Wednesday, October 07, 2020

கழுகார் பதில்கள்

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு.


நம் நாட்டில் அரசியல் எப்போது புனிதமாகும்?


‘ஐயோ... பாலிட்டிக்ஸே எனக்கு ஒத்து வராது... அது ஒரு சாக்கடை’ என்று சொல்வது ஃபேஷனாகிவிட்டது. இந்த நிலை மாறி, இந்நாட்டின் இளைஞர்கள், ‘எங்களுக்கு அரசியல் பிடிக்கும்’ என்று அரசியலில் இறங்கி காத்திரமாக விமர்சிக்கும்போதும், தயக்கமின்றி கேள்விகளைக் கேட்கும்போதும் தான் அரசியல் புனிதமடையத் தொடங்கும்.


@அருண், மாடம்பாக்கம்.


வாழ்க்கைகே விரக்தியாக இருக்கிறதே கழுகாரே?


இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரு சிறு பயணம் வந்திருக்கிறோம். இதில் எல்லாவற்றையுமே படிப்பினையாகவும் அனுபவமாகவும் எடுத்துக்கொண்டு, எஞ்சிய பயணத்தை மகிழ்ச்சியாகத் தொடர்வோம் அருண்!


@கா.கு.இலக்கியன், செங்குன்றம்.


உத்தரப்பிரதேச காவல்துறை, ராகுல் காந்தியிடம் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?


ராகுல் காந்தியிடம் நடந்துகொண்டது முறையற்றது. அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் நடந்துகொண்டது காட்டுமிராண்டித் தனத்தையும் மிஞ்சிய செயல்.@கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.


‘முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பொம்மையல்ல’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறாரே..?


ஆம், மூர் மார்க்கெட்டில் கிடைக்காது. கூவத்தூரில்தான் கிடைக்கும்!


@பா.ரேஷ்மா, வந்தவாசி.


`தியாகம்’ என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் அன்னை தெரசாதானா?


அன்னையர் அனைவருமேதான்!


@ஸ்ரீகாந்த் ரமேஷ், விருதுநகர்.


`இன்றைய காலகட்டத்திலும் தேவையான தலைவர் காந்தி’ என்று எனக்குத் தோன்றுவது சரிதானா?


ஏராளமான மொழிகளும் பல வகையான பண்பாடுகளும்கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பு, மிக முக்கியமான ஒரு வரலாற்றுச் சூழலில், `சகோதரத்துவம்’ எனும் உணர்ச்சியால் தைக்கப்பட்டு `இந்தியா’ எனும் தேசமாகியிருக்கிறது. இந்த உண்மையை மிக ஆழமாக காந்தி அளவுக்கு வேறொரு தலைவர் உணர்ந்திருக்கிறாரா என்று தெரியவில்லை. மதச்சார்பின்மை, சுயபரிசோதனை, சுயவிமர்சனம், கிராமப் பொருளாதாரம், பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம், நுகர்வு வெறிக்கு எதிரான சுயச்சார்பு, சகிப்புத்தன்மை என காந்தி முன்வைக்கும் அரசியல் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றைக்கு ‘சுயநலமற்று எல்லோருக்கும் பொதுவாக உண்மையாகப் பேச ஒரு தலைவன் வேண்டும்’ எனும் காரணத்துக்காக ‘காந்தி’ நமக்கு உடனடியாகத் தேவைப்படுகிறார்!@மாலதி, துரைப்பாக்கம்.


என்னதான் ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்று பேசினாலும் நான் வேலைக்குப் போய்வந்து, நானேதானே வீட்டு வேலையும் செய்ய வேண்டியிருக்கிறது... இது எப்போது மாறும்?


பால் பாக்கெட் வந்தால் அதை அப்பாவிடமும், தினசரி பேப்பர் வந்தால் அதை உங்களிடமும் கொடுக்கச் சொல்லி உங்கள் குழந்தைக்குப் பழக்குங்கள்... இந்த நிலை நிச்சயம் மாறும்!


@எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


ஒரு கட்சி தொடங்க வேண்டுமெனில் என்னென்ன தேவை?


தெருமுனையில் டீக்கடை ஆரம்பிக்கக்கூட மூலதனம், அனுபவம், ஆட்கள் என்று நிறைய தேவை. ஆனால், கட்சி தொடங்க இப்படி எதுவுமே தேவையில்லை!


@சம்பத்குமாரி, பொன்மலை.


‘வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், உதயநிதி தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றிபெறுவார்’ என்று டி.ஆர்.பாலு பேசியிருப்பது ‘எஜமான விசுவாசத்தை’க் காட்டுகிறதா?


கேள்வியையும் கேட்டுவிட்டு, பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்களே சம்பத்குமாரி!


@மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.


‘வைகைப்புயல்’ வடிவேலு மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் கலக்கும் காலம் வருமா, வராதா?


வடிவேலுவை இனி வடிவேலுவே வெல்ல முடியாத அளவுக்கு அவர் உச்சம் தொட்டு விட்டார். வடிவேலுவின் வார்த்தைகள் பழமொழிகளாக மாறிவிட்டன; அவரது நடிப்பு, உச்சரிப்பு தொனிகளெல்லாம் அனைத்துத் தரப்புகளுக்குமான புதிய விமர்சன உத்திகளாகிவிட்டன. வடிவேலு, தமிழ்ச் சமூகத்தின் ஒரு தொன்மமாகவே மாறிப்போய் விட்டார். சில அற்புதங்கள் இரண்டாம் முறை நிகழ்வது சாத்தியமில்லை.@சரவணன், மேலூர்


வேலை ஒருபுறம்... எனக்குப் பிடித்த இசை ஆர்வம் ஒருபுறம் என்று இருக்கிறேன். இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது தவறா?


ஸ்ரீபாதா பினாகபாணி. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியிலும், ஆந்திரா மருத்துவக் கல்லூரியிலும் பணிபுரிந்த மருத்துவப் பேராசிரியர்களில் முக்கியமானவர் இவர். அதேநேரம், பல சிஷ்யர்களை உருவாக்கிய கர்னாடக சங்கீத வித்வானாகவும் திகழ்ந்தார். தனது கலைச் சேவைக்காக பத்மபூஷண் விருதைப் பெற்றவர்.


வேலை உங்கள் பையை நிரப்பும் எனில், கலை உங்கள் மனதை நிரப்பும். இரண்டிலும் உத்வேகத்துடன் பயணியுங்கள். பயணத்தின் இலக்கைப் பாதைகள் தீர்மானிக்கட்டும்!


@பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.


நடிப்பால் மக்கள் மனம் கவர்ந்த நடிகர்கள், அரசியலில் நுழைந்து அதே மக்களால் புறக்கணிப்படுவது ஏன்?


அரசியல் நடிப்பில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களுடன் போட்டிபோட முடியாததால்தான்.


@மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.


இன்றைய உலக நாடுகளுக்கு கொரோனா சொல்லும் செய்தி என்ன?


‘அத்தியாவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு வாழுங்கள்’ என்று மனிதனுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது!


@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.


அமெரிக்காவைப்போல தமிழகத் தேர்தலிலும் ‘நேருக்கு நேர்’ விவாதம் இருந்தால் எப்படியிருக்கும்?


அப்படி ஓர் ஆரோக்கியமான விவாதம் நடக்காதா என்ற ஏக்கம் உங்களைப்போலவே எனக்கும் நீண்டநாள்களாக உண்டு!


@மைக்கேல், சாத்தூர்.


பெரிய கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களை ஊடகங்கள் விவாதிப்பது சரிதானா?


கட்சி என்பதே மக்களுக்கானதுதானே மைக்கேல்? அது ஒன்றும் பிரைவெட் கம்பெனி அல்லவே? பொதுமக்களுக்குச் சேவை செய்கிறோம் என்று வருபவர்களின் விஷயங்கள், பொதுவெளியில் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானதுதான்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment