“தூங்கறதுக்கு 10 நிமிஷத்துக்கு முன்னாடி எங்களைப் பத்தி யோசிங்க..!” எனக் கண்ணீருடன் கதறிய அந்தக் காடர் பழங்குடிப் பெண்ணின் குரலைக் கேட்டால், கல் நெஞ்சும் கரையும். கோவை மாவட்டம், வால்பாறை அருகே ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் மூத்த பழங்குடிகளான காடர் மக்களின் கல்லாறு கிராமம், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சிதைந்துவிட்டது. உயிரைக் கையில் பிடித்தபடி, வனத்தின் வேறு பகுதிக்குக் குடியேறிய காடர்களை, வனச்சட்டத்தைக் காரணம் காட்டி வெளியேற்றியது வனத்துறை.
பிறகு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக லைன் வீடுகளில் காடர்கள் தங்கவைக்கப் பட்டனர். “விரைவில், உங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்” என அதிகாரிகள் கூறினர். ஆனாலும், அங்கு அந்த மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். இது தொடர்பாக, 1.9.2019 தேதி ஜூ.வி இதழில், “எங்க மூச்சு அடங்குனா... அது காட்டுக்குள்ளதான் அடங்கணும்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம். ஓராண்டைக் கடந்தும் அந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாத சூழலில், “கறார் வனத்துறை, கண்ணீரில் காடர்கள்” என்ற தலைப்பில் 20.9.2020 தேதி ஜூ.வி இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
இதையடுத்து வனப்பகுதிக்குள், அந்த மக்கள் கேட்ட தெப்பக்குளம் மேடு பகுதியில் மாற்று இடம் வழங்க நிலம் அளவிடும் பணி நடந்திருக்கிறது. முமுவதும் இருள் சூழ்ந்திருந்த காடர்களின் வாழ்வில், நம்பிக்கை ஒளி சுடர்விட்டிருக்கிறது. மகிழ்ச்சியுடன் பேசினார் அந்த மக்களில் ஒருவரான ராஜலட்சுமி. “ஒரு வருஷத்துல நிறைய போராட்டம் பண்ணினோம். வனத்துறை அதிகாரி, ‘நீங்க கேக்குற இடத்துல உங்களுக்கு இடம் கொடுக்க முடியாது’னு ரெண்டு தடவை தபால் போட்டார். ஆனா, அந்த இடம்தான் வேணும்னு உறுதியா இருந்தோம். இப்ப அதே இடத்துல சர்வே பண்ணினது சந்தோஷமா இருக்கு. ஒரு வீட்டுக்கு ரெண்டு சென்ட் அளவுனு சர்வே பண்ணியிருக்காங்க. எங்க மக்கள் எல்லாருமே `எப்படா பட்டாகெடைச்சு அங்க குடிசை போடுவோம்’கிற ஆசையில இருக்காங்க. இனி எங்களுக்கு நல்லது நடக்கும்னு நம்புறோம். ஜூனியர் விகடனுக்கு நன்றி” என்றார் மகிழ்ச்சி பொங்க.
ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குநர் (பொறுப்பு) அன்வர்தீன், “பழங்குடிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் அணுகியிருக்கிறோம். நில அளவை என்பது முதல்படி. அதன் பிறகு, பல்வேறு துறைகளை இணைந்து ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்புவோம். அரசு ஒப்புதல் அளித்தவுடன் பட்டா வழங்குவோம்” என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, “அவர்கள் கேட்ட இடத்திலேயே நில அளவை செய்திருக்கிறோம். நிலம் கொடுப்பதற்கு இங்கு ஒப்புதல் அளிக்க முடியாது. அதனால், அரசுக்கு ஒரு பரிந்துரை வழங்குவோம்” என்றார்.
இந்த ஒற்றைச் சுடர் வெளிச்சம் முழுமையாகிப் பரவி... காடர்களின் வாழ்க்கை நிரந்தரமாக ஒளிர வேண்டும்!
No comments:
Post a comment