Friday, October 02, 2020

போருக்குத் தயாராகும் கட்சிகள்!


வியூகம் வகுக்கும் காக்கிகள்


இன்னும் ஏழே மாதங்கள்தான்... தேர்தல் போருக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். 2021, மே மாத உச்சிவெயிலுக்கான சூடு இப்போதே ஏறத் தொடங்கிவிட்டது. கட்சிகளெல்லாம் கார்ப்பரேட் அரிதாரம் பூசிக்கொண்டு, அசைன்மென்ட் டிசைன்களை ஆராயத் தொடங்கிவிட்டன. கோட், சூட் அணிந்த வடக்கு ‘வாலா’க்கள் சக்கர வியூகங்கள் வகுக்க... முன்னாள், இந்நாள் உளவுத்துறை அதிகாரிகள், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்-கள், சீனியர் பத்திரிகையாளர்கள் எனப் பெரும் குழுவே அவர்கள் பின்னால் அணிவகுக்கிறது. அந்தக் காட்சிகள் அப்படியே இங்கே...
‘மூம்மூர்த்தி’கள் ராஜ்ஜியம்... அபார்ட்மென்ட் வியூகம்


நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகிலிருக்கிறது அந்த அதிநவீன அபார்ட்மென்ட். உளவு பார்ப்பது தொடங்கி எதிர்முகாமின் ரகசியங்களைக் களவாடுவது வரை அத்தனையும் இங்கிருந்தே சுடச்சுட ‘ஆர்டர்’ செய்யப் படுகின்றன. முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி ஒருவர், சேலம் வாரிசு, தேர்தல் வியூக ஆலோசகர் ஒருவர் என மூம்மூர்த்திகள் சுற்றிச் சுழன்று, வரும் தேர்தலில் ஆளும் கட்சியைக் கரையேற்றும் வித்தைகளைச் செய்துவருகிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், மீடியா பிரமுகர்கள், அதிகாரிகள் என 230 பேரின் அலைபேசிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அரசியலில் எதிரிகளை ரகசியமாகப் பின்தொடர்வது, பெண் தொடர்புகளை ஆராய்வது, சாதிரீதியான பலத்தை உடைப்பது, ஊழல் விவகாரங்களைத் தோண்டியெடுப்பது போன்ற பணிகளை மற்றொரு டீம் ஒன்று கச்சிதமாகச் செய்துவருகிறது. இன்னொரு பக்கம் கொங்கு அமைச்சருக்காகத் தகவல் திரட்டும் வேலைகளை, பெருநகர காக்கி அதிகாரி ஒருவர் பார்க்கிறார்.‘பென் டிரைவ்’-ல் பயணிக்கும் பெண் அதிகாரிகள் படை!


எதிர்முகாமைப் பொறுத்தவரை தனித்தனி சேனல்கள். ஸ்டாலினுக்கு ஒரு டீம், உதயநிதிக்கு ஒரு டீம், சபரீசனுக்கு ஒரு டீம். 20-20 மேட்ச் போல இவர்களுக்குள் நடக்கும் சேஸிங் காட்சிகள் அனல்பறக்கின்றன. காக்கித் துறையில் மூன்று பெண் உயரதிகாரிகள் இவர்களுக்காக ‘ஸ்பை’ வேலைகளைப் பார்க்கிறார்கள். ‘பென் டிரைவ்’களில் ரகசியமாகப் பயணிக்கின்றன ஆளும்கட்சியின் ஊழல் கோப்புகள். ‘சகோதரர்’ ஒருவரிடம் தொடர்பிலிருக்கிறார் மூன்றெழுத்து கேடர் அதிகாரி ஒருவர். ‘போதும் போதும்’ எனும் அளவுக்கு ஆளும்கட்சியின் ஊழல் தகவல்களைக் கொட்டுகிறார் கோதுமை தேசத்து அதிகாரி ஒருவர். சமீபத்தில் இவர் கசியவிட்ட விவகாரம் ஒன்றுதான், பிரதமர் அலுவலகம் வரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.மன்னார்குடி டு தென்சென்னை!


மன்னார்குடி குடும்பத்தின் கோஷ்டிகளுக்காகப் பரபரக்கிறது தென்சென்னையிலிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்று. முன்னாள் காக்கியான நெற்றிக்கண் அதிகாரி தலைமையில் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறது தனி டீம் ஒன்று. விரைவில் ஓய்வுபெறவிருக்கும் ‘வடக்கு’ காக்கி, ‘மொழி’ காக்கி, ‘தண்டவாள’ காக்கி என இந்த நிறுவனத்துக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் இந்நாள் காக்கிகள் ஏராளம். ஐ.ஜி ரேங்க்கில் ஓய்வுபெற்ற மூன்றெழுத்து காக்கி ஒருவரும் இவர்களுக்காக சில அரசியல் சதுரங்க விளையாட்டுகளை நடத்திவருகிறார்.ரஜினிக்கு ராஜசேகர்!


ரஜினியை அண்ணா என்று அழைப்பார் ராஜசேகர். 1997-ம் வருட ஐ.பி.எஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், மேற்குவங்க கேடரைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் சச்சிதானந்த சுவாமிகளின் உறவினர் மூலம் ‘ரஜினி கேம்பஸில்’ நுழைந்தார் ராஜசேகர். கடந்த 2018-ம் ஆண்டு, நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்தவர், பெரிய டீம் ஒன்றை அமைத்து ரஜினிக்காக நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தார். ஒரு வருடத்துக்கு முன்னர், ‘சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அழைக்கிறேன்’ என்று சொல்லி, இவரைத் திருப்பி அனுப்பினார் ரஜினி. தற்போது மேற்குவங்கத்தில் பாம்குரா மண்டல ஐ.ஜி-யாக பணியிலிருக்கும் ராஜசேகர், ரஜினியின் அழைப்புக்காகக் காத்திருக்கிறார்.காக்கிகளின் கண்ணசைவில் கரன்ஸி!


தகவல் தொடர்பு மற்றும் சேகரிப்பு இவற்றைத் தாண்டி, நிதி விநியோகம் கட்சிகளின் முக்கியமான பணி. தேர்தல் செலவுக்கான கரன்ஸி பண்டல்களை எந்த மாதிரியான வாகனங்களில், எந்த ரூட்டில் கொண்டுபோவது, தேவையானபோது எடுப்பதற்கு வசதியாக எங்கெல்லாம் பதுக்கிவைப்பது, எப்படியெல்லாம் விநியோகிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்ய இப்போது பொறுப்பிலிருக்கும் உயரதிகாரிகளின் கண்ணசைவு தேவை. ‘பாம்பின் கால் பாம்பறியும்’ என்பதுபோல அவர்களிடம் முன்னாள் காக்கிகள்தான் டீல் பேசி கச்சிதமாகக் காரியங்களை முடித்துத் தருவார்கள். கரன்ஸி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசுப் பொருள்களையெல்லாம் ஆம்புலன்ஸ் தொடங்கி கன்டெய்னர்கள் வரை ஏற்றிவிட்டு, டெலிவரி வரை கேரன்டி தருவது இவர்களே!நிறைவான சம்பளம்... தாராளமாகச் செலவு!


இப்படி நியமிக்கப்பட்டிருக்கும் குழுக்களுக்கு கோடிகளில்தான் பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது. முன்பணமாக சில கோடிகளைக் கொடுத்துவிட்டால், அலுவலகம் அமைப்பது தொடங்கி ஆட்கள் எடுப்பதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். தெருத் தெருவாக, வீடு வீடாகச் சென்று மக்களிடம் பல்ஸ் பார்க்க, பெரும்பாலும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ் பேசத்தெரிந்த கல்லூரி மாணவர்களையே களமிறக்குகிறார்கள். தவிர, பத்திரிகைகளில் வரும் செய்திகளில் தாங்கள் வேலை பார்க்கும் கட்சிக்கேற்ப ஆதிக்கம் செலுத்துவது, சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட விஷயங்களை டிரெண்ட் ஆக்குவது, உண்மையைப் பொய்யாக்குவது, பொய்யை உண்மையாக்குவது என மக்களை மொத்தமாகத் திசைதிருப்பும் பணிகளை இந்த டீம் செவ்வனே செய்கிறது. நிறைவான சம்பளம், தாராளமாகச் செலவு செய்யலாம் என்பதால் இந்தக் குழுவினர் காட்டில் இப்போது செம ‘மழை!’


“பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு!”


முன்னாள் போலீஸ் ஐ.ஜி சிவனாண்டி, அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதை அவரிடமே கேட்டோம். “தமிழகத்தில் நான்கு முதல்வர்களுடன் பழகிவிட்டேன். உளவுத்துறை என்பது பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போன்றது. ஜெயலலிதா ஆட்சியில் உளவுத்துறை ஐ.ஜி-யாக இருந்தபோது, மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து ஆலோசனை சொல்வோம். தாலிக்குத் தங்கம், விவசாயக் கடன் ரத்து, இருபது கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களுக்கு கறவை மாடு, கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், விலையில்லா சைக்கிள், லேப்டாப் இவற்றையெல்லாம் ஜெயலலிதா வழங்குவதற்குப் பின்னணியில் இருந்தது அப்போதைய உளவுத்துறைதான். இப்போது உள்ளவர்கள் அப்படிச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. இனிமேல்தான் இப்படியான யோசனைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருக்கிறேன்!” என்றார்.


ரெஸ்ட் எடுக்கும் கிங் மேக்கர் அலெக்ஸ்!


தமிழக உளவுத்துறையில் ‘கிங் மேக்கர்’ என்று சொல்லப்படுபவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அலெக்ஸாண்டர். இவரது 37 ஆண்டுக்கால போலீஸ் சர்வீஸில் 17 ஆண்டுகளுக்கு மேல் உளவுத்துறையில் பணியாற்றினார். ஒருகட்டத்தில், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க உறுப்பினரானார். கடந்த பத்து வருடங்களாக கோவையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் சேர்மனாக இருக்கிறார். “ஜெயலலிதா இருந்தபோது அவராக அழைத்து சில அசைன்மென்ட்களைக் கொடுத்தார். நான் கட்சியில் சேர்ந்த பிறகு தேர்தல் சமயத்தில், தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்து, ‘ஜெயித்துவிடுவீர்கள்’ என்று மட்டும் சொன்னேன். அவரது மறைவுக்குப் பிறகு, ரெஸ்ட்டில்தான் இருக்கிறேன்” என்றார்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment