Monday, October 19, 2020

மாற்றுச் சமூகம்கிறதால என்னைப் புறக்கணிக்கிறார்!

‘‘ஊராட்சித் தலைவியான என்னை சுதந்திரமாகச் செயல்பட விடுவதில்லை. தன் கார் டிரைவர் மூலம் பொய்ப் புகார் கொடுக்க வைக்கிறார்; எங்கள்மீது தாக்குதல் நடத்துகிறார்...’’ - சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வான வெங்கடாசலம் மீது மல்லமூப்பம்பட்டி ஊராட்சியின் தலைவியான பேச்சியம்மாள், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார்.


புகார் குறித்து பேச்சியம்மாளிடம் பேசியபோது பொங்கித் தீர்த்துவிட்டார்... ‘‘எங்க குடும்பம், எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே அ.தி.மு.க குடும்பம். என் வீட்டுக்காரர் அ.தி.மு.க கிளைச் செயலாளர். ஊராட்சிமன்றத் துணைத் தலைவராவும் அவர் இருந்திருக்கார். உள்ளாட்சித் தேர்தல் அறிவிச்சதும், மாநகர் மாவட்டச் செயலாளரா இருக்கிற எம்.எல்.ஏ வெங்கடாசலத்து கிட்ட எனக்கு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட சீட் கேட்டோம். ஆனா, அவர் தன்னோட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு சீட் கொடுத்துட்டு, மாற்றுச் சமூகம்கிறதால என்னைப் புறக்கணிச்சுட்டார்.அதனால, நான் கட்சி சார்பில்லாம தேர்தல்ல நின்னு ஜெயிச்சுட்டேன். என்னை எப்படியாவது தோற்கடிக்கணும்னு எம்.எல்.ஏ-வும், அவரோட ஆட்களும் செஞ்ச முயற்சிகளெல்லாம் பலிக்கலை. அதுக்கப்புறம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திச்சேன். அவர் ‘சிறப்பா செயல்பட்டு கட்சிக்குப் பெருமை சேர்க்கணும்’னு வாழ்த்தினார். முதலமைச்சரே என்னை ஏத்துக்கிட்டார். ஆனா, எம்.எல்.ஏ வெங்கடாசலம் என்னையும் என் குடும்பத்தினரையும் விரோதிகளா பார்க்கிறார்.


எம்.எல்.ஏ-வோட டிரைவர் அன்பு எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார். அவர் மூலமா எம்.எல்.ஏ எங்களுக்கு ஏகப்பட்ட தொல்லைகளைக் கொடுக்கிறார். தேர்தல்ல ஜெயிச்ச சமயத்துல பட்டாசு வெடிச்சதுக்காக, எங்க மேல அன்பு புகார் கொடுத்தார். ஊரடங்கு சமயத்துல எங்க ஊராட்சியில இருக்கிற ரேஷன் கடைகள்ல விலையில்லாப் பொருள்களைக் கொடுக்க எம்.எல்.ஏ வந்தார். அப்போ நானும் என் வீட்டுக்காரரும் அங்கதான் இருந்தோம். ஆனா, ஊராட்சித் தலைவியான என்னை ஓரமா நிக்கவெச்சு ஒதுக்கிட்டு, அவரோட ஆதரவாளர் ராஜ்குமாரை பொருள்களைக் கொடுக்க வெச்சார். எனக்கு ஒரே அவமானமாபோயிடுச்சு” என்றார் குமுறலாக.


பேச்சியம்மாள்


தொடர்ந்து பேசிய அவரின் கணவர் ஆறுமுகம், ‘‘அன்பு அவர் வீட்டுக்கு ‘போர்வெல்’ போட ‘ரிக் லாரி’யைக் கொண்டுவந்தார். அந்த லாரியோட பாரம் தாங்காம குடிநீர் பைப்பெல்லாம் உடைஞ்சுட்டுது. குடிநீர்ல சாக்கடைத் தண்ணி கலக்க ஆரம்பிச்சுது. அப்போ நானும் என் மனைவியும் உடைஞ்ச பைப்பை மாத்திட்டு இரும்பு பைப் போடலாம்னு பார்க்கப் போனோம். அப்போ, அன்பு எங்களோட சண்டை போட்டு என்னை அடிச்சு பணம், செல்போன் எல்லாத்தையும் பறிச்சுட்டார். அதுபத்தி நாங்க போலீஸ்ல புகார் கொடுத்தோம். உடனே எம்.எல்.ஏ தலையிட்டு அன்பு மூலமா எங்க மேல புகார் கொடுக்கவெச்சார். அதோட, நாங்க கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாதுனு போலீஸ்ல சொல்லிட்டார். இப்படி தினமும் எங்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்துட்டே இருக்கார். அதனால, எங்க குடும்பத்துல எல்லாருமே கடுமையான மன உளைச்சல்ல இருக்கோம்” என்று கொந்தளித்தார்.


இது குறித்து அன்புவிடம் பேசினோம். ‘‘அவங்க சொல்றது பொய். பேச்சியம்மாளோட குடும்பத்து ஆட்கள் எல்லாருமே பஞ்சாயத்துத் தலைவர் போல, தோரணையில அலையறாங்க. ஊருக்குள்ள சர்வாதிகாரி மாதிரி செயல்படுறாங்க. நான் எம்.எல்.ஏ-வுக்கு கார் ஓட்டுறேன்தான். ஆனா, அவர் தூண்டிவிட்டு எதுவும் செய்யலை. நைட் நேரத்துல பட்டாசு வெடிச்சாங்க. அதனால, கேஸ் கொடுத்தேன். குடிநீர் பைப் உடைஞ்ச இடத்தை விட்டுட்டு என் வீட்டுக்குப் பக்கத்துல மாத்த வந்தாங்க. அதுபத்திக் கேட்டதுக்கு எனக்கும் அவங்களுக்கும் பிரச்னை ஆகிடுச்சு. அவங்கதான் என்னை அடிச்சாங்க. ஆனா, பொய் சொல்லி என்மேல புகார் கொடுத்திருக்காங்க’’ என்றார்.


இது பற்றி எம்.எல்.ஏ வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘‘தனிப்பட்ட முறையில் யாருக்கும் சீட் கொடுக்கவோ, கொடுக்கக் கூடாது என்றோ நான் சொன்னதில்லை. மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் சீட் மறுக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் முடிவே இறுதியானது. கட்சி சார்பில்லாமல் நின்று பேச்சியம்மாள் வெற்றிபெற்றது எங்களுக்கு மகிழ்ச்சி. அன்பு என் கார் டிரைவர். அன்புவும் பஞ்சாயத்துத் தலைவர் பேச்சியம்மாளும் உறவினர்கள். அவர்களுடைய சொந்தப் பிரச்னையை நான் தூண்டிவிடுவதாகச் சொல்வது நியாயமில்லை. பஞ்சாயத்துத் தலைவராலும், அவருடைய கணவராலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர்களுடைய இரண்டு மகன்கள்தான் அராஜகம் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள்மீது பல வழக்குகள் இருக்கின்றன’’ என்றார் நிதானமாக.


வெங்கடாசலம்


இது பற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனிடம் பேச பலமுறை முயன்றும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரனிடம் கேட்டதற்கு, ‘‘மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் கொடுத்த புகார், கிராமப் பஞ்சாயத்து உதவி இயக்குநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிற்து. அவர் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வார்’’ என்றார்.


பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் ஒடுக்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வால் ஒடுக்கப்படுகிறேன் என்று புகார் எழுவது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment