்னம்மா சிறையைவிட்டு வெளியே வரும்போது, அரசியல் காட்சிகள் அதிரடியாக மாறத்தான்போகின்றன” என்று சஸ்பென்ஸ் வைத்தார்!


`புலி வருது... புலி வருது...’ என்கிறார்கள். வரப்போவது புலியா அல்லது பூனையா என்பது விரைவில் தெரிந்துவிடும்!சின்னம்மா காலில் விழுந்து அவரை பொதுச்செயலாளராக, முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று சொன்ன கும்பல்தான் இப்போது வசைபாடுகிறது.


அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில், ‘அக்டோபர் 7-ம் தேதி கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினகரனின் டெல்லி மூவ், சசிகலாவின் விடுதலை இவை இரண்டும் கட்சியின் இரட்டைத் தலைமையை அவசர அவசரமாக முடிவெடுக்க நிர்பந்தித்திருக் கின்றன என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். தவிர, எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்புக்குப் பதவிகள் உள்ளிட்ட விஷயங்களும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது அ.தி.மு.க வட்டாரம்!


செப்டம்பர் 18-ம் தேதி நடந்து முடிந்த உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்குப் பிறகு, தினகரனின் டெல்லி விசிட் அ.தி.மு.க தலைமைக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்துப் பேசிய தினகரன் தரப்பினர், “தினகரனை டெல்லிக்கு வரவழைத்ததே பா.ஜ.க தரப்புதான். கட்சியின் மூத்த நிர்வாகிகள் பூபேந்தர் யாதவ், பியூஷ் கோயல் ஆகியோர் தினகரனைச் சந்தித்தார்கள். அவர்களிடம் சசிகலா விடுதலைக்குப் பிறகு, அ.தி.மு.க கட்சிக்குள் செய்ய வேண்டிய சில விஷயங்களைச் சொல்லி, ஆதரவு கேட்கப்பட்டது. டெல்லி தரப்பும் பச்சை சிக்னல் காட்டிவிட்டது” என்றார்கள் உற்சாகமாக!


தினகரனின் டெல்லி சந்திப்பை அறிந்த எடப்பாடி தரப்பும் தன் பங்குக்கு அமைச்சர்கள் இருவரை டெல்லிக்கு அனுப்பியது. இது குறித்துப் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், “செப்டம்பர் 26-ம் தேதி அமைச்சர்கள் இருவரும் கொச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரகசியமாக டெல்லி விமானம் ஏறினர். கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளரான பி.எல்.சந்தோஷை முதலில் சந்தித்த இருவரும், அவரது வழிகாட்டுதலின்படி பியூஷ் கோயலைச் சந்தித்திருக்கிறார்கள். இருவரின் தரப்பிலும், ‘சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் அனுமதித்தால், அவர் பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயல்படுவார்’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கோயலிடம் பெரிதாக ரெஸ்பான்ஸ் இல்லை. இதனால், அன்று மாலையே இருவரும் சென்னை வந்தடைந்தனர்” என்றார்கள்!


இதற்கிடையே செயற்குழுவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பன்னீர், அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனனை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தார். அப்போது, “செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சை நீங்கள் அனுமதிக்கக் கூடாது” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பிறகு பண்ருட்டி ராமச்சந்திரனையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம், ‘எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக்க பன்னீர் தரப்பில் ஒத்துழைக்கவில்லை யென்றால், அவர் தர்மயுத்தம் நடத்தி கட்சியைக் கலகலக்கவைத்த விவகாரத்தைக் கிளப்பலாம்’ என்று எடப்பாடி தரப்பு திட்டமிட்டது.


இவ்வளவு கலவர மேகங்களுக்கு இடையே செப்டம்பர் 28, காலை 10 மணிக்குத் தொடங்கிய செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு... மெதுவாகப் பேச்சு, முதல்வர் வேட்பாளர் பற்றித் திரும்பியது. எடப்பாடி, பன்னீர் இருதரப்பிலும் முதல்வர் வேட்பாளர் குறித்து கோஷம் எழுப்பினார்கள். நேரம் செல்லச் செல்ல விவாதங்கள் அனல்பறக்கத் தொடங்கின. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும் செங்கோட்டையனும், “முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்றே அறிவிக்க வேண்டும்” என்றார்கள். கோகுல இந்திரா, “கட்சிக்கு வெளியேயிருந்து அச்சுறுத்தல்கள் வருவதால், முதல்வர் வேட்பாளரை விரைவாக முடிவுசெய்ய வேண்டும்” என்றார்.


இவர்களின் விவாதத்தின்போது சிலர் சசிகலாவின் பெயரை உச்சரிக்க... அப்போதுதான் கூட்டம் ரணகளமானது. ஆவேசமாக எழுந்த எடப்பாடி, “என்னை முதல்வராக்கியது சசிகலாதான். இல்லையென்று சொல்லவில்லை, ஆனால், அப்போதே அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருந்தது” என்று வெடித்தார். இதைக் கேட்டு கொந்தளித்த பன்னீர், “உங்களை சசிகலா முதல்வராக்கியிருக்கலாம். என்னை மூன்று முறை முதல்வராக்கியது அம்மா” என்றார். அப்போது கூட்டத்திலிருந்து எடப்பாடியின் ஆதரவாளர்கள் சிலர்... “மூணு முறை எல்லாம் இல்லைங்க... திவாகரன் ஒருமுறை உங்களை முதல்வராக்கினதை மறந்துட்டீங்களா...” என்று கிண்டலுடன் கேட்க... நிலைமை மேலும் சூடானது.


ஒருகட்டத்தில் பன்னீரும் எடப்பாடியும் நேருக்கு நேர் முறைத்துக்கொண்டு நின்றார்கள். அப்போது நிலைமையைச் சமாளிக்கும்விதமாக வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பண்ருட்டி ஆகியோர், “உங்களுக்குள் இப்படி மோதிக்கொண்டால் சசிகலா, தினகரன் தரப்புக்குத்தான் லாபமாக அமையும். கட்சியை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென்றால் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்கள். கூட்டம் அமைதியானது. “ஐந்து பேர் மட்டும் பேசி முடிவெடுக் கலாம். அதுவரை அனைவரும் அமைதியாக இருங்கள்” என்று பண்ருட்டியார் சொல்ல... அதன் பிறகு முக்கிய நிர்வாகிகள் ஐந்து பேர் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.


“நமக்குள் மோதிக்கொள்வது சசிகலாவுக்கு வசதியாகப் போய் விடும். கட்சியில் இனி சசிகலாவுக்கு இடமில்லை. அதேபோல முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திப்பதும், பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, கட்சியின் பொதுச் செயலாளராக பன்னீர் செல்வம் இருக்கட்டும். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்கலாம். எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வு உட்பட பன்னீர் தரப்பினர் அளிக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவுகளைப் பிறகு பேசிக்கொள்ளலாம். கட்சியின் உயர்மட்டக் குழுவைக்கூட்டி ஒரு வாரத்தில் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிடலாம்... சம்மதமா?” என்று ஐவர் குழு கேட்க பன்னீர், எடப்பாடி இருதரப்பிலும் அரைமனதாகச் சம்மதித் திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி, “வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்று சொல்ல கூட்டம் ஒருவழியாக முடிவடைந்தது.


முதல்வர் வேட்பாளரை நீங்கள் முடிவு செய்யுங்கள்... முதல்வரை மக்கள் முடிவுசெய்வார்கள்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment