ராமகோபாலன், எங்கள் ஆசிரியர் சோ சாரின் மிக நெருங்கிய நண்பர். முன்பெல்லாம் ‘துக்ளக்’ அலுவலகத்துக்கு அடிக்கடி வந்து எங்களுடன் நீண்டநேரம் உரையாடுவார். எங்கள் இதழின் எழுத்தாளர்கள் அனைவருக்கும் அவர் மிகவும் பரிச்சயமானவர். 1994-ல் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது தொடங்கி, பலமுறை அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். போனில் அழைத்து, கட்டுரையில் பிடித்தமான, முக்கியமான வரிகளைக் குறிப்பிட்டு மனம்விட்டுப் பாராட்டி தன் ரசனையை வெளிப்படுத்துவார். ஒருமுறை அவர் அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, என்னிடம் பேச வந்தார். அப்போது சோ அவர்கள், வேகமாக வந்து “சார்... அவர் செக்குலர். அவரைக் கெடுத்துடாதீங்க..!’ என்று நகைச்சுவையாகக் கூறித் தடுத்தார்.
அவரை இந்து மதப் பற்றாளராக மட்டுமே அடையாளப்படுத்துவது தவறு. உண்மையில், அவர் தீவிரமான நாட்டுப் பற்றாளரும்கூட. ஆனால், அவரது இந்து மதப்பற்று சர்ச்சைக்குள்ளானதால், அவர் தீவிரமான இந்துவாதியாகப் பேசப்பட்டுவந்திருக்கிறார். ராமகோபாலன், ‘இந்து வீரத் துறவி’ என்று வர்ணிக்கப்பட்டாலும், எதிர்த்தரப்பு கருத்துகளையும் மதிப்பவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். அவரது பேச்சின் வலிமையைத் தாங்க முடியாத மாற்று மதத்தினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவர்.
சோ சாரும் இந்து மதப் பற்றாளர்தான். ஆனால், ராமகோபாலனிடமிருந்த தீவிரத்தன்மை அவரிடம் இல்லை. இந்துமதம் தொடர்பாக இருவரும் விவாதிப்பது உண்டு. இருவருமே விட்டுக்கொடுக்காமல் விவாதிப்பார்கள். ராமகோபாலன் சென்ற பிறகு, “அவர்கிட்டேயிருந்து விஷயம் வாங்கத்தான் வாதம் பண்ணினேன். அவர் சொல்றதுதான் சரி” என்று எங்களிடம் கூறுவார்.
ராமகோபாலனின் கொள்கை உறுதி அசாத்தியமானது. ஒருமுறை அவரது கருத்துகளை ஏற்க முடியாதவர்களால், மண்டையே பிளவுபடும் அளவுக்கு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டார். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். அதற்குப் பிறகும் கடுகளவும் தன் கருத்துகளை மாற்றிக்கொள்ளாமல், தீவிரத்தையும் குறைத்துக்கொள்ளாமல் மேடைகளில் பேசிவந்தார். அவரைப் பொறுத்தவரை இந்து மதத்தை உயிராகவும், உயிரை இரண்டாம்பட்சமாகவும் நினைத்தார்.
அவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி ‘துக்ளக்’ மேடையில் சோ சார் பேசியபோது, “இந்த மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. அவ்வளவு அடி வாங்கின பிறகும் கொஞ்சம்கூட மனம் தளராமல், தன் கொள்கைகளை உறுதியாக ஒருவரால் தொடர முடிவது என்பது அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவர்களால்தான் முடியும்” என்று பாராட்டினார். ராமகோபாலன் அசாத்தியமானவர்!
அவரது மறைவு, இந்து மதத்தை உண்மையாக நேசிப்பவர்களுக்குப் பேரிழப்பு!
No comments:
Post a comment