Wednesday, October 07, 2020

மிஸ்டர் கழுகு: கத்தியைத் தூக்கியவர்களுக்குப் பதவி! - பதறும் தென்மாவட்ட தி.மு.க

‘அண்ணன் என்னடா... தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...’ - கவியரசர் கண்ணதாசனின் பாடலைப் பாடியபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். வறுத்த வேர்க்கடலையைத் தட்டில் நிரப்பிவிட்டு, “அ.தி.மு.க உள்குத்து அரசியலுக்கு ஏற்ற பாடல்தான்” என்று கண்சிமிட்டினோம். கண்டுகொள்ளாதவராகச் செய்திகளுக்குள் தாவினார்.


“சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் வேலை நடந்துவருகிறது. இது தொடர்பாக பேராசிரியர் ஒருவர் ஆளும் தரப்பைச் சமீபத்தில் சந்தித்திருக்கிறார். ‘எனக்கு துணைவேந்தர் பதவியைக் கொடுத்தால், தேர்தல் செலவுகளுக்காகப் பெரும் தொகையை இறக்கத் தயார்’ என்று அவர் கூறியதும் ஆளும் தரப்பே ஆடிப்போனதாம். `இவருக்கு ஏது இவ்வளவு பணம்?’ என விசாரித்திருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேனியைச் சேர்ந்த ஒருவர் இருந்த காலகட்டத்தில், இந்தப் பேராசிரியர் முக்கியப் பொறுப்பில் இருந்திருக் கிறார். அப்போது நடந்த சில விவகாரங்களில் பல கோடிகளை அள்ளிவிட்டாராம். உயர்கல்வித்துறையில் தனக்கிருந்த செல்வாக்கால், புகார்களிலிருந்து தப்பித்தவர், பிற்பாடு ஒரு துறையில் இயக்குநராகவும் வலம்வந்திருக்கிறார். ஒரு மாநிலக் கட்சியின் தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தப் பேராசிரியர், ‘அந்தக் கட்சித் தலைமைகிட்ட உங்க கூட்டணி தொடர்பாகவும் பேசி, பாசிட்டிவ்வா முடிச்சுத் தர்றேன்’ என்றும் டீல் பேசியிருக்கிறார். பேராசிரியரின் பராக்கிரமத்தைப் பார்த்து ஆளும் தரப்பு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல்!”


பொன்முடி - அனிதா ராதாகிருஷ்ணன்

“சரிதான், தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”


“அடுத்தடுத்து வெளியாகும் பதவி நியமன அறிவிப்புகளால் உடன்பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆனால், பொன்முடி உற்சாகத்தில் இல்லையாம். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணனுக்கு மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. பொன்முடியால் மாவட்டச் செயலாளர் பதவியை இழந்த ஏ.ஜி.சம்பத்துக்கு தீர்மானக்குழுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தன்னை எதிர்த்து விழுப்புரத்தில் அரசியல் செய்துவந்த ‘அன்னியூர்’ சிவாவை ஓரம்கட்டி வைத்திருந்தார் பொன்முடி. சிவாவுக்கும் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி தன் மாவட்டத்தைச் சேர்ந்த, அதேசமயம் தனக்கு ஆகாதவர்களுக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கியிருப்பது பொன்முடியை உஷ்ணமாக்கியிருக்கிறதாம். அ.தி.மு.க-விலிருந்து வந்த ராஜ கண்ணப்பன், பா.ஜ.க-விலிருந்து வந்த பி.டி.அரசக்குமார், வேதரத்தினம், ம.தி.மு.க-விலிருந்து வந்த சபாபதி மோகன் ஆகியோருக்கும் மாநில அளவில் பொறுப்பு வழங்கியிருக்கிறது தி.மு.க தலைமை.”


“தூத்துக்குடி தி.மு.க-வில் ரணகளமாகும் போலிருக்கிறதே..?”


“புதிய நியமனங்கள் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீதான புகாரைத்தானே குறிப்பிடுகிறீர்கள்... தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க-வில் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த கருணாகரன், கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குலையன்கரிசலைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் சுரேஷ் என்பவர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். சுரேஷ் வகித்துவந்த அந்தப் பதவியை, பாலமுருகன் என்பவருக்குக் கொடுக்க கருணாகரன் பரிந்துரைத்ததால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தி.மு.க அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சுரேஷுக்கு தற்போது தி.மு.க தெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.”


“ம்ம்ம்...”


“இதேபோல தூத்துக்குடியைச் சேர்ந்த பில்லா ஜெகன் மீது சச்சின் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. தவிர, சொத்துத் தகராறில் உடன்பிறந்த தம்பியையே கொலை செய்ததாக ஒரு வழக்கும் நிலுவையிலிருக்கிறது. இந்தப் பிரச்னை எழுந்த சமயத்தில், பில்லா ஜெகன் வகித்துவந்த தி.மு.க மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பொறுப்பைப் பறித்து விரட்டிவிட்டது கட்சித் தலைமை. தற்போது அவருக்கும் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. இவர் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி கத்தியைத் தூக்கியவர்களுக்கெல்லாம், அனிதா ராதாகிருஷ்ணன் சிபாரிசு செய்து பதவிகளை வாங்கிக்கொடுத்திருப்பதால் சீனியர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள். இது குறித்து தூத்துக்குடி


எம்.பி கனிமொழியிடமும் புகார் வாசித்திருக்கிறார்களாம்” என்ற கழுகாருக்கு இளநீர் பாயசத்தை நீட்டினோம். ஏலக்காய் நறுமணத்தை ரசித்தபடி பருகிய கழுகாரிடம், “அ.தி.மு.க-விலும் பஞ்சாயத்து ஓடுகிறதுபோல. மதுரையில் ஏக ரகளையாமே...” என்றோம்.


செல்லூர் ராஜு - ஆர்.பி.உதயகுமார்

“ஆமாம். மதுரை அம்மா பேரவை சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை விழா அக்டோபர் 4-ம் தேதி முனி சாலையில் நடைபெற்றது. மாநகர், மாவட்டச் செயலாளரான அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பேரவையின் மாவட்டச் செயலாளரான மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணனை அழைக்கவில்லையாம். அழைப்பிதழிலும் பெயரைப் போடவில்லை என்கிறார்கள். இதில் கடுப்பான சரவணன், செல்லூர் ராஜூவின் விழா தொடங்குவதற்கு முன்னதாக, அதே முனி சாலையில் ‘திடீர்’ உறுப்பினர் சேர்க்கை விழாவை நடத்திவிட்டார். இதில் கடுப்பான செல்லூர் தரப்பு, ‘சரவணனை கைக்குள் போட்டுக்கொண்டு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆட்டம் போடுறாரு. எவ்வளவு நாளைக்கு இந்த ஆட்டம்னு பார்க்கிறேன்’ என்று பொருமிக் கொண்டிருக்கிறதாம்.”


“உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு எதிராக அ.ம.மு.க-வினர் கொந்தளிக்கிறார்களே...”


“மதுரை தெற்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளராக இருந்த மகேந்திரன், சமீபத்தில் அ.ம.மு.க அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரை தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, உசிலம்பட்டி தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுதந்திரம் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தியிருப்பது அ.ம.மு.க-வுக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது. ‘தி.மு.க-வினரிடம் நாம் மறைமுகக் கூட்டணி போட்டுக்கொண்டதாக அ.தி.மு.க-வினர் பிரசாரம் செய்ய மாட்டார்களா?’ என்பது அ.ம.மு.க-வினரின் கோபமாக இருக்கிறது. தி.மு.க தரப்பிலும், ‘சால்வை அணிவித்ததுடன் நிறுத்திக்கொள்வார்களா அல்லது தேர்தல் வேலையும் பார்க்கப் போகிறார்களா?” என்று சோலை ரவி, சுதந்திரத்துக்கு எதிராக உஷ்ணமாகிறார்கள்” என்றபடி சிறகுகளைச் சிலுப்பிய கழுகார்,


“சீரியல் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் அந்த முன்னணி நடிகைக்குக் கடந்த சில மாதங்களாக கரன்ஸி நெருக்கடி. அரசியலில் ஆழம் பார்க்கிறேன் என்று அவரின் கணவர் கரன்ஸியைக் காலி செய்ததுதான் இதற்குக் காரணமாம். கடன் கொடுத்தவர்கள் நடிகையின் வீட்டுக்கே வந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மனைவி ஒதுங்கிக்கொள்ள, கணவர் களத்தில் இறங்கி, ‘வரும் தேர்தலில் என் கட்சி ஆளும்தரப்புக்கு இணக்கமாகச் செல்லப்போகிறது. அதற்காக பெரும்தொகையும் கைமாறவிருக்கிறது. அவசரப்படாதீர்கள்... வட்டியும் முதலுமாக வாங்கிக்கொள்ளலாம்’ என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்” என்றபடி ‘டேக் ஆஃப்’ ஆனார் கழுகார்.


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!


* தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா, திருச்சி கிழக்குத் தொகுதியை குறிவைத்துக் களமிறங்கியிருக்கிறார். இதற்காக உதயநிதி, சபரீசன் ஆகியோரைச் சந்தித்துப் பேசிவருகிறாராம்.


* தென் மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய அமைச்சர் அவர். வேட்டை நாய்க்குப் பெயர்பெற்ற ஊரில் சமீபத்தில் நில வேட்டை ஆடினாராம். நிலத்தைப் பறிகொடுத்தவர்கள், இப்போது சென்னையில் முகாமிட்டு சட்டரீதியான நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறார்கள். விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் கூடும்.


* தன் மகன் பிரவீனுக்கு நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் சீட் வாங்கிவிட வேண்டுமென்று அமைச்சர் எம்.சி.சம்பத் முட்டி மோதுகிறாராம். தான் எடப்பாடி அணியிலிருந்தாலும், தன் மகன் பிரவீனை பன்னீர் வீட்டுக்கும் அனுப்பி இரண்டு பக்கமும் துண்டைப் போட்டுவைத்திருக்கிறார் சம்பத்!


* தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் கடும் பண நெருக்கடியிலிருக்கிறார். தனது கட்சியைச் சேர்ந்த சிலரிடம் சீட் வாங்கித் தருவதாக தன் வாரிசுடன் கலெக்‌ஷனிலும் இறங்கியிருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும் கடுப்பான மாநிலத் தலைமை, டெல்லிக்கு நோட் போட்டிருக்கிறதாம்.


முற்றுப்புள்ளிவைத்த குஷ்பு!


`பா.ஜ.க-வில் ஐக்கியமாவார்’ எனப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும்விதமாக, நடிகை குஷ்பு மீண்டும் காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார். உத்தரப்பிரதேசம், ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து அக்டோபர் 5-ம் தேதி பெரம்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.


குஷ்பு

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், ``கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்தாலும் வராமல் தவிர்த்தார் குஷ்பு. அதனாலேயே, அவர் பா.ஜ.க-வில் சேரப்போவதாகத் தகவல் பரவியது. இதையடுத்து, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்புவைத் தொடர்புகொண்டு பேசினார். அவரிடம், `எனக்கு அழைப்பு வந்தால், நிச்சயமாகக் கூட்டங்களில் பங்கேற்பேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை’ என உறுதி கொடுத்தார் குஷ்பு. இதையடுத்து, அவருக்குக் கூட்டம் தொடர்பான தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இடையில் சிறிது இடைவெளி ஏற்பட்டது. அதை மாநிலத் தலைவர் நேரடியாகப் பேசி சமாதானம் செய்துவிட்டார்” என்றார்கள்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment