Monday, October 19, 2020

ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல!

விஜய் சேதுபதி நடிப்பில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ படத்தின் மோஷன் போஸ்டர் அக்டோபர் 13-ம் தேதி வெளியானது. பற்றிக்கொண்டது பரபரப்பு நெருப்பு... ‘‘ராஜபக்சேவுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் பேசிவந்தவர் முத்தையா முரளிதரன். அதனால், முரளிதரனின் பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’’ என்று கொந்தளிக்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்! இந்த விவகாரம் உட்பட, இலங்கை அரசியல் சூழல்கள் குறித்தும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டரிடம் பேசினோம்.


‘‘முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது ஈழ உணர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த விஷயத்தை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’’


‘‘உலகத் தமிழர்களின் மனங்களில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், உன்னதமான மனிதராகவும் நிறைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரன் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் கிரிக்கெட்டில் மட்டும் பந்து வீசவில்லை; ஈழத்தமிழர்களின் இதயம் நொறுங்கும்படியும் பல பந்துகளை வீசியிருக்கிறார். 2009, மே 18-ம் தேதி... உலகமே விடியாமல் இருண்ட நாள். ஈழப்படுகொலைகள் உலகத்தையே உலுக்கியெடுத்தன. ஆனால், `அந்த நாள்தான் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத சந்தோஷமான நாள்’ எனப் பிரகடனம் செய்தார் முரளிதரன். அப்படியொருவரின் பாத்திரமேற்று நீங்கள் நடிக்கப் போகிறீர்களா விஜய் சேதுபதி? உறவுகளை இழந்து இன்றளவும் தேடிக்கொண்டிருக்கும் எம் தாய்மாரை, கேவலமாகச் சித்திரித்த ஒருவரின் வரலாற்றை நீங்கள் நடித்துக்கொடுப்பது அறம்தானா?


இந்தப் படத்தில் நடிப்பதால் உங்களுக்குக் கிடைக்கும் புகழைவிட, அதை மறுப்பதால் உங்களைத் தேடிவரும் பெருமைகள் ஏராளம். தயவுசெய்து இதை மறுபரிசீலனை செய்யுங்கள். அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும்கூட தமிழர்களின் உணர்வை மதித்து, இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதை விஜய் சேதுபதி கவனத்தில்கொண்டு மக்கள் சேவகராக முடிவெடுக்க வேண்டும்.’’


‘‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்களுக்குச் சமஉரிமை அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துமாறு பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தியிருக்கிறாரே...?’’


‘‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனேவும் 33 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ஒப்பந்தம் அது. ராஜீவ் காந்தி தொடங்கி வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங்... இப்போதைய பிரதமர் மோடி வரை எத்தனையோ பிரதமர்கள் சொல்லியும் இலங்கை அரசு 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவில்லை. இலங்கை அரசு ஒருநாளும் வடக்கு, கிழக்கை இணைக்காது. தமிழர்களுக்கு உரிமைகளைக் கொடுக்காது. இந்தியப் பிரதமர் வலியுறுத்தியவுடன், தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க மகிந்த ராஜபக்சே ஒன்றும் நெல்சன் மண்டேலா அல்ல!’’


‘‘தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘இந்தியா-இலங்கைக்கு இடையிலான பெளத்த இணைப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் 15 மில்லியன் டாலர் நிதி வழங்குவோம்’ என்று மகிந்த ராஜபக்சேவிடம் கூறியிருப்பதை ஈழத்தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’’


‘‘இலங்கையில் பெளத்தம் என்பது இந்தியாவுக்கு எதிராக ஈராயிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட நிறுவனரீதியிலான வலுவான கட்டமைப்பு. சிங்கள பெளத்தப் பேரினவாதத்தின் இந்திய எதிர்ப்புதான், தமிழின அழிப்பாக இலங்கையில் நடக்கிறது. எனவே, பெளத்தத்தை ஊக்குவிப்பது இலங்கையில் தமிழர்களின் கலாசாரத்தையும் தமிழர்களின் வாழ்விடத்தையும் அழிப்பதை ஊக்குவிப்பதாகும். அதன் மூலம் இந்திய எதிர்ப்புக்கு மறைமுகமாக உதவுவதாகும். இந்தியா, தன் கையாலேயே தன் கண்ணைக் குத்திக்கொள்வதும், இலங்கையில் பெளத்தத்தை ஊக்குவிப்பதும் ஒன்று. இது குறித்து இந்தியாவின் நலனில் அக்கறையுள்ள அறிஞர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’’


சண் மாஸ்டர்

‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பயங்கரவாதி என்றும், அவர் சிறுவர் படையை வழிநடத்தினார் என்றும், 2009 யுத்தத்தை வழிநடத்திய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருக்கிறாரே..?’’


‘‘விடுதலைப்புலிகள் இயக்கத்தில் குழந்தைகள் படையணி (Baby Brigade) என ஒன்று இருந்ததே இல்லை. அப்படியிருக்க, அதற்குத் தளபதியாக பாலச்சந்திரன் எப்படி இருந்திருக்க முடியும்? பாலகன் பாலச்சந்திரனுக்கு ஏதோ ஒன்றைச் சாப்பிடக் கொடுத்துவிட்டு மூன்றடி தூரத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது, மிகப்பெரிய போர்க்குற்றம். பாலச்சந்திரன் படுகொலை குறித்து சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஒளிப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து தடயவியல் நிபுணரே உறுதிசெய்திருப்பதால், இலங்கை அரசப் படைகள் நிகழ்த்திய படுகொலைக்கு இதுவொரு வலுவான சாட்சியாக இருக்கிறது. அதனால்தான், ஐ.நா-வும் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தது. எனவே, பாலச்சந்திரன் படுகொலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு, ராஜபக்சே சகோதரர் களோடு இணைந்து சரத் பொன்சேகா கூறிய கருத்து இது. பாலசந்திரனைப் படுகொலை செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே அதை நான் பார்க்கிறேன்.’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment