@இந்துகுமரப்பன், விழுப்புரம்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு என்ன விருது கொடுத்தால் அது கௌரவமாக இருக்கும்?
அவர் மறைந்த சோகம் தாங்காமல், மக்கள் சிந்திய கண்ணீரைவிடவா பெரிய விருது இருக்கப்போகிறது!
@செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
நதிகள் இணைப்புத் திட்டம் என்னவானது.?
ஹஹாஹா... நதிகளுக்கே வெளிச்சம்!
@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
எது வலிமை - நேர்மை... பொறுமை ?
நேர்மையாக... பொறுமையாக வாழ்வது வலிமை!
@தாமஸ் மனோகரன், உழவர்கரை.
செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் இவர்களுடன் கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்களைச் சரியாகப் பொருத்துங்களேன்!
அப்படி ஒப்பிட முடியாது. காமெடியில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்!
@P.அசோகன், கொளப்பலூர்.
விஷயம் தெரிந்த வாசகர், விஷயம் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்... இருவரில் கழுகாருக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?
கழுகாரின் பார்வைக்கு இரண்டு கண்களும் அவசியம்!
@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.
‘ஐ.நா-வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து இந்தியாவை எத்தனை காலம்தான் தள்ளிவைப்பீர்கள்’ என்று பிரதமர் மோடி கேட்டிருக்கிறாரே..?
ஐ.நா-வின் முடிவெடுக்கும் அமைப்புகளில் அங்கம்வகிப்பது முக்கியம்தான். இந்த தேசமே நடையாய் நடந்தபோது (புலம்பெயர் தொழிலாளர்கள்), பொருளாதார வீழ்ச்சியின்போதெல்லாம் மௌனம் காக்கும் மோடி, இதைப் போன்ற விஷயங்களைப் பேசி கவனம் ஈர்ப்பதில் வல்லவராக இருக்கிறார். உள்ளூரில் முடிவெடுக்க வேண்டிய விஷயங்களெல்லாம் முடிந்தாயிற்றா?
@மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர்.
ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால்..?
புதிய வேளாண்மைச் சட்டங்கள், வேலைவாய்ப்பின்மை என அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகள் பல இருக்க, நடிகைகள் - போதை மருந்து சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம். நாம்தானே, ஒன்றுபடுவதுதானே... நடக்காத விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பதில் நமக்குத்தான் எத்தனை ஆனந்தம்!
@எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
பள்ளி, கல்லூரிகளையும் திறந்துவிட்டால் இயல்பு வாழ்க்கை திரும்பியதுபோல்தானே?
சினிமா தியேட்டரை விட்டுட்டீங்களே? இயல்பெல்லாம் திரும்ப வாய்ப்பேயில்லை மிக்கேல்ராஜ். இனி ‘புதிய இயல்பு’தான்!
@தருண் பாலு
நல்லதைக் கண்டுபிடிப்பது எப்படி?
சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிமையாக இருக்கும். கடைப்பிடிக்கக் கடினமாக இருக்கும்.
@லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல்.
அழகிரியால் தி.மு.க-வுக்கு ஆபத்து என்றால், அ.தி.மு.க-வுக்கு யாரால் ஆபத்து வரும்?
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
@கி.விஜய்
வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஐய் போட்டியிட்டால் எத்தனை தொகுதியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது?
ஏற்கெனவே 2018-ல் அவர் அரசியலுக்கு வந்து, தேர்தலில் நின்று ஜெயிச்சாரே... ‘சர்கார்’ படத்தில். சினிமாவில்தானே கேட்கிறீர்கள்?
@மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.
ரஜினிகாந்துக்குத் தமிழகத்தில் உண்மையிலேயே ஒரு புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து, அரசியலில் ஒரு திருப்பத்தைத் தரும் உத்தேசம் உண்டா?
‘மனிதன் பின்பற்றக் கூடாத ஒரே மதம், தாமதம்’ என்ற கண்ணதாசனின் வரிதான் நினைவுக்கு வருகிறது.
@மோகன்ராஜ், நல்லூர்பாளையம்.
காங்கிரஸ் கரை சேருமா?
கடுங்காற்றில், நடுக்கடலில்... கப்பல் கேப்டனுக்கான செலக்ஷன் நடந்துகொண்டிருக் கிறது. அசம்பாவிதம் நிகழாமல் கரைசேர்த்தால் நல்லது!
@சரவணகுமார் சின்னசாமி
பாடல்களை சாகாவரம் பெற்று நிலைத்து நிற்கச் செய்வது பாடலின் வரிகளா, பாடகரின் குரல்வளமா, இசையின் ஆழமா?
“மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே...” எனும் பாடலுக்குக் குரலோ இசையோகூட முக்கியமில்லை, அதை ஒருவர் சாலையில் நின்று உரக்கக் கத்தினால்கூட போதும். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல... வளரும் விழி வண்ணமே’ என்ற பாடல் வரிகளின் மீது பாசத்தின் மென்மையை இழைத்துப்பூசும் ஒரு மந்திரக் குரல் அவசியம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ... பருவ நாடகம் தொல்லையோ...’ என்கிற பாடல் வரிகளுக்கோ, மனக்குகையில் பதுங்கிக்கிடக்கும் நினைவுகளைக் கிளறும் குரலும், கடந்த காலத்தின் காட்சி பிம்பங்களைக் காட்டும் இசையும் அவசியம். மூன்றுமே சாகாவரம் பெற்றவை. சில தனித்துக் காலம் கடக்கும்; பல கலந்து காலம் கடக்கும்.
@பழ.இராமன், கிருஷ்ணராயபுரம்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் அதிகமாகச் சுற்றுப்பயணம் செய்வது நமது முதல்வர் பழனிசாமி மட்டுமே. முகக்கவசம், சமூக இடைவெளி என்று ஏதும் இன்றி அவரது படையும் பரிவாரங்களும் அவரைத் தொடர்கின்றனர். இது, ‘ஊருக்குத்தாண்டி உபதேசம்... உனக்கும் எனக்கும் இல்லை’ என்ற கிராமத்துப் பழமொழியை நினைவூட்டுகிறதே?
உங்களின் கேள்விக்காகத்தான் இரண்டு பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறோம் இராமன். 18-19 பக்கங்களைப் பார்த்தீர்கள்தானே!
@பாரதி முருகன், மணலூர்பேட்டை.
அரசியலில் மறைமுக எதிரி யார்?
உடனிருப்பவர்கள்.
@பாரதிபுத்திரன், காஞ்சிபுரம்.
மனவருத்தம் இருந்தால் என் மனைவி எதுவுமே பேசுவதில்லை. அதுவே எனக்கு டென்ஷனாகிறது. ஏன் அப்படி இருக்கிறார்கள்?
எய்யப்படாத அம்பு, பேசப்படாத வார்த்தை இரண்டுமே எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
@குணசேகரன், ராமநாதபுரம்.
நீங்கள் சமீபத்தில் ரசித்துப் படித்த ஒரு கேள்வி பதில் எது?
ஒரு பேட்டியில் ஒரு பதிலைப் படித்துவிட்டு ரொம்ப நேரம் அமைதியாக இருந்தேன்.
கேள்வி: இந்த இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் அரசியலில் இறங்கலாமே?
பதில்: நிச்சயமா என்னால முடியாது. ‘அரசியலுக்குப் போனா நான் கொலைகாரன் ஆயிடுவேன்’னு ரஜினி சொன்னது ரொம்பவும் உண்மை. அவர் சொன்னதுக்குக் காரணம் அவர் temperament. எனக்கும் அதே மனநிலைதான். இறங்கினா ‘மெஷின் கன்’னை எடுத்துக்கிட்டுப்போய் எல்லாரையும் சுடற எண்ணம் வந்தா ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம். நான் ஒரு False Messaiah-வாகத்தான் இருப்பேன். என்னால முடியாது.”
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதிலைச் சொன்னவர் கமல்.
No comments:
Post a comment