ஒரே ஒரு சொல்லோ, வாக்கியமோ ஒருவருடைய மொத்த வாழ்வையும் மாற்றியமைக்கும் என்பதற்கு ஆச்சிறந்த உதாரணம் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையிசை ஆளுமையாக விளங்கிய அவர், பதினாறு மொழிகளில், நாற்பதாயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார். சந்தேகமில்லாமல் அது சாதனையே என்றாலும், அந்தச் சாதனையை நிகழ்த்த அவரை ஊக்கியது ஒரே ஒரு வாக்கியம். முதல் பாடலை அவர் பாடப் புகும்போது `நீ சரியாகப் பாடவில்லையெனில், வேறு ஒருவரைப் பாடவைத்துவிடுவோம்’ என்ற வாக்கியமே இறுதிநாள்வரை அவரை எச்சரிக்கையோடு இயங்கவைத்திருக்கிறது.
`எதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே வாழ்வும் தாழ்வும்’ என்பதை அறிந்திருந்த அவர், பற்றிக்கொண்ட துறையையும், அதற்கு உதவிய நபர்களையும் ஒவ்வொரு நொடியும் நினைத்து நினைத்து நெகிழ்ந்திருக்கிறார். திரையிசையென்னும் `நீலவான ஓடையில், நீந்துகின்ற வெண்ணில’வாக மாறிய பிறகும்கூட, `ஆயிரம் நிலவே வா’ பாடலை முதலில் பாட முடியாமல் திரும்பிய சம்பவத்தைச் சொன்னபடியே இருந்திருக்கிறார்.
கருணையும் இரக்கமும் கொண்டவர்களால் மட்டுமே தாம் வளர்ந்ததாக நம்பிய அவர், நன்றிக்கும் விசுவாசத்துக்கும் உரியவராக உணர்ந்திருக்கிறார். தமக்குக் கிடைத்த அனைத்துப் பாராட்டுகளையும் தம்முடைய குருநாதர்களின் காலடியில்வைக்கத் தெரிந்த வாஞ்சை அவருடையது. அதுவே சமகாலத்தில் தன்னிலும் சிறந்த பாடகராக கே.ஜே.யேசுதாஸை எண்ணி, பாதபூஜை செய்யும் பண்பைக் கொடுத்திருக்கிறது. `உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா...’ எனப் பாடினாலும், ஒவ்வோர் உயிரையும் நந்தலாலாவாகப் பார்க்கப் பழகிய உயரமே அவர்.
எந்த மொழியில் பாடினாலும், சுதி சுத்தமாகப் பாடுவது பெரிதல்ல. மொழி சுத்தமாகப் பாட வேண்டுமென்கிற வேட்கையே அவர் வெற்றியின் ரகசியம். ஒரு பாடலைக் கேட்கையில், கதையும் காட்சியும் தெரிய வேண்டும் எனத் தீவிரம்காட்டிய மிகச் சில பாடகர்களில் அவரும் ஒருவர். `மணியோசை கேட்டு எழுந்து...’ பாடலில் இருமலுக்கும் இசை அந்தஸ்தை வாங்கிக்கொடுக்க அவரால் முடிந்தது. பாவங்களை அவர்போல வெளிப்படுத்தத் தெரிந்த மற்றொருவர் இந்திப் பாடகர் முகமது ரஃபி. அவரே தம்முடைய ஆதர்சப் பாடகர் எனப் பல மேடைகளில் எஸ்.பி.பி பகிர்ந்திருக்கிறார். `எனக்கொரு காதலி இருக்கின்றாள் / அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்...’ என்றே காலத்தைக் காதலித்திருக்கிறார்.
மேடைக்கு மேடை தமக்கு சாஸ்திரீய சங்கீதம் தெரியாது அல்லது தாம் சங்கீதமே கற்கவில்லை எனச் சொன்னபோதும், எத்தனையோ இளைஞர்களின் பாடகர் கனவை அவர் ஒருவரே பலிக்கவைத்திருக்கிறார். `சங்கராபரண’ இசைமழையில் எல்லோரையும் நனையவைத்த அவர், முறையாக இசையைப் பயிலவில்லை என்பது உண்மைதான். ஆனால், இசை அவரை அடிமுதல் முடிவரை ஆழப் பயின்றிருக்கிறது. ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் குதூகலத்துடனேயே ஒவ்வொருமுறையும் அவர் பாடலைப் பாடவரும் அழகை நேரில் ரசித்திருக்கிறேன். `ஒரு நல்ல பாடகனுள் நடிகனும் இருக்கிறான்’ எனும் நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதை அவர் பல படங்களில் நடித்து, நிரூபித்தும் காட்டியிருக்கிறார். நாற்பத்தைந்து படங்களுக்கும் மேலாக அவர் இசையமைத்திருக்கிறார். எனினும், எந்தப் புது இசையமைப்பாளரையும் அவரால் குறைத்து மதிப்பிட முடிந்ததில்லை. ஒரு படத்துக்கு ஒரு பாடலைப் பாடி, ஏதேதோ காரணங்களால் அந்தப் பாடல் பயன்படுத்தப்படாமல் போனால்கூட அதுகுறித்து வருத்தமோ புகாரோ தெரிவிக்க மாட்டார்.
‘அளவு மாறும்போது தன்மை மாறிவிடும்’ என்கிற அறிவியல் விதியே அவர் குணத்திடம் தோற்றிருக்கிறது. இசையுலகின் உச்சாணிக்குச் சென்றுவிட்ட பிறகும் இயல்பை மாற்றிக்கொள்ளாத அவரை எளிதில் அணுகலாம். ஒரு பெரும் பாடகர் பாட வருகிறார் எனும் பதற்றத்தையோ, அச்சத்தையோ தந்துவிடாத அந்த இயல்பால் எல்லோராலும் அவர் நேசிக்கப்பட்டிருக்கிறார். திரைக்கு வெளியே இருக்கும் ரசிகர்களையும், திரையின் பின்னணியில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒரே மாதிரி நடத்திய விந்தைக் கலைஞர் அவர். பாடலாசிரியன், பாடகன் என்கிற உறவைத் தாண்டி என்னை அவரும், அவரை நானும் ஆசையுடன் தழுவிக்கொண்ட தருணங்கள் ஒன்றிரண்டல்ல. அடுக்கிச் சொல்லும் ஆர்வத்தை அவர் பிரிவின் கண்ணீர் பிசுபிசுக்கவைக்கிறது.
என்னிடம் மட்டுமல்ல, இசைத்துறையில் இருக்கும் அத்தனை பேரிடமும் அவர் காட்டிய பிரியங்கள் பெருமைக்குரியவை எனில், ஒவ்வொருரையும் ஈர்க்கும் ஒளிநிறைந்த கண்களும் வார்த்தைகளும் அவருடையவை. `பொல்லாதவன்’ திரைப்படத்தில் `எங்கேயும் எப்போதும்’ பாடலை ரீமிக்ஸ் செய்யலாம் என எண்ணி இயக்குநர் வெற்றிமாறன் எஸ்.பி.பி-யைப் பாட அழைத்திருந்தார். அதுவரை நேரில் சந்திக்காத நானும், மலேசிய தமிழ் ராப் பாடகர் யோகி.பி-யும் உடல் உதற நின்றிருந்தோம். பாடலுக்கு இடையே வரக்கூடிய தமிழ் ராப் பகுதியை நான் எழுதியிருந்தேன். முயற்சியாக அது வெற்றிபெறும் எனினும், அதை எஸ்.பி.பி எப்படி எடுத்துக்கொள்வார் எனும் சந்தேகமும் தயக்கமும் எங்களுக்கிருந்தன. அவரோ ஒரே ஒரு சொல்லில் சகல குழப்பங்களையும் நிவர்த்தி செய்து, எங்களை வாரியணைத்துப் பாராட்டு தெரிவித்தார். அவர், வியப்புக்குறிகளின் வேடந்தாங்கல்.
முகமறியாதவர்களுக்கும் முத்தம்தரத் தயங்காத அன்பாளர். பின்னாள்களில் ரீமிக்ஸ் குறித்து அதிருப்தியைத் தெரிவித்தாலும், முதல் முயற்சிக்கு அவர் கொடுத்த ஊக்கம் முக்கியமானது. எஸ்.பி.பி-யின் பாராட்டில் கண்கலங்கிய யோகி.பி-யை அவர் தட்டிக்கொடுத்து ஆசீர்வதித்த அந்தக் காட்சி கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. எதற்காகவும் ஒருவரை ஏளனமோ, ஏகடியமோ செய்யாத அவர், பாடகராக மட்டுமல்ல... மனிதராகவும் மாண்புக்குரியவர்.
`மஞ்சப்பை’ திரைப்படத்தில் வெளிவந்த `ஆகாச நிலவுதான்/ அழகா தெரியல’ பாடலின் இறுதிவரி, `ஒத்த நொடி பிரியச் சொன்னா இறந்தே போயிடுவேன்’ என்று வரும். நானெழுதிய அப்பாடலை அவர் பாடி முடித்தபோது அதை ஒலிப்பதிவு செய்த பொறியாளர் உட்பட எல்லோரும் அழுதுவிட்டோம். அத்தனை நெருக்கமாக ஓர் உணர்வை அட்சரம் பிசகாமல் கடத்தும் ஆற்றல் அவருடையது. உணர்வை மட்டுமல்ல, உள்ளத்தையும் கடத்தத் தெரிந்த ஒப்பற்ற கலைஞர் அவர். உலகையே ஆச்சர்யப்படுத்தும் மகாகலைஞனே ஆனாலும், அவனும் ஒருநாள் மரணத்தின் பல்லவியைப் பாடத்தான் வேண்டுமோ?
No comments:
Post a comment