Wednesday, October 14, 2020

பஞ்சராகிப்போன அந்த சைக்கிள் எங்கே போச்சு?

சந்தர்ப்பவாதம் என்றால் என்னவென்றே ‘தெரியாத’ ஐயாவுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்?


‘யாரடா இது... கடிதம் எழுதும் அளவுக்கு நம் கட்சியில் ஒரு தொண்டன்?’ என்று உங்களுக்குச் சந்தேகம் வரலாம். நியாயமான சந்தேகம்தான்... சந்தேகமாவது நியாயமாக இருக்கட்டுமே!


‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’யின் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்த சமயத்தில்கூட... காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் தந்தை மூப்பனார் இருக்கும் இடமே கட்சியின் தலைமையிடம் என நிர்வாகிகளும் தொண்டர்களும் இருந்த காலகட்டம் உண்டு. அந்த அளவுக்குத் தொண்டர்கள் மத்தியில் அவருக்குச் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று... அவரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் அலுவலகத்தில், நீங்கள் மட்டும்தான் தனியாக அமர்ந்து ‘ஈ’ ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்தத் துயரக் காட்சியை அவ்வப்போது வந்து நானும் பார்த்து நொந்துபோய்த் திரும்பிச் செல்வதுண்டு. உங்களைத் தேடித் தொண்டர்கள் என யாருமே வருவதில்லை. ஏனென்று யோசிப்பதுண்டா... யோசித்திருக்க மாட்டீர்கள். நான் சொல்லட்டுமா? முதல் காரணம் உங்கள் சந்தர்ப்பவாத அரசியல்!


2004 முதல் பத்தாண்டுக் காலம், காங்கிரஸ் அமைச்சரவையில் பதவியை அனுபவித்துவிட்டு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும், திடீர் ஞானம், ரோஷம், ‘கொள்கை’ ஞாபகம், அப்புறம்... ‘காமராஜர் ஆட்சி’ குறித்தெல்லாம் கலவையான விழிப்புணர்வு அடைந்து காங்கிரஸிலிருந்து வெளியேறினீர்கள். ‘சும்மா இருப்பானேன்’ எனப் பரணில் துருப்பிடித்துக் கிடந்த சைக்கிளை... அதுதான் நம் கட்சியை... தூசுதட்டி ஓட்டினீர்கள். உங்களை நம்பிச் சிலரும் அப்போது வந்தார்கள். கடுமையாக பெடல் போட்டு ஓட்டுவதாகப் பாவனையெல்லாம் செய்தீர்கள். சட்டமன்றத் தேர்தல் வந்தது, போயஸ் கார்டன் பக்கம் போய் பெல்லடித்து, பெல்லடித்துப் பார்த்தீர்கள். பிறகு, யூ டர்ன் போட்டு ‘மக்கள் நலக் கூட்டணி’ வண்டி கிளம்பும் நேரத்தில், வாண்ட்டடாகப் போய் ஏறிக்கொண்டீர்கள். அந்த ரேஸிலும் தோற்றோம். பரவாயில்லை, ஆனால் அவசரத்தில் சைக்கிளை எங்கே நிறுத்தினீர்கள் என மறந்துவிட்டீர்கள். ஆமாம் ஐயா... பஞ்சராகிப்போன அந்த சைக்கிள் எங்கே போச்சு? இன்னொன்றும் சொல்ல வேண்டும். தமிழக அரசியலில் எப்படி ஸ்லோமோஷனில் இயங்குவது என்று ஒரு போட்டி வைத்தால், அதிலும்கூட எல்லோரையும் பிந்தியடித்து, பெடல் போட்டு ஜெயிப்பீர்கள்.


மத்திய அரசின் சில திட்டங்களை, கூட்டணியில் இருந்தாலும் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க-வே எதிர்க்கும்போது, அவ்வளவு ஏன்... தமிழக பா.ஜ.க தலைவர்கள்கூட அவை குறித்து யோசித்து யோசித்துப் பேசும்போது, நீங்கள் மட்டும் நாக்கூச்சம் இல்லாமல் கண்மூடித்தனமாக, கண்டபடி ஆதரித்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். என்ன தலைவிதி வந்தது நமக்கு? போனது போக, மிச்சமிருக்கும் சொச்ச கட்சி நிர்வாகிகளையும் தொலைக்காட்சி விவாதங்களில், பா.ஜ.க-வுக்காக வாதாடிக் கூச்சல்போட வைத்துக்கொண்டிருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய சந்தப்பவாதம் இது? தயவுசெய்து கூட்டணி தர்மம் என்றெல்லாம் சொல்லிவிடாதீர்கள்... பா.ஜ.க-காரர்களே இதை நம்ப மாட்டார்கள்!


“மானத்தோடு வாழ வேண்டும் என்று கூறிவிட்டு, லட்சக்கணக்கான தொண்டர்களைப் பலி கொடுக்க மாட்டேன். நானே முதல் பலியாக இருப்பேன்’’ காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தபோது மூப்பனார் சொன்ன வார்த்தைகள் இவை. ஆனால், இன்று உங்கள் பதவி ஆசைக்காக, நம் கட்சியை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் அடகுவைக்கத் துணிந்துவிட்டீர்கள். ‘கஜா புயல் வந்தபோது நான்தான் களத்தில் இறங்கி மக்களுக்குத் துணைநின்றேன்’ என விவசாயிகளின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் நீங்கள், இன்று விவசாயிகள் எதிர்க்கும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசிவருகிறீர்கள். போதாக்குறைக்கு, போராடும் எதிர்க்கட்சிகளையும், ‘விவசாயிகளுக்குத் துரோகம் இழைப்பதாக’ப் பேசி உங்கள் ராஜவிசுவாசத்தை டெல்லிக்குக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். காஷ்மீர், சி.ஏ.ஏ விவகாரங்கள் முதற்கொண்டு தானாக வலியச் சென்று முட்டுக் கொடுத்தீர்கள். இது உங்களுக்கே ‘அதிகம்’ என்று தோன்றவில்லையா? 2019-ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு வரை ‘விவசாயிகளுக்கு எதிரி பா.ஜ.கதான்!’ என்று திருவாய் மலர்ந்ததை மறந்துவீட்டீர்களோ!?


ஜி.கே.வாசன்

2018 டிசம்பர் மாதம், நம் கட்சியின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா அரியலூரில் நடைபெற்றது. அப்போது, “மத்தியிலும் மாநிலத்திலும் ஊழலாட்சிகள் நடைபெறுகின்றன, படேல் சிலை, பண மதிப்பிழப்பு, குட்கா ஊழல், சத்துணவு முட்டை ஊழல் நடைபெறுகின்றன’’ என மத்திய, மாநில அரசுகளைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்து, தேர்தலைச் சந்தித்தீர்கள். ஒரே ஒரு இடத்தில்தான் போட்டியிட்டோம்; அங்கேயும் மக்கள் நம்மை நிராகரித்தார்கள். ஆனாலும், புறவாசல் வழியாகச் சென்று, ராஜ்யசபா எம்.பி பதவியை வாங்கி வந்தீர்கள். அதற்குப் பிறகும்கூட நேர்மை-எளிமை-தூய்மை என்று நீங்கள் பேசிவருவதைக் கேட்கக் காது கூசுகிறது ஐயா.


உங்கள் தந்தையை ‘மக்கள் தலைவர்’ என்றும், உங்களை ‘மக்கள் தளபதி’ என்றும் நம் கட்சியினர் அடைமொழி இட்டு அழைப்பார்கள். ஆனால், இன்று நீங்கள் யாருக்குத் தளபதியாக சேவகம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். இவ்வளவு தூரம் இறங்கிவந்துவிட்ட நீங்கள், நாளை அமைச்சர் ஆவதற்காக என்னென்ன சொல்லப்போகிறீர்களோ... யார் யாரை ஆதரிக்கப்போகிறீர்களோ என நினைத்துப் பார்த்தால் ஒரு த.மா.கா தொண்டனாக கடும் அச்சமாக இருக்கிறது. `ஆர்ப்பாட்டமில்லாத அரசியல்வாதி’ என்று மூப்பனாரைச் சொல்வார்கள். உங்களையும் நீங்கள் அப்படி நினைத்துக்கொள்கிறீர்கள். ஆனால், அது உண்மையில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உங்களிடம் ஆர்ப்பாட்டமும் இல்லை; அரசியலும் இல்லை. தொண்டர்களாக எங்களுக்கு அரசியலில் மரியாதையும் இல்லை!


அரசியல்ரீதியாக உங்கள் தந்தையிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்களோ நடை, உடை, பேச்சு என அவரது உடல்மொழியை மட்டும் பாவனை செய்வதையே சாதனை என நினைத்து முடித்துக்கொண்டீர்கள். “செய்தித்தாள்களில் நான் நான்காவது பக்கத்தில் வந்தால் போதும், முதல் பக்கத்தில் வருவதற்கு நிறைய பிரயத்தனப்பட வேண்டும்” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். நோகாமல் நொங்குகூட தின்ன முடியாது... வியர்க்காமல் வேர்க்கடலைகூடத் தின்ன முடியாது ஐயா... நாம் செய்வதோ அரசியல்... நினைவில் இருக்கட்டும்!


- பழைய சைக்கிளின் பாகங்களைப் பரிதாபமாகத் தேடிச் செல்லும் த.மா.கா-வின் தொண்டன்


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment