Monday, October 19, 2020

கழுகார் பதில்கள்!

@அருண் சின்னப்பன், திருச்சி.


மிக உயர்ந்த பதவிக்குப் போகும் பெண்களும் எதிர்கொள்ளும் சிக்கல் என்ன?


இந்திரா நூயி தெரியுமல்லவா... பெப்சிகோவில் அவர் பணிபுரிந்தபோது நடந்தது இது. ஒருநாள் இரவு அலுவலகத்திலிருந்த இந்திராவுக்கு அவரின் பாஸ் ரோஜர் என்ரிகோவிடமிருந்து போன் வருகிறது. “இந்திரா... உன்னை பெப்சிகோவின் பிரசிடென்ட்டா நியமிக்க இருக்கோம். உனக்குச் சம்மதம்தானே?” என்கிறார் ரோஜர். ‘எவ்வளவு பெரிய பொறுப்பு’ என்று பெருமகிழ்ச்சியுடன் மடமடவெனப் பணிகளை முடித்து வீட்டுக்கு வந்து அம்மாவிடம், “அம்மா, எனக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைத்திருக்கிறது” என்றார். “அதெல்லாம் இருக்கட்டும், உடனே போய் பால் பாக்கெட் வாங்கிட்டு வா” என்று சாதாரணமாகச் சொன்னார் அம்மா. அப்போது இந்திராவின் கணவர் ராஜ் வீட்டில்தான் இருக்கிறார். “ராஜ் நேரத்துல வந்து, வீட்லதானே இருக்கார். அவர்கிட்ட சொல்லலாமே?” என்று கேட்கிறார் இந்திரா. அவரின் அம்மாவோ, “மாப்பிள்ளை ஆபீஸ் வேலையா அலைஞ்சு டயர்டா வந்து தூங்குறார். அவரை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நீ போயிட்டு வா” என்கிறார்.


எவ்வளவு உயர்ந்த பதவிக்குப் போனாலும், எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் பெண்களின் வேலைத்திறன் குறைத்து மதிப்பிடப்படுவதுதான் சிக்கல்.


இந்திரா நூயி

@ஜெ.நெடுமாறன், ராமாபுரம்.


தி.மு.க-வில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி அதற்குள் தொடங்கிவிட்டதே..?


தேர்தல் அறிக்கையென்ன... ‘திருவெண்காடு சகோதரிகள்’ மந்திரிகள் பட்டியலையே தயாரித்துவருகிறார்களாம்!


@சம்பத்குமாரி, பொன்மலை.


40 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக இருந்தபோது செய்த கொலைக்கு, இப்போது 58 வயதான ஒருவருக்கு சிறார் சட்டப்படி தண்டனை வழங்கச் சொல்லி வழக்கை இளம் சிறார் நீதி வழங்கு வாரியத்துக்கு அனுப்பியிருக்கிறதே உச்ச நீதிமன்றம்?


இந்த இதழின் 58 வயதில் சிறார் சீர்த்திருத்தப் பள்ளிக்குச் செல்ல முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்காகத்தான்... படியுங்கள்!


@கே.முரளி, விழுப்புரம்.


ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரில் யார், யாரிடம் சரண்டர் ஆனார்கள்?


இரண்டு தலைகளும் எப்போதும் வணங்கிக் கொண்டிருப்பது ‘தலைநகர’த்தைத்தானே பாஸ்!@முரளி, சென்னை.


தர்மயுத்தம், கீதோபதேசம்... இரண்டில் பன்னீருக்கு அதிக பலன் தந்தது எதுவோ?


சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்ற ‘ரெய்டோ’பதேசம்!


@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.


காத்திருத்தலைச் சுகமாக்குவது எது?


எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதில் இருக்கிறது சுகமும் துக்கமும்!


@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.


எது புனிதமானது?


இந்த உலகில் ‘எதுவுமே புனிதம் இல்லை’ என்கிறது பின் நவீனத்துவம். ‘புனிதப்படுத்துவது ஒருவித பாசாங்கு; சுரண்டல்’ என்கிறது அதன் அணுகுமுறை. அவ்வளவு கறார் காட்டாமல் ஒரு பதில் சொல்ல வேண்டுமென்றால், பிறர் வலி உணர்ந்து கண்ணீர் சிந்தும் மனதை, `புனிதம்’ என்று சொல்லலாம்! இதுவும்கூட மனிதருக்கு இருக்க வேண்டிய அடிப்படை குணம்தான். என்ன ஒன்று... அரிதாகக் கிடைக்கும்போதுதான் அது பொக்கிஷமாகவும் புனிதமாகவும் ஆகிறது!


@சுந்தர், வல்லம், தஞ்சாவூர்.


இனிப்பு எப்போது கசக்கும்?


இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலுள்ள ஜாவா, சுமத்ரா, மொரீசியஸ் போன்ற காலனி நாட்டு வெப்ப மண்டலத் தீவுகளில் காலனிய ஆட்சியாளர்களால் கரும்பு பயிரிடத் தொடங்கப்பட்டது. வணிகம் பெருகப் பெருக, இந்தப் பணிக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். தமிழர்கள் உட்பட பல்வேறு காலனி நாடுகளின் மக்கள், அடிமைகளாக அங்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அந்த மக்கள்... குறிப்பாக, பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த வன்முறைகள், பாலியல் துன்பங்கள் சொல்லி மாளாது. இது குறித்து ‘கரும்புத் தோட்டத்திலே’ என்றொரு பாடலை எழுதியிருக்கிறார் பாரதி. ‘ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ?... அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்...’ என்ற வரிகளை வாசிக்கும்போது, கரும்பின் இனிப்பும் நமக்குக் கசக்கும்!


@வினோத்குமார், கோவை.


கலாய்த்துக்கொண்டே இருப்பவர்களை அடக்குவது எப்படி?


நக்கல் செய்வதில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘திருமதி பழனிசாமி’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன், குரங்கை ஹீரோவாக வைத்து ஒரு கதையைத் தயார் செய்து, தானே தயாரித்து இயக்கும் திட்டத்தில் இருந்தார். ‘திருமதி பழனிசாமி’ படப்பிடிப்புக்கு 20 நாள்கள் ஓய்வுகொடுத்து, அந்த நாள்களில் தனது படத்தை இயக்கிவிட்டுத் திரும்பினார்.


‘திருமதி பழனிசாமி’ படப்பிடிப்பு 75 நாள்களைக் கடந்தும் சென்றுகொண்டிருந்தது. இதைவைத்து சத்யராஜ், சுந்தர்ராஜனிடம் நக்கலாக, “மத்த தயாரிப்பாளர்னா 75 தாண்டியும் டைரக்ட் பண்ணிட்டிருப்பீங்கணா. அதே உங்க சொந்தப் படம்னா இருபது நாள்ல முடிச்சுருவீங்கள்ல?” என்று கேட்டார். அதற்கு சுந்தர்ராஜன், “என்னப்பா பண்றது... குரங்கு சரியா நடிச்சுக் கொடுத்துருச்சே!” என்றாராம். அதற்குப் பிறகு சுந்தர்ராஜனிடம் பார்த்துத்தான் பேசுவாராம் சத்யராஜ். எனவே, சமயம் வரும்போது திருப்பி ‘நச்’சென்று கலாய்ப்பதுதான் ஒரே வழி!


@நடூர் மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.


அ.தி.மு.க-வில் எடப்பாடி-பன்னீர் தவிர யாரெல்லாம் முதல்வர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள்?


கடைக்கோடித் தொண்டனும் வரலாம்... இவர்களைப்போல கனத்த கஜானா வைத்திருந்தால்!


@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.


அதிகாரத்தில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா?


அதிகாரம் எதற்கு? பிறர் துன்பம் உணரும் மனமும், உதவும் குணமும், அறம் சார்ந்த எண்ணமும் இருந்தால் போதும் வெங்கடேசன்.


@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.


தற்போது எம்.ஆர்.ராதா இருந்தால், ராதாரவிக்கு என்ன சொல்லியிருப்பார்?


‘‘சொந்தக் கால்ல நின்னவன் நானு... நீ சொந்தக் குரல்லயாவது நில்லு மேன்!’’@இல.கண்ணன், நங்கவள்ளி.


தனக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்துக்கு 6.50 லட்சம் ரூபாய் சொத்துவரி கட்ட மறுத்த ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறதே..?


கொரோனா பேரிடர்கால பெரு நஷ்டத்திலும் சிறு, குறு தொழில் செய்பவர்களும், பகுதி ஊதியம் வாங்குபவர்களும் தவறாமல் வரி செலுத்திவருகிறார்கள். சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்பவர் சற்று சிந்தித்திருக்க வேண்டாமா!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment