Friday, October 02, 2020

ஆங்காங்கே கூட்டம்... ஆளுக்கொரு சட்டம்!

கொரோனா காரணமாக அரசு அறிவிப்பின்படி, செப்டம்பர் 30 வரை பொது இடங்களில் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ‘விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டம் கூடி தொற்றுநோய் பரப்பும்விதமாகச் செயல்பட்டதாக’ சில கூட்டங்களுக்கு மட்டும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. பல கூட்டங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறது அரசு.


சில அரசியல் கூட்டங்களும்... அதற்கான அரசின் அணுகுமுறைகளும்...


01.05.2020: கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க-வின் சார்பில், தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு 750 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்ட நிகழ்வில் சிதம்பரம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள்மீது சிதம்பரம் நகரக் காவல்துறையினர் வழக்கு பதிவு.



19.05.2020: விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தில் தீவைத்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் இல்லத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட ஐந்து பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு.


30.08.2020: அ.தி.மு.க-விலிருந்து விலகி, தி.மு.க-வில் இணைந்த முன்னாள் எம்.பி லட்சுமணன், அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,094 பேர் தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி, தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி தலைமையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் காரணமாக பொன்முடி, லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுகா காவல்துறை வழக்கு பதிவு.


28.08.2020: பா.ஜ.க-வில் இணைந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பில் கூட்டம் கூடியதால், பா.ஜ.க கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி மற்றும் அண்ணாமலை ஆகியோர்மீது காட்டூர் காவல்துறை வழக்கு பதிவு.


01.09.2020: கள்ளக்குறிச்சியில் மாவட்ட அலுவலகம் திறக்கும் விழாவில் கலந்துகொண்ட எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல்துறை வழக்கு பதிவு.



19.09.2020: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கொடியேற்றி நலத்திட்ட உதவிகளைச் செய்து, கமலாலயத்துக்கு, குதிரைபூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாகச் சென்ற எல்.முருகன் மீதும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 பேர் மீதும் மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.


21.09.2020: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திகாட்டுவிளை பகுதியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில், தலைவர் எல்.முருகனை அழைத்துவர வாகனங்கள் ஊர்வலமாகச் சென்றதால், சுமார் 970 பேர் மீது குமரி மாவட்டக் காவல்துறை வழக்குப் பதிவு.


31.05.2020: சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, சோழிங்கநல்லூரில் தொடங்கி கே.கே.நகர் வரை ஒரே நாளில் 1,30,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், வழக்கு எதுவும் பதியப்படவில்லை.



01.06.2020: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூரில் ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அங்கு, சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.


06.06.2020: கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க-வினர் சார்பில், பிரதமர் மோடியின் ஆறாண்டு சாதனையைக் கொண்டாடும்விதமாக நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடினர். ஆயினும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.



14.06.2020: புதுக்கோட்டை செல்லப்பா நகரில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட பூங்காவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார். அதிகாரிகள், அ.தி.மு.க தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளியின்றிக் கூடியிருந்தனர். இதிலும் எந்த வழக்கும் பதியப்படவில்லை.


31.07.2020: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மதுரை திரும்பிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு, கோரிப்பாளையத்திலுள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வின்போதும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சமூக இடைவெளியோ, முகக்கவசமோ இல்லை. ஆயினும், எந்த வழக்கும் பதியப்படவில்லை.


கடந்த ஜூன் 11-ம் தேதி, சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் எனக் கூட்டம் அலைமோதியது. செப்டம்பர் 23-ம் தேதி, ராமநாதபுரத்துக்கு ஆய்வுக்குச் சென்று, மதுரை விமான நிலையம் திரும்பிய முதல்வருக்கு, மானாமதுரையில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. திருவிழாக்கூட்டம்போல மக்கள் கூடியிருந்தனர். கொரோனா பணிகள் குறித்த ஆய்வுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் மாவட்டம் மாவட்டமாகத் தமிழக முதல்வர் சென்றுவருகிறார். அவருக்கு `பிரமாண்ட வரவேற்பு’ என்ற பெயரில் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்படி முதல்வர், துணை முதல்வர் மட்டுமல்ல, அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்ட கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் ‘ஊரடங்கு விதிமுறை மீறல்கள்’ நடந்தும் இதுவரை எந்த வழக்கும் அவை குறித்துப் பதியப்படவில்லை.


இவை ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதிலிருந்து ஆகஸ்ட் 30 வரை 9,02,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9,99,837 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்து ஜாமீனில் விடுவித்திருக்கிறார்கள். 6,94,928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 22.01 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


வாழ்க ஜனநாயகம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment