Friday, October 23, 2020

முதல்வரே... முப்பதாயிரத்துக்குக் குறைவா மணல் இல்லை!

சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபையில் முதல்வர் பழனிசாமி, ‘‘இனி மணல் விற்பனையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. அரசே மணல் குவாரிகளை நடத்தும். மக்களுக்கு மலிவு விலையில் மணல் விற்பனை செய்யப்படும்’’ என்று அறிவித்ததை நினைத்தால் குபீர் சிரிப்புதான் வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வரின் வார்த்தைகளுக்குத் துளியும் மரியாதையே இல்லை போலிருக்கிறது... அரசுக் கட்டுப்பாட்டிலிருக்கும் மணல் குவாரிகளே முதல்வரின் உத்தரவைக் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கின்றன. கட்சியில் முதல்வர் வேட்பாளர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கே பாடாய்ப்படும் முதல்வர் பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியுமா என்று நமக்குத் தெரியவில்லை. அதனால்தான் இந்தக் கட்டுரையையே எழுத வேண்டியிருக்கிறது.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்-திருச்சி சாலையில், புதுப்பட்டி கிராமத்திலுள்ள அரசு மணல் விற்பனை நிலையத்துக்கு விசிட் அடித்தோம். நுழையும்போதே வாட்டசாட்டமான ஆட்கள் நம்மை மேலும் கீழும் பார்த்தார்கள். அவர்களின் பார்வை, ‘இது எங்க ஏரியா!’ என்பதுபோல மிரட்டல் தோரணையில் இருந்தது. அருகிலேயே முள்வேலியில், ‘இடைத்தரகர்கள் இங்கு வர அனுமதியில்லை’ என்று எழுதப்பட்ட போர்டு ‘பரிதாபமாக’த் தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுக்கு மணல் குவித்துவைக்கப்பட்டிருந்தது. பொக்லைன் இயந்திரக்கரங்கள் மணலை அள்ளி லாரிகளில் கொட்டிக்கொண்டிருந்தன.

நம் அருகே வந்த ஒருவர், “என்னா மணல் வேணுமா?” என்று கேட்டார். நாம் தலையாட்டியவுடன், ஓரமாக நம்மைத் தள்ளிக்கொண்டு சென்றார். அங்கு சுமார் 50 நபர்கள் நின்றிருந்தனர். அவர்களின் அலைபேசி உரையாடலைவைத்தே, அவர்கள் மணல் வியாபாரிகள் என்பது தெளிவாகத் தெரிந்தது. நம்மை அணுகிய நபரிடம், ‘‘ஒரு லோடு மணல் எவ்வளவுண்ணே?’’ என்றோம். ‘‘30,000் ரூபாய்’’ என்றார். நாம், ‘‘6,500 ரூபாய் ப்ளஸ் லாரி வாடகைனுதானே சொன்னாங்க’’ என்று கேட்டவுடன், கடுகடுவென முறைத்தவர், ‘‘என்னா விளையாடுறியா... தலைகீழா நின்னாலும் முப்பதாயிரத்துக்குக் குறைச்சு எங்கேயும் மணல் வாங்க முடியாது’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு விலகினார். அங்கிருந்த இன்னும் சிலரிடமும் அரசு அறிவித்த விலைக்கு மணல் கேட்டோம். விநோதமாகப் பார்த்தவர்கள், விரட்டாத குறையாக நம்மைத் திருப்பி அனுப்பினார்கள். கடைசியில் வாட்டசாட்டமாக இருந்தவர்கள் சிலர், “மணல் வாங்கத்தான் வந்தீங்களா... வேற எதுக்காச்சும் வந்தீங்களா?” என்றார்கள் சந்தேகத்துடன். எதுவும் சொல்லாமல் வெளியேறினோம்.


இது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், ‘‘புதுப்பட்டியில குவாரி ஆரம்பிச்சப்போ, ‘குவாரி வந்தா விவசாயம் பாதிக்கப்படும்’னு விவசாயிகள் போராட்டம் பண்ணினாங்க. அப்போ, ‘மக்களுக்கு மூணு யூனிட் மணலை வெறும் 6,459 ரூபாய்க்கு விற்பனை செய்யப்போறோம். இதனால எல்லாரும் பலனடைவாங்க’னு அதிகாரிகள் சொன்னதால, போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டோம். போன ஜூன் மாசத்திலிருந்து 25,000 யூனிட்டுக்கும் அதிகமாக மணல் விற்பனை செஞ்சிருக்கறதா சொல்றாங்க. அதுல ஒரு யூனிட்டைக்கூட நேரடியா பொதுமக்களுக்கு விற்பனை செய்யலை. இடைத்தரகர்களும், மணல் லாரி உரிமையாளர்களும் மணலை வாங்கி, வெளிச்சந்தையில ஒரு லாரி லோடு 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யறாங்க” என்றார்.

புதுப்பட்டியைச் சேர்ந்த யோகசந்திரன், ‘‘மணல் தேவைப்பட்டா பதிவுசெய்ய ‘தமிழ்நாடு மணல் இணைய சேவை’ என்கிற வெப்சைட்டும், ‘டி.என்.சாண்ட்’ என்கிற மொபைல் ஆப்பும் இருக்கு. வெப்சைட்ல பப்ளிக் என்ட்ரி, லாரி ஓனர்ஸ் என்ட்ரினு ரெண்டு ஆப்ஷன் இருக்கு. பப்ளிக் என்ட்ரியில் பதிவுசெய்யும்போது, மணல் ஏத்துற லாரியோட பதிவு எண்ணைக் கொடுக்கணும். ஆனா, நாம வாடகைக்குப் பிடிக்கிற லாரி நம்பரைப் போட்டா, ‘மணல் அள்ள பர்மிட் இல்லை’னு ரிஜெக்ட் ஆகுது. பர்மிட்வெச்சிருக்கிற லாரிக்காரங்க மணலுக்காக லாரியை வாடகைக்குக் கொடுக்கிறதில்லை. ஏன்னா, அவங்க மணல் வாங்கி விற்பனை செய்யறாங்க. வாரா வாரம் வெள்ளிக்கிழமை சாயங்காலம் 4 மணிக்கு மணல் பதிவுசெய்யறதுக்கான இணையதளப் பக்கம் ஓப்பன் ஆகும். ஆனா, ரெண்டு மூணு நிமிஷத்துலேயே `விற்பனை முடிஞ்சுது’னு அந்த பேஜ் குளோஸாகிடும். மக்கள் அதிக விலை கொடுத்துத்தான் மணல் வாங்க வேண்டியிருக்கு’’ என்று வேதனைப்பட்டார்.

ரமேஷ் என்பவரோ, “மணலுக்காக வெப்சைட்டில் ஐம்பது தடவைக்கும் மேல் அப்ளை செய்திருக்கிறேன். ஒரு தடவைகூட ஓ.டி.பி நம்பர் வந்ததில்லை. மணல் விற்பனை நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துலதான் புது வீடு கட்டுறேன். மணல் கிடைக்காம வீட்டு வேலை பாதியில நின்னுபோச்சு. விற்பனை நிலையத்துல போய்க் கேட்டா, `புரோக்கரைப் பாரு’னு துரத்திவிடுறாங்க” என்றார் கொந்தளிப்புடன்!

ராமச்சந்திரன் - யோகசந்திரன்

பூதலூர் தாசில்தார் சிவக்குமாரிடம் பேசினோம். ‘‘சென்னையிலுள்ள கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பும் பட்டியல்படிதான் மணல் கொடுக்கப் படுகிறது’’ என்றார். சுரங்கத்துறையைச் சேர்ந்த அலுவலர்களிடம் பேசினோம். ‘‘பதிவுசெய்யப்பட்ட லாரிகளுக்கு மட்டும்தான் அரசு நிர்ணயித்த தொகையில் மணல் கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை எப்படித் தடுக்க முடியும்?” என்றவர்களிடம், இணையதள குளறுபடிகள் குறித்துக் கேட்டோம். ‘‘அது பத்தி டெக்னிக்கலா தெரியலை” என்று மழுப்பிவிட்டார்கள்.

முதல்வர் பழனிசாமி அவர்களே, இது மணல் கொள்ளை மட்டுமல்ல... பகல் கொள்ளை. தெம்பிருந்தால், தடுத்து நிறுத்துங்கள் பார்க்கலாம்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment