Friday, October 16, 2020

நீதிபதியை எதிர்க்கும் ஜெகன்... சுற்றிவளைக்கும் வழக்குகள் காரணமா?

நிஜ வாழ்க்கையில் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பல சம்பவங்களின் தொகுப்பாக தெலுங்கு அரசியல் திரைப்படங்கள் இருக்கும். ஆந்திர அரசியலோ அதைவிட இன்னும் காரமாக இருக்கும். ‘எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து சதி செய்கிறார்கள்’ என உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா பற்றியும், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் பற்றியும் கடிதம் எழுதியிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய இந்த எட்டுப் பக்கக் கடிதத்தில் நீதிபதி ரமணாமீது ஊழல் குற்றச்சாட்டும் வைத்திருக்கிறார் ஜெகன். சுதந்திர இந்திய வரலாற்றில் நீதிபதிகள் பற்றி இப்படிக் குற்றம் சுமத்தி ஒரு மாநில முதல்வர் கடிதம் எழுதுவது இதுவே முதன்முறை.


அக்டோபர் 6-ம் தேதி டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார் ஜெகன். அதே நாளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. தலைமை நீதிபதி இதைப் பரிசீலிப்பதற்கு முன்பாகவே, அக்டோபர் 10-ம் தேதி அவசரமாக இந்தக் கடிதத்தின் நகலை வெளியிட்டார் ஜெகன்.


ஜெகன் குறிவைக்கும் நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். இன்னும் ஆறு மாதங்களில் அவர்தான் தலைமை நீதிபதி பதவிக்கு வர வேண்டும். 2021, ஏப்ரல் 24 முதல் 2022 ஆகஸ்ட் 26 வரை அவர்தான் தலைமை நீதிபதியாகப் பதவிவகிக்க வேண்டும். இந்த நேரத்தில் அவர்மீது என்ன குற்றச்சாட்டு... ஏன் குற்றச்சாட்டு?


ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில், எதிர்க்கட்சிகளைவிட நீதிமன்றங்களுடன்தான் அதிக நேரம் மல்லுக் கட்டியிருக்கிறார் ஜெகன். அவரது அரசு எடுத்த சுமார் 100 முடிவுகளுக்கு எதிராக ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆந்திராவின் தலைநகரை அமராவதியிலிருந்து மாற்றும் விவகாரம், ஆந்திர சட்ட மேலவையைக் கலைக்கும் முடிவு, ஆந்திர மாநிலத் தேர்தல் ஆணையர் ரமேஷ்குமாரை நீக்கும் உத்தரவு, கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கொடியின் வண்ணத்தில் பெயின்ட் அடிக்கும் முயற்சி... எனப் பல விஷயங்களில் அரசு முடிவுக்குத் தடைபோட்டது நீதிமன்றம்.


ஜெகன் மோகன் ரெட்டி - என்.வி.ரமணா

கொரோனா நேரத்தில், விசாகப்பட்டினத்தில் அரசு மருத்துவர் சுதாகர் ராவை போலீஸார் சித்ரவதை செய்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகளை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் ஆளும்கட்சியினர் பதிவுகள் வெளியிட்டனர். சபாநாயகர், துணை முதல்வர் ஒருவர், எம்.பி-க்கள் எனப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ‘‘முன்பு தெலுங்கு தேசம் கட்சிக்கு வேலை பார்த்தவர்கள், இப்போது நீதிமன்றத்தில் இருந்துகொண்டு அதே வேலையைப் பார்க்கிறார்கள்’’ என்று போக்குவரத்து அமைச்சர் வெங்கட்ராமையா வெளிப்படையாகச் சொன்னார். இப்படி விமர்சனம் செய்த சிலர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியுமாறு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.


இந்தச் சூழலில்தான் ஜெகன் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். ‘கடந்த ஆட்சியில் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சியினரும் சட்டவிரோத வழிகளில் ஏராளமான பணம் சேர்த்திருக்கிறார்கள். அது பற்றி விசாரித்து, அவர்களைச் சட்டத்தின் முன்பு நிறுத்த முயல்கிறோம். ஆனால், எங்கள் முயற்சியை நீதிமன்றம் தடுக்கிறது’ எனக் குற்றம் சாட்டுகிறார் ஜெகன். அவர் சொல்பவை, மிக மோசமான குற்றச்சாட்டுகள்.


‘அரசின் கொள்கை முடிவுகள், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் எல்லாமே சேஷசாய், சத்யநாராயண மூர்த்தி, சோமயாஜுலு, டி.ரமேஷ் ஆகிய நான்கு நீதிபதிகளுக்கே ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு தருகிறார்கள். ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி வாயிலாக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா. அவரும் நீதிபதிகளும் சேர்ந்துகொண்டு அரசைக் கவிழ்க்க முயல்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவுக்கும் நீதிபதி ரமணாவுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது’ என நீள்கிறது அந்தப் பட்டியல்.


குற்றச்சாட்டுகளின் உச்சமாக, நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்கள்மீதும் ஊழல் வழக்கு பதிவானது. அமராவதியில் ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை உருவாக்கினார் சந்திரபாபு நாயுடு. ‘முதல்வராக நாயுடு பதவி ஏற்ற நாளுக்கும், தலைநகராக அவர் அமராவதியை அறிவிப்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பகுதியில் பலரும் நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். தலைநகர் அறிவிப்புக்குப் பிறகு அவற்றின் மதிப்பு கோடிகளில் உயர்ந்தது. நாயுடுவுக்கு நெருக்கமான பலர் இப்படி தலைநகர் விவகாரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு ஆதாயம் அடைந்தார்கள்’ என்பது ஜெகன் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த நில பேரம் குறித்து விசாரிக்க அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்தது ஜெகன் அரசு. அவர்கள் விசாரித்து ஓர் இடைக்கால அறிக்கை கொடுத்தார்கள். அந்த அறிக்கையை அடிப்படையாகவைத்து சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்தார் ஜெகன். மார்ச் 23-ம் தேதி தரப்பட்ட பரிந்துரையை எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்கிறது சி.பி.ஐ.


இதற்கிடையே, இப்படி நிலம் வாங்கி ஆதாயம் அடைந்ததாக ஆந்திர முன்னாள் அட்வகேட் ஜெனரல் தம்மலபடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட 13 பேர்மீது ஆந்திர லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணாவின் இரண்டு மகள்களும் அடக்கம். இந்த எஃப்.ஐ.ஆர் போடப்பட்டதும் உயர் நீதிமன்றம் போனார் தம்மலபடி ஸ்ரீனிவாஸ். ‘ஜெகன் மோகன் ரெட்டி பல வழக்குகளில் சிக்குவதற்கு நான் காரணமாக இருந்தேன். அதனால் என்னைப் பழிவாங்குகிறார். எனக்கு நீதி வேண்டும்’ என்று கேட்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக செய்திகள் வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. (எனவே, அந்த வழக்கின் விவரங்களை இங்கு தவிர்த்துள்ளோம்.) கூடவே, நில பேரம் குறித்த அமைச்சரவைக்குழுவின் அறிக்கையில் மேல் நடவடிக்கைகள் எடுக்கவும் தடைவிதித்தது. இந்த விஷயத்தையும் ஜெகன் தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


சந்திரபாபு நாயுடு

ஜெகனின் இந்த `திடீர்’ சீற்றத்துக்குக் காரணம் என்ன? தன் தந்தை ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது முறைகேடான வழிகளில் சுமார் 1,00,000 கோடி ரூபாய் சேர்த்ததாக ஜெகன்மீது 31 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அந்த வழக்குகளுக்காக 16 மாதங்கள் அவர் சிறையிலிருந்தார். அவற்றில் சி.பி.ஐ போட்ட 11 வழக்குகளும், அமலாக்கத்துறை போட்ட 5 வழக்குகளும் ஹைதராபாத் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. அக்டோபர் இரண்டாம் வாரத்தில் இவை தினசரி விசாரணைக்கு வந்து வேகமெடுத்துள்ளன.


இதற்கிடையே, ‘அரசியல்வாதிகள்மீதான குற்ற வழக்குகள் விசாரணையில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது’ என அஸ்வினி உபாத்யாயா என்பவர் ஒரு பொதுநல வழக்கு போட்டார். அந்த வழக்கை ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. ஏற்கெனவே உயர் நீதிமன்றங்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்த இந்த அமர்வு, விரைவில் தீர்ப்பு வழங்கவிருக்கிறது. அந்தத் தீர்ப்பு வந்தால், ஜெகன்மீதான வழக்குகள் வேகமெடுத்து அவரின் பதவியைக் காவு வாங்கும். ‘‘அந்த வழக்கிலிருந்து நீதிபதி ரமணா விலக வேண்டும் என்பதற்காக ஜெகன் இப்படி மறைமுகமாக மிரட்டுகிறார். இது தெளிவான நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்’’ என்கிறார்கள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்.


பல சிண்டுகளை ஒரே நேரத்தில் தன் பிடியில் கொடுக்கும் இந்த விவகாரத்தை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment