அ.தி.மு.க செயற்குழு தீர்மான நகலுடன் வந்தார் கழுகார். கேரட் அல்வாவை கழுகாருக்குத் தட்டில் வைத்து நீட்டிவிட்டு, “செயற்குழுக் கூட்டத்தில் அனல் பறந்ததா?” என்று கேட்டோம். அல்வாவைச் சுவைத்தவர், “உமது நிருபர்தான் அனைத்துத் தகவல்களையும் அனுப்பியிருப்பாரே...” என்றபடி அ.தி.மு.க செயற்குழு தொடர்பாக வந்திருந்த கட்டுரையில் பார்வையை ஓடவிட்டார். “செயற்குழுவில் நடந்த காமெடி ஒன்றையும் சொல்கிறேன், கேளும்” என்றபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
“அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனுக்கு வயதாகிவிட்டது என்பதால், உடல்நிலையைக் காரணம் காட்டி அவரைக் கழற்றிவிட்டுவிட்டு, தானே அந்தப் பதவியில் அமர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானித்திருந்தாராம். இதற்காக, மதுசூதனனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம். எடப்பாடியின் திட்டப்படி எல்லாம் கனிந்துவந்த நிலையில், செப்டம்பர் 25-ம் தேதி இரவு மதுசூதனனை திடீரெனச் சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், ‘பதவியை நீங்கள் விட்டுக்கொடுத்தால், உங்கள் அரசியல் எதிர்காலம் என்னாவது?’ என்று குழப்பிவிட்டாராம். சுதாரித்துக்கொண்ட மதுசூதனன் அன்றிலிருந்து தன்னைச் சந்திக்க வரும் கட்சியினரிடம், ‘நான் நல்லா இருக்கேன்ப்பா. நீங்களே பாருங்க... நான் சத்தியமா நல்லாத்தானே இருக்கேன்...’ என்று கைகளை மடித்துக்காட்டி புஜபலம் காட்டினாராம். அதேபோல கூட்டத்துக்கும் ஜம்மென்று வந்துவிட்ட மதுசூதனன், கூட்ட நிகழ்வுகளைக்கூடச் சரிவர கவனிக்காமல் அருகிலிருந்த கட்சி நிர்வாகிகளிடம் ‘சத்தியமா நல்லாத்தான் இருக்கேன்’ என்று கதற... என்னவென்று புரியாமல் தலை கிறுகிறுத்துப் போனார்களாம் நிர்வாகிகள்!”
“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...”
“அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன், பட்டப்பகலில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது அல்லவா... அந்த விவகாரத்தில் ஏழு பேரை போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்தக் கடத்தலின் பின்னணியில் ராதாகிருஷ்ணனுக்குப் போட்டியாக அரசியல் செய்யும் கொங்கு மண்டல கட்சி சீனியர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறாராம். கைதுசெய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரின் மாமனார், அந்த சீனியருக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிறார்கள். கடத்தியவர்கள் அமைச்சரின் சொத்துப் பட்டியலைக் கேட்டு பயங்கரமாக மிரட்டினார் களாம். ஆனால், கர்ணன் பிடிகொடுக்க வில்லையாம். இது குறித்து உளவுத்துறையும் தீவிரமாக விசாரிக்கிறது.”
“அடேங்கப்பா...”
“ஆவடி சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்ற இப்போதே அ.தி.மு.க-வுக்குள் மோதல் ஆரம்பித்துவிட்டது. சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் காய்நகர்த்தும் சூழலில், மற்றொரு அமைச்சர் ஒருவரும் முட்டி மோதுகிறாராம். அந்த அமைச்சரின் தற்போதைய தொகுதிக்குள் முன்னாள் கவுன்சிலர்கள் சிலரது ஆட்டத்தால் கட்சிக்கு ஏகப்பட்ட அவப்பெயர் என்கிறார்கள். இப்படியே சென்றால் மக்கள் கைவிட்டு விடுவார்கள் என்று அமைச்சரின் ‘பெஞ்ச்’ ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. அதனால், கடந்த வாரம் தன் ஆதரவாளர்களை அழைத்த அந்த அமைச்சர், ‘இந்த தடவை ஆவடிக்கு மாறிடலாம்ப்பா. மாநகராட்சியா மாத்திட்டதால, ஜெயிச்சுட்டா ஜம்முனு செட்டிலாகிடலாம்’ என்று தேர்தல் வேலையையும் ஆரம்பித்து விட்டதாகத் தகவல்.”
“தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”
“தி.மு.க இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் தயாராகிறது. டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா, பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றி, பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி உட்பட பல வாரிசுகளின் பெயர்கள் அடிபடுகின்றன. இளைஞரணியில் மாநிலத் துணைச் செயலாளராக இருக்கும் ஆர்.டி.சேகர், கட்சியின் செயற்குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற ஃபார்மூலாவின்படி, இவரைப் போன்று இரண்டு பதவிகளில் இருப்பவர்களின் லிஸ்ட் ஒன்றும் எடுக்கப்படுகிறதாம். அதன்படிதான் புதிய நிர்வாகிகள் நியமனம் நடைபெறுமாம்.”
“இளைஞரணிக்கு புது ரத்தம் பாய்ச்சுகிறார்கள்போல!”
“தி.மு.க-வின் முக்கியத் தலைவராக இருக்கும் ஒருவரிடம்தான் கட்சியின் பஞ்சாயத்துகள் அனைத்தும் பேசி முடிக்கப்படுகின்றன. அந்தத் தலைவரின் தம்பி, நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். கிழக்குக் கடற்கரை சாலையில் முதலீடு செய்தவகையில் தொழிலில் அவருக்கு ஏகப்பட்ட கோடிகள் நஷ்டமாம். நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் தம்பிக்கு உதவ, பஞ்சாயத்துக்குச் செல்லுமிடமெல்லாம் வசூலுக்கு ரூட் போடுகிறாராம் அந்தத் தலைவர். ‘வர்ற தேர்தல்ல உனக்கு சீட் வாங்கித் தர்றேன். வட்டி இல்லாம என் தம்பிக்குக் கொஞ்சம் கடன் கொடுங்க. ஆட்சிக்கு வந்ததும் நான் அமைச்சராகிடுவேன். உங்களுக்கு வேண்டியதைச் செஞ்சுக்கலாம்’ என்று செல்லுமிடமெல்லாம் சில கோடிகள் பில் போடுவதாகக் கூறுகிறார்கள். இது போதாதென்று, ஐந்தாறு தொகுதிகளை வைத்திருக்கும் மாவட்டச் செயலாளர்களை தாஜா செய்து, ‘ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க... தேர்தல் செலவை சமாளிக்க முடியாது’ என்று மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க அழுத்தம் கொடுக்கிறாராம் அந்தத் தலைவர். இப்படிப் பிரிக்கப்படும் மாவட்டத்தில், ‘உனக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வாங்கித் தர்றேன்’ எனத் தனியாக வசூல் வேட்டையை நடத்துகிறாராம். இது தெரிந்த அந்தத் தலைவரின் சொந்த மாவட்டத்திலிருக்கும் அவரது கட்சியின் அரசியல் எதிரியே, இது குறித்து ஆதாரங்களைத் திரட்டி, ‘நேருக்கு நேர்’ மோதத் தயாராகி வருகிறாராம்!”
“சரிதான்... கன்னியாகுமரி தி.மு.க-விலும் ஏதோ உரசலாமே?” என்றபடி, கழுகாருக்கு நெய் முறுக்கை நீட்டினோம். ஆமோதித்த கழுகார், முறுக்கை நொறுக்கியபடி தொடர்ந்தார்.
“கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ் ராஜனையும் மேல்புறம் ஒன்றியச் செயலாளர் சிற்றாறு ரவிச்சந்திரனையும் சமூகரீதியாக விமர்சித்து, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க அனுதாபி ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். பிரச்னை பற்றிக்கொண்டது. அந்த நபரின் வீட்டுக்கே அதிரடியாகச் சென்ற சுரேஷ் ராஜனின் ஆதரவாளர்கள் கோதாவில் இறங்க, உடனடியாக அந்தப் பதிவு நீக்கப்பட்டது. இதையடுத்து நாடார் சங்கங்கள் சார்பில் சுரேஷ்ராஜனுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. கோபமான சுரேஷ் ராஜன், இது குறித்து நேசமணி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். குமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மனோ தங்கராஜ்தான் நாடார் அமைப்புகளைத் தூண்டிவிட்டிருப்பதாக சுரேஷ் ராஜன் தரப்பு முஷ்டியை முறுக்குகிறது. இந்த மல்லுக்கட்டால் குமரி மாவட்ட தி.மு.க-வில் அனல் பறக்கிறது.”
“பா.ஜ.க தலைவர் ஒருவரை தி.மு.க பிரமுகர் சந்தித்தாராமே..?”
“ஆமாம். அமலாக்கத்துறையின் பிடியில் எக்கச்சக்கமாகச் சிக்கியிருக்கும் தி.மு.க பிரமுகரை, ஒரு ஹோட்டலில்வைத்து சந்தித்தாராம் அந்த பா.ஜ.க தலைவர். தன் மீதான அமலாக்கத்துறை விசாரணை இறுகும் நிலையில், மத்திய அரசு தனது விவகாரத்தில் அடக்கிவாசிக்க என்ன செய்ய வேண்டும் என்று சாந்தமாகக் கேட்டதாம் தி.மு.க பிரமுகர் தரப்பு.”
“ம்ம்...”
“பெரியாரை ‘ஈ.வெ.ரா’ என்று அழைப்பது பா.ஜ.க தலைவர்கள் பலரது வழக்கம். இதற்கு முரணாக
எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோர் ‘பெரியார்’ என்றே அழைத்துவந்தனர். தவிர, பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளையும் சிலர் தெரிவித்தார்கள். இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் முருகனைத் தொடர்புகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘பெரியாரைப் பற்றி பாசிட்டிவ்வாகப் பேசுவது நம் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல’ என்று அட்வைஸ் செய்தாராம்” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது, தமிழக அரசியல் பிரபலங்களிடம் பீதியை உருவாக்கியிருக்கிறது. தி.மு.க தரப்பில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரைச் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் அழகிரி, சட்டமன்றக்குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோருடன் குண்டு ராவ் பேசிக்கொண்டிருந்தபோது, ‘என் பாதுகாவலருக்கும் டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார். ‘உடன் இருந்தவர்களுக்குத் தொற்று உறுதியானது தெரிந்தும், தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளாமல் எதற்கு எங்களையெல்லாம் சந்தித்தார்?’ என்று பீதியில் புலம்புகிறார்கள் தலைவர்கள்” என்றபடி மாஸ்கை சரிசெய்துகொண்டு ஜூட் விட்டார்.
‘சாட்சி’ நீக்கம்...சஜீவனின் ஆதிக்கம்!
கொடநாடு பங்களாவுக்கு மரவேலை செய்து கொடுத்த கூடலூர் சஜீவனின் தம்பி சுனில், கொடநாடு கொலை வழக்கின் சாட்சிகளில் முக்கியமானவர். கடந்த வாரம், ‘இவர் வலுவற்ற சாட்சி. இவரிடம் சாட்சி விசாரணை தேவையில்லை’ என நீதிபதியிடம் முறையிட்டு சாட்சிப் பட்டியலிலிருந்து அவரை நீக்கச் செய்திருக்கிறார் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அரசுத் தரப்பு வழக்கறிஞருமான பால நந்தகுமார். நீலகிரி அ.தி.மு.க-வில் சஜீவனின் ஆதிக்கம் ஓங்கிவரும் நிலையில், அவரின் சகோதரர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!
* தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்த ஆணை, மத்திய அரசிடமிருந்து இன்னும் தமிழக அரசுக்கு வரவில்லையாம். அதேநேரம் வேறு சில மாநிலங்களிலுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கும் உத்தரவு சென்றுவிட்டது. ஆணை வருவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் சண்முகம் தரப்பு அப்செட்!
* ஓர் ஆண்டுக்கு முன்னர் நடந்த வருமான வரித்துறையின் சோதனைக்கு இப்போது வழக்குகள் பாய்வதால் அப்செட்டில் இருக்கிறாராம் துரைமுருகன். நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் கொந்தளித்து, சும்மா கிடந்த வழக்குகளை எழுப்பிவிட்டிருக்கும் தன் மகனை பார்க்கும்போதெல்லாம் கடுகடுக்கிறாராம்
No comments:
Post a comment