Thursday, October 22, 2020

கழுகார் பதில்கள்


@இல.கண்ணன், நங்கவள்ளி.


`அ.தி.மு.க எங்களுக்கு நெருக்கமான கட்சி’ என்று அமித் ஷா கூறியிருப்பது..?


அதனாலதான் முழிபிதுங்குற அளவுக்கு நெருக்குறாங்கபோலிருக்கு!


@அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.


வெறும் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தத்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியதா?


ஆர்ப்பாட்டமும் போராட்டமும் ஒரு ஜனநாயக அமைப்பில் மிக முக்கியமானவை. இல்லாவிட்டால், `இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனா’க ஆளுங்கட்சிகள் மாறிவிடும். அதேசமயம், வெறும் ஆர்ப்பாட்டம் மட்டுமே அடையாளமாகிவிட்டதால்தான் அந்தக் கட்சியின் இருப்பே போராட்டமாகிவிட்டது!


@RG


மோடி கூறிய `அச்சே தின்’ (நல்ல நாள்) வருமா... வராதா?


யாருக்கு?


@ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.


சம்பாதிப்பது முக்கியமா அல்லது சம்பாதித்ததைக் காப்பாற்றி, பெருக்குவது முக்கியமா?


இரண்டையும் நேர்மையான வழியில் செய்வதுதான் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியம்!


@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.


மீண்டும் ‘மக்கள் நலக் கூட்டணி’ உருவாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறதே?


எந்தக் கூட்டணி அமைந்தாலும், அது ‘மக்கள் நல’க் கூட்டணியாக அமைய வேண்டும் என்பதே நம் விருப்பம்!


@யாழினி, நாகப்பட்டினம்.


யாரைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும்?


‘தனது நாட்டில் நெய்யாத ஆடைகளை அணியும், தனது வயல்களில் அறுவடை செய்யாத உணவை உண்ணும் ஒரு நாட்டுக்காகப் பரிதாபப்படுங்கள். தனது நாடு மரணப் படுகுழியை நோக்கிச் செல்லும்போதுகூட, தன் எதிர்ப்புக் குரலை உயர்த்தாத, கலகம் செய்யத் துணியாத ஒரு நாட்டுக்காகப் பரிதாபப்படுங்கள். ஆட்சியாளர்கள் நரிகளாகவும், தத்துவ ஞானிகள் செப்படி வித்தைக்காரர்களாகவும் உள்ள ஒரு நாட்டுக்காகப் பரிதாபப் படுங்கள். நாடு துண்டு துணுக்குகளாகச் சிதறுண்டு, ஒவ்வொரு துண்டுப் பகுதியும் ஒரு நாடாக வேண்டுமென்று ஆசைப்படுகிற ஒரு நாட்டுக்காகப் பரிதாபப்படுங்கள்’ என்கிறார் கவிஞரும், ஓவியரும், சிற்பியும், எழுத்தாளருமான கலீல் ஜிப்ரான்.@சாமிநாதன், திருப்பூர்.


உடற்பயிற்சியைப் பற்றிப் பலரும் சொல்கிறார்கள். தினமும் ஒரு மணி நேரம் செய்யச் சொல்லி நண்பர்கள் வலியுறுத்துகிறார்கள். என்னால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. டிப்ஸ் ப்ளீஸ்!


கிரேக்க வீரர் மைலோவின் பாணியைப் பின்பற்றுங்கள். மைலோ மிகச்சிறந்த மல்யுத்த வீரர். தன் பலத்தை அவர் மெருகேற்றிக் கொள்வதற்காக சிறிய கன்றுக்குட்டி ஒன்றைத் தூக்க ஆரம்பித்தார். தினமும் அதைத் தூக்கி, பயிற்சி செய்வார். அது வளர வளர, இவரது பலமும் வளர்ந்து, அது பெரிய காளை மாடாக ஆனபோது அதை அநாயாசமாக அவரால் தூக்க முடிந்தது. பின்னாளில் ஒலிம்பிக்கில் வீழ்த்த முடியாத மல்யுத்த வீரராகப் புகழ்பெற்றார்.


முதல் வாரம் அதிகாலையில் எழுந்துகொள்ளப் பழகுங்கள்... படுக்கையில் அமர்ந்தபடியே மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அடுத்த வாரம் வாக்கிங் செல்லப் பழகுங்கள். அதன் பிறகு, வீட்டிலேயே செய்யும் உடற்பயிற்சியைச் செய்ய ஆரம்பியுங்கள். சின்னச் சின்னதாக ஆரம்பித்தால் எதுவும் சுலபம்தான்!


@ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.


ரஜினிகாந்த் கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர்?


அட! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிச்சுட்டாரா... சொல்லவேல்ல?


@அ.யாழினி பர்வதம், சென்னை.


சுந்தர்.சி மூளைச்சலவை செய்து நிர்பந்தித்ததால்தான் குஷ்பு பா.ஜ.க-வுக்குத் தாவியதாகத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா கூறியிருப்பது பற்றி..?


தி.மு.க-விலிருந்து காங்கிரஸுக்கு அவர் தாவி வர யார் மூளைச்சலவை செய்தார்களாம்?


@மாடக்கண்ணு, பாப்பான்குளம்.


தேர்தல் என்றாலே வேட்பாளர்கள் ‘வாழ்வா, சாவா’ என்று புலம்புவது ஏன்?


அப்புறம்? பயம் இருக்கத்தானே செய்யும்... போட்ட முதலை எடுக்கணும் இல்ல பாஸ்?


@ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.


அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பால் புதிதாக என்ன நடக்கப்போகிறது?


அதானே... புதுசா என்ன நடக்கப்போகுது!


@மா.வெங்கடேஷ்வரன், பவானி.


எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர்போலக் காண்பித்துக்கொள்ள ஆசைப்படுகிறாரா... ஜெயலலிதா போலக் காண்பித்துக்கொள்ள ஆசைப்படுகிறாரா?


அவர் தன்னை எடப்பாடி பழனிசாமியா காட்டிக்கறதுக்கே பெருசா போராட வேண்டியிருக்கே வெங்கடேஷ்!


@வண்ணை கணேசன், சென்னை.


`மதில்மேல் பூனை’ என்று யாரைக் கூறலாம்?


இரண்டு திராவிடக் கட்சிகளில் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று காத்திருக்கும் கட்சிகளைத்தான்!@வெங்கை. சுபா.மாணிக்கவாசகம், தெக்கலூர்.


மக்களுக்கு நல்லாட்சி அமைக்க தானே முயன்று ஒரு கூட்டணியை உருவாக்கினார், அதில் வெற்றி இல்லை. பிறகு, நல்ல வேட்பாளர் களையும் நிறுத்தினார், டெபாசிட்டே இல்லை. ஆக, ஒர் ஈர்ப்பு தேவைப் பட்டதால் ரஜினியை முன்மொழிகிறேன் என்கிறார் தமிழருவி மணியன். முயன்று முடியாததால், அடுத்தடுத்த முயற்சியில் ஈடுபடுவதில் என்ன தவறு?


திட்டங்கள் தோல்வியுறும் போது, வேறொரு முயற்சியில் ஈடுபடுவது தவறே இல்லை. அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியுறும்போது சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது.@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.


பிரேசில் அதிபர் போல்சனாரோ, கொரோனாவை அலட்சியப்படுத்தியவர். தற்போது அங்கு என்ன நிலைமை?


திங்கள்கிழமை வரை 52,35,344 பேர் பாதிக்கப்பட்டு 1,53,905 பேர் இறந்திருக் கிறார்கள். உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் பிரேசில் இருக்கிறது. மக்கள்தொகை அடிப்படையில் பார்க்கும்போது பாதிப்பு, இறப்பு விகிதம் இரண்டுமே மிக அதிகம்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment