பட்டப் பகலில்... நடுத்தெருவில்... கையில் பளபளக்கும் வீச்சரிவாளுடன் ஒரு கும்பல் பைக்கில் செல்கிறது. எதிரில் வருபவர்களை மிரட்ட, நாட்டு வெடிகுண்டுகளை வீசியபடியே நிதானமாகக் கடக்கிறது. பதற்றமே இல்லாமல், ஒரு வீட்டுக்குள் நுழைந்து, உள்ளே சமையல் செய்துகொண்டிருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொல்கிறது. இன்னொரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணையும் வெட்டிக் கொன்றதுடன், தலையைத் துண்டித்து கையில் ஏந்திக்கொண்டு வலம்வந்த கும்பல், அந்தத் தலையை கால்வாயில் வீசிவிட்டுச் செல்கிறது...
விவரிக்கப்படும் சம்பவம் ஏதோவொரு திரைப்படத்தின் வன்முறைக் காட்சி அல்ல. நெல்லை மாவட்டத்தில், சென்னை-குமரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மருகால்குறிச்சி என்ற கிராமத்தில், செப்டம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த உண்மைச் சம்பவம்!
கடந்த 10 மாதங்களுக்குள்ளாகவே, இந்தக் கிராமத்தில் பழிக்குப் பழியாக ஐந்து உயிர்கள் பலியாகியிருக்கின்றன. இந்தக் கொடூரத்தின் பின்னணியாக இருப்பது ஒரு காதல் திருமணம்.
முதல் கொலை..!
மருகால்குறிச்சியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் நம்பிராஜனும், அதே ஊரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரின் மகள் வான்மதியும் காதலித்திருக்கிறார்கள். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், வான்மதியின் குடும்பத்தினர் வசதியானவர்கள் என்பதால் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இருவரும் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்துகொண்டு, நெல்லையில் ஒரு வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள். அதனால், வான்மதியின் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில் நம்பிராஜன், கையில் வீச்சரிவாளுடன் ‘இந்த ஊருக்குள்ள என்னை எதிர்க்குறதுக்கு எவன்டா இருக்கான்?’ என்கிற தொனியில் தொடர்ச்சியாக டிக்-டாக்கில் வீடியோக்களைப் பதிவிட்டுவந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, தன் நண்பர்களுடன் சேர்ந்து நம்பிராஜனைக் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கொலை செய்தார். அந்தக் கொலையை விபத்துபோலக் காட்டுவதற்காக, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறார்கள். ரயில் ஏறியதில் நம்பிராஜனின் தலை துண்டானது. ஆனாலும், போலீஸ் விசாரணையில் உண்மை தெரியவந்ததால், செல்லச்சாமி மற்றும் அவரின் கூட்டாளிகள் கைதுசெய்யப்பட்டார்கள்.
பரோட்டா கடையில் இரட்டைக் கொலை!
நம்பிராஜன் கொலையால் அவரின் குடும்பத் தினர் ஆத்திரமடைந்தார்கள். மகன் நம்பிராஜனை இழந்த அவரின் தாயார் சண்முகத்தாய், ‘எம்புள்ளையக் கொன்னவங்களைத் தீர்த்துக் கட்டுங்க... அவங்களை நீங்க கொன்னுட்டேன்னு சொன்னாத்தான் என் தலைமுடியைப் பின்னுவேன்’ என்று தன் கணவன் மற்றும் மகனிடம் சபதம் ஏற்றிருக்கிறார். அவர்களும், நம்பிராஜனைக் கொன்றவர்களைப் பழிவாங்க, சமயம் பார்த்துக் காத்திருந்திருக் கிறார்கள்.
நம்பிராஜன் கொலையில் தொடர்புடையவரின் தந்தை ஆறுமுகம், நாங்குநேரியில் பரோட்டா கடை நடத்திவந்தார். மார்ச் 20-ம் தேதி அந்தக் கடைக்குள் நுழைந்த நம்பிராஜனின் தந்தை அருணாசலம் தலைமையிலான கும்பல், அங்கிருந்த ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை வெட்டிக் கொன்றது.
மீண்டும் இரட்டைக் கொலை!
நம்பிராஜனைக் கொலை செய்தவர்களில் இருவர் கொல்லப்பட்ட தகவல் கிடைத்த பிறகே, சண்முகத்தாய் தன் தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்திருக்கிறார். இந்த வழக்கில், நம்பிராஜனின் தந்தை அருணாசலம், தாய் சண்முகத்தாய், சகோதரர் ராமையா உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள் செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள்.
அதற்காகக் காத்திருந்த எதிர்த்தரப்பினர், அரிவாளும் வெடிகுண்டுகளுமாக வீடு தேடி கொல்லச் சென்றிருக்கிறார்கள். அந்நேரம், அருணாசலமோ அவரின் மகன் ராமையா இல்லாததால், வீட்டிலிருந்த சண்முகத்தாய், மற்றும் ராமையாவின் மனைவி சாந்தி இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் பற்றி மருகால்குறிச்சி கிராமத்தினரிடம் பேசினோம். “ஒருகாலத்துல சாராயம் காய்ச்சுறது, அடிதடி, வெட்டுனு இருந்த எங்க ஊர்ல, இன்னிக்கு இளைஞர்கள் படிச்சு நல்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சுட் டாங்க. அதனால, சுத்துப்பட்டுல எங்க ஊரு மேல ஒரு மரியாதை வந்துச்சு. ஆனா, ஒரு காதல் கல்யாணத்தால மறுபடியும் எங்க ஊருல ரத்தம் ஓட ஆரம்பிச்சிருக்கு. சம்பவம் நடந்த அன்னிக்கு, திடீர்னு அஞ்சாறு பைக் ஊருக்குள்ள வந்துச்சு. கையில வீச்சருவா இருந்துச்சு. என்ன ஏதுன்னு கேட்கறதுக்கு முன்னாடியே நாட்டு வெடிகுண்டை வீசினாங்க. தெரு முழுசும் வெடிகுண்டை வீசிக்கிட்டே போனவங்க ராமையா வீட்டுல போயி அவரைத் தேடினாங்க.
ராமையா வீட்டுல இல்லாததால அவரோட மனைவி சாந்தியை வெட்டினாங்க. வீட்டுக்குள்ள வெடுகுண்டு வீசுனதுல அவங்க பொண்ணுக்குக் காயம் ஏற்பட்டுச்சு. மகள் கண்ணெதிரிலேயே சாந்தியை வெட்டிச் சாய்ச்சுட்டு ஆத்திரம் தீராம அருணாசலம் வீட்டுக்குப் போனாங்க. அருணாசலம் தப்பி ஓடிட்டாரு. அவரோட மனைவி சண்முகத்தாய் பாத்ரூமுக்குள் போய் ஒளிஞ்சுக்கிட்டார். ஆனா, அந்தக் கும்பல் வெடிகுண்டு வீசி கதவை உடைச்சு அவரை வெளியே இழுத்துட்டு வந்து கொடூரமா வெட்டிக் கொன்னுட்டு, தலையை அறுத்து கையில் தூக்கிக்கிட்டு தெருவில் சத்தம் போட்டுக்கிட்டே வந்தாங்க. பிறகு, தெருவோரமா இருந்த கால்வாயில் தலையை வீசிட்டுப் போயிட்டாங்க. நாங்க பயத்துல வீட்டுக்குள்ளேயே இருந்தோம். இப்போ நெனைச்சாக்கூட நெஞ்செல்லாம் பதறுது” என்றார்கள் பீதியுடன்.
No comments:
Post a comment