Friday, October 02, 2020

வறுமையில் கரையும் சிவப்பு விளக்குகள்!

கொரோனா அச்சத்தால் அன்றாட உணவுக்கே வழியில்லாமல், பெருந்துயரத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள். மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தொழில்‘முறை’ சார்ந்தும், தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தொழில்‘முறை’ சாராமலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டமும் தார்மிகமும் வெவ்வேறு என்றாலும் அவர்களின் ‘பசித்திருக்கும் வயிறுகள்’ ஒன்றுபோல ஒட்டியிருக்கின்றன. பல்வேறு விளிம்புநிலை சமூகங்களைப்போலவே நாடு முழுவதும் கண்ணீர்க் கதைகளால் நிரம்பியிருக்கிறது அவர்களின் வாழ்நிலை. இந்தநிலையில்தான், பாலியல் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, ஆறுதளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!


கொரோனா பொதுமுடக்கத்தில் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை குறித்து தனியார் அமைப்பு ஒன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், அவர்கள் வேலையிழந்து, வருமானமின்றி உணவுக்கே வழியில்லாமல் இருப்பது தெரியவந்தது. எனவே, பாலியல் தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும் என்று ‘தர்பார் மஹிளா சமன்வயா கமிட்டி’ என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.மனுதாரர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், “தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களிலிருக்கும் சுமார் ஒன்றேகால் லட்சம் பாலியல் தொழிலாளர்களில், 52 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன. ரேஷன் அட்டை உட்பட எந்தவோர் ஆவணமும் இல்லாமல் நாடு முழுவதும் பல லட்சம் பாலியல் தொழிலாளர்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களிடம் அடையாள ஆவணங்களைக் கேட்காமல் உணவுப்பொருள்களை இலவசமாக வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.


வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பாலியல் தொழிலாளிகள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


இந்தநிலையில்தான், பாலியல் தொழிலாளிகள் சிலரிடம் பேசினோம். சென்னையை அடுத்த செங்குன்றத்தைச் சேர்ந்த 32 வயது பெண் அவர். “குடிகாரப் புருஷனால வீட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அடி, உதை வாங்குறதுதான் மிச்சம். எட்டாவது படிக்கிற பையனும், ஆறாவது படிக்கிற பொண்ணும் இருக்காங்க. குடும்பத்தை நடத்தியாகணும்... புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டியாகணும். வேற வழியில்லாம இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். நான் இந்தத் தொழில் செய்யறது வீட்டுல யாருக்கும் தெரியாது.கொரோனாவால மார்ச் மாசத்திலிருந்தே கஸ்டமர் யாரும் கூப்பிடலை. ரேஷன் அரிசியில வயித்தைக் கழுவிட்டு வர்றோம். படுபாவிங்க, திடீர்னு ஸ்கூல் ஃபீஸைக் கட்டச் சொல்லிட்டாங்க. ஆன்லைன் கிளாஸுங்குறாங்க. கந்துவட்டிக்குக் கடன் வாங்கித்தான் ஃபீஸ் கட்டினேன்... புள்ளைங்க கிளாஸ் அட்டென்ட் பண்ண ஒரு செல்போனை வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஒரு மாசமாத்தான் கஸ்டமர் கூப்பிடுறாங்க. இந்த நேரத்துல தொழிலுக்குப் போறதுக்கும் பயமா இருக்கு. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா என் குழந்தைங்க அனாதையாகிடுவாங்களே... வாட்ஸ்அப் வீடியோ மூலமா தொழில் ஓடுது. அதுல ஒண்ணும் பெருசா வருமானம் இல்லை” என்கிறார்.


கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி அவர். “பத்து வருஷத்துக்கு முன்னால தொழிலை விட்டுட்டேன். இப்ப கஸ்டமரைக் கைமாத்திவிடுற வேலை மட்டும்தான். ஒரு கஸ்டமரைப் பிடிச்சுக் கொடுத்தா இருநூறு, முந்நூறு ரூபா கிடைக்கும். நாலு மாசமா ஒத்த ரூவா வருமானம் இல்லை. எனக்குப் புருஷன், புள்ளைகுட்டினு யாருமில்லை... தனிக்கட்டை நான். செத்துப்போனா தூக்கிப்போட நாதியில்லை. பிரஷர், சுகர், மூட்டுவலினு உடம்புலயும் ஏகப்பட்ட பிரச்னை. தெனமும் மருந்து, மாத்திரை சாப்பிட்டாகணும், ஆஸ்பத்திரிக்குப் போகணும்... காசில்லாம ரொம்ப தடுமாறிப் போயிட்டேம்ப்பா... ரேஷன் அட்டையும் கிடையாது. தொழில்ல இருக்குற சில பொண்ணுங்கதான் பரிதாபப்பட்டு, அப்பப்ப வந்து அம்பது, நூறு கொடுப்பாங்க. அதைவெச்சு பொழப்பு ஓடுது. சீக்கிரமா அந்த தெய்வம் என்னை அழைச்சிக்கிட்டா போதும்ப்பா...” என்று பொலபொலவெனக் கண்ணீர்விட்டார்.


இதே தொழிலை செய்துவரும் இவர் வயதையொட்டிய இன்னொரு பெண்மணிக்கு, மனநிலை சரியில்லாத மகன் இருக்கிறார். அவரைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லக்கூட அந்தப் பெண்ணிடம் பணம் இல்லை. இன்னொரு பெண் ஒருவர் திருநங்கையாக வேடமிட்டு, பேருந்து நிலையங்களிலும் டாஸ்மாக் கடை வாசல்களிலும் கைதட்டிப் பிச்சை எடுக்கிறார். பலர் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ‘சிவப்பு விளக்கு’களைச் சுற்றி இப்படி கண்ணீர்க் கதைகள் ஏராளம்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு விளிம்புநிலைத் தரப்பினருக்கும் ஆங்காங்கே உதவிகள் கிடைத்தாலும், பாலியல் தொழிலாளர்கள் என்கிற ஒரே காரணத்தால் இவர்களைப் பரிதவிக்கவிட்டிருக்கிறது இந்தச் சமூகம். கால வெள்ளம் தூக்கியெறிந்த கடைநிலை மனிதர்கள்மீது வறுமை என்னும் கல்லை எறிவது அரசுகளுக்கு அழகல்ல!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment