Friday, October 16, 2020

கோமியம்... கிருமிநாசினி... வோட்கா... கோ கொரோனா கோ!

‘கொரோனா’வால் உலகின் அனைத்து நாடுகளுமே பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ‘நியூ நார்மல்’ வாழ்வுக்கு மக்கள் பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் கொரோனா வைரஸைப் பல தலைவர்களும் டீல் செய்தவிதம் இருக்கிறதே... அவற்றை ரீவைண்ட் செய்து பார்த்தோம்!


ராம்தாஸ் அத்வாலே

* இந்தியாவில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, மார்ச் மாதம் மும்பையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் `கொரோனா கோ, கோ கொரோனா’ என்று கோஷம் எழுப்பினார். இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனத் தூதரக அதிகாரிகளும், புத்தமதத் துறவிகளும் கலந்துகொண்டனர் என்பது கூடுதல் தகவல்.


* அஸ்ஸாம் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ சுமன் ஹரிப்ரியா, “மாட்டுக் கோமியமும் சாணமும் கொரோனா வைரஸை குணப்படுத்த உதவும்” என்றார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், மார்ச் 16 அன்று பா.ஜ.க நிர்வாகி நாராயண் சாட்டர்ஜி, `கொரோனாவை குணப்படுத்தும்’ என்று மாட்டுக் கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றையே நடத்தினார். நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கோமியத்தை வாங்கிக் குடித்த ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகவே, அவர் அளித்த புகாரின்பேரில் இரண்டே நாளில் நாராயண் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டார்.


* கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை” என்றார். பின்னர் ஏப்ரல் மாதம் 16-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மூன்று நாள்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும். அதன் பின்னர் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இருக்காது’’ என்று தெரிவித்தார்.

நம் நாட்டில் இப்படியென்றால்... வெளிநாடுகளில்?

* உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அதன் அதிபர் டிரம்ப்பின் உளறல்கள் உலகப் பிரசித்தம். ஆரம்பத்தில், வெள்ளை மாளிகையில் முகக்கவசம் அணியாமல்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிரம்ப். விமர்சனங்கள் வலுக்கவே, ஜூலை மாதம்தான் முகக்கவசம் அணிய ஆரம்பித்தார். அவருக்கும் `ஹாய்...’ சொன்னது கொரோனா. அக்டோபர் மாதம் 2-ம் தேதி, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, காரில் ஒரு ரவுண்டு வந்து சர்ச்சையில் சிக்கினார். இந்தக் கூத்தெல்லாம் போதாது என்று மருத்துவர்களையே சில கேள்விகள் கேட்டு அசரடித்தார். “கிருமிநாசினி ஒரு நிமிடத்தில் கொரோனா வைரஸை அழித்துவிடுகிறது என்கிறார்களே... அப்படியானால் கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தி உடம்பிலிருக்கும் கொரோனாவை அழிக்க முடியாதா?”, ‘`உடம்பில் யூ.வி கதிர்கள், சூரியஒளி போன்ற சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்க முடியுமா?” போன்ற டிரம்ப்பின் கேள்விகளால் மருத்துவ உலகமே தலையிலடித்துக்கொண்டது!

டிரம்ப் - ஜெய்ர் போல்சனாரோ - அலெக்ஸாண்டர்

* கொரோனா வைரஸை அதிக அலட்சியத்துடன் எதிர்கொண்ட உலகத் தலைவர்களில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்குத் தயங்காமல் முதலிடம் கொடுக்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பு, அந்த நாட்டில் உச்சத்தைத் தொட்டபோதும் அதை ‘சிறு காய்ச்சல்’ என்றே குறிப்பிட்டார். தொடர்ந்து, `கொரோனா வைரஸை எதிர்கொள்ள பிரேசில் மக்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பே பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் வந்து, உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருக்கலாம்’ என மருத்துவ ஆதாரங்களின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார். அவரையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. தனக்கு கொரோனா உறுதியானதைச் செய்தியாளர்கள் முன் அறிவித்தபோது, தன் மாஸ்கைக் கழற்றி, ``என் முகத்தைப் பாருங்கள். நான் நன்றாக இருக்கிறேன்” எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பில், பிரேசிலுக்கு மூன்றாவது இடம் என்பதுதான் ஹைலைட்!

* கொரோனா பரவல் உச்சத்திலிருந்தும், பெலாரஸ் நாட்டின் எல்லைகள் மூடப்படவில்லை, ஊரடங்கும் அமல்படுத்தப்படவில்லை. மேலும், ``மக்கள் முகக்கவசங்கள் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளி போன்ற எதுவும் தேவையில்லை” என்றார் அந்நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர். தொடர்ந்து, “ஊரடங்கு விதித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்” என்றவர், “மக்கள் ஒருவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டால், அதற்கு வீட்டு மருந்து எடுத்துக்கொண்டாலே போதும்” என்றார். இவரையும் கொரோனா தொற்றிக்கொண்டது. அதிலிருந்து மீண்டவர் “நான் எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளவில்லை. இது ஒரு மனநோய், அவ்வளவுதான். நாட்டு மக்கள் அனைவரும் வோட்கா குடிக்க வேண்டும். அதுதான் கொரோனாவை அழிக்கும்” என்று உலக விஞ்ஞானிகளையே அதிரவைத்தார்.

விமர்சித்தவர்களை ‘அப் நார்மல்’ மோடுக்குத் தள்ளிவிட்டு, மக்களை ‘நியூ நார்மல்’ வாழ்வுக்குப் பழக்கிக்கொண்டிருக்கிறது கொரோனா!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment