Saturday, October 10, 2020

களவாடப்படும் ஏரி... கவலையில் விவசாயிகள்!


“தேசிய நெடுஞ்சாலை தேவைதான். அதற்காகப் பாசன ஏரியைப் பள்ளத்தாக்காக மாற்றுவதை எப்படி ஏத்துக்க முடியும்... எங்க விவசாயத்தைச் சீரழிக்கும் தனியார் நிறுவனத்தைத் தட்டிக் கேட்க எங்களால முடியலை... நீங்களாவது வந்து உதவி செய்யுங்க...” - நம்மிடம் பேசிய விவசாயியின் குரலில் ஆற்றாமையும் ஆதங்கமும் வெளிப்பட்டன.


அவர் குறிப்பிட்ட தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள முத்தாண்டிப்பட்டி கிராமத்தின் ‘ஆறமுண்டான் ஏரி’க்கு புகைப்படக் காரருடன் சென்றோம். மெயின்ரோட்டிலிருந்து கொஞ்ச தூரம் உள்ளே சென்றதும், காற்றில் செம்மண் பறந்தது... ஏரியில் மண் அள்ளப்படுவதால் பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் உருவாகியிருந்தன. “விவசாயத்தைக் கொன்று புதைக்கத் தோண்டப்பட்ட பெருங்குழிகளைப் போல இருக்கின்றன!” என்றார் நம்முடன் வந்த விவசாயி.ஏரிக்கு நடுவே சாலை அமைக்கப்பட்டு, மண் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளின் ராட்சத டயர் தடங்கள் அழுத்தமாகக் கிடந்தன. அவை, நம் ஆதங்கத்தை அதிகமாக்கின. நாம் சென்ற அந்தநேரத்தில், இரண்டு லாரிகள் ஏரிக்குள் நின்றன. பெரிய ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் எந்த அச்சமுமில்லாமல் சாவகாசமாக மண் அள்ளிக்கொண்டிருந்தார்கள். சினிமாவில் வரும் வில்லன்களைப்போல வாட்டசாட்டமான மூன்று நபர்கள் பயமுறுத்தும் தோற்றத்துடன் லாரிக்கு அருகே ‘பக்கபலமாக’ நின்று கொண்டிருந்தார்கள். புழுதி பரப்பியபடி லாரிகள் வருவதும் போவதுமாக இருந்தன. அதிகாரிகள் யாரும் அந்தப் பகுதிக்கு வரவோ, அதைக் கண்டுகொள்ளவோ இல்லை. சகல செல்வாக்கோடுதான் மண் அள்ளப்படுகிறது என்பதை உணர முடிந்தது.


நாம் அங்கு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்த, தஞ்சாவூர் மாவட்ட கம்யூனிஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர் முகில் விரிவாகப் பேசினார். “தஞ்சாவூரிலிருந்து விக்கிரவாண்டி வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. தஞ்சாவூர், அணைக்கரை, பண்ருட்டி, கடலூர் வழியாக விக்கிரவாண்டி வரையிலான இந்தச் சாலையின் மொத்த நீளம் 164 கிலோமீட்டர். இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.5,400 கோடி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ‘பட்டேல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற நிறுவனம், தஞ்சாவூரிலிருந்து சோழபுரம் வரை ரூ 1,345.60 கோடிக்கு டெண்டர் எடுத்துப் பணிகளைச் செய்துவருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், 49 கிலோமீட்டர் நீளத்துக்குச் சாலை அமைக்கும் பணிகளுக்காக இங்கிருக்கும் ஏரிகளில் மண் அள்ள அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. 22 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஆறமுண்டான் ஏரியில் 4,800 கனமீட்டர் மண் எடுப்பதற்கு பட்டேல் நிறுவனம், ஒரு கனமீட்டருக்கு ரூ.100 வீதம் 6,00,000 ரூபாயைக் காப்புத் தொகையாகக் கட்டியிருக்கிறது.


முகில் - செந்தில்குமார் - கோவிந்த ராவ்

‘ஏரியின் தளமட்டத்துக்கு மேலுள்ள திட்டுகளை மட்டுமே அகற்றி மண் எடுக்க வேண்டும். கரையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் ஒரு மீட்டர் ஆழத்துக்குள் மட்டுமே மண் அள்ள வேண்டும். ஏரிக்குள் சாலை அமைக்கக் கூடாது; கரையைச் சேதப்படுத்தக் கூடாது’ என்ற விதிகளெல்லாம் ஏட்டில் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன. ஏரிக்குள் சாலை அமைத்ததுடன், எட்டடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் எடுப்பதால் ஏரி முழுவதும் ஆங்காங்கே பெரும் பள்ளங்களாகக் கிடக்கின்றன. கரையில்கூடப் பள்ளம் தோண்டி மண் அள்ளியிருக்கிறார்கள். அளவுக்கதிகமாக மண் அள்ளுவதால், மழைக்காலத்தில் தண்ணீர் நிரம்பும் போது அங்கிருக்கும் பள்ளம் தெரியாமல் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம். இப்படி ஏரியில் ஏற்படும் பள்ளம் காரணமாக, குறிப்பிட்ட பகுதியிலேயே தண்ணீர் தேங்குவதால், ஏரியை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் வறண்டுபோகும். ஒரு நீர்நிலையை இப்படிச் சிதைக்கலாமா... இது மிகப்பெரிய ஆபத்து!” என்றார்.“அம்மாபேட்டை அருகேயுள்ள புளியக்குடி, சிக்கப்பட்டு ஆகிய இரண்டு ஏரிகளில் மூன்று மீட்டர் ஆழத்துக்கும் அதிகமாக மண் எடுத்த பட்டேல் நிறுவனத்தினர், சாலைப் பணிகளுக்குப் பயன்படுத்தியதோடு, தனியாருக்கும் அதை விற்பனை செய்தார்கள். இதைக் கண்டித்து, மண் ஏற்றிவந்த லாரியைச் சிறைப்பிடித்து சாலை மறியல் செய்தோம். போலீஸார் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக, ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் போராட்டம் நடத்தியதாக எங்களில் ஐந்து பேர் மீது வழக்கு போட்டார்கள். மண் திருட்டுத் தொடர்பாக நாங்கள் மட்டுமல்லாமல், இரண்டு வி.ஏ.ஓ-க்கள் கொடுத்த புகார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று வருத்தப்பட்டார் அம்மாபேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார்.


இந்தப் புகார்கள் தொடர்பாக பட்டேல் நிறுவனத்தின் தரப்பில் கேட்டதற்கு, “உரிய அனுமதி பெற்றே மண் அள்ளிவருகிறோம். மண் ஏற்றிச் செல்லும் லாரிகளின் ஆவணங்கள் உட்பட அனைத்துத் தகவல்களையும் அதிகாரிகளுக்குத் தெரிவித்தே மண் எடுக்கிறோம். எந்த விதிமுறை மீறலும் நடக்கவில்லை. கிராமத்தில் மக்கள் இரு பிரிவாக இருப்பதால், வேண்டாதவர்கள் எதையாவது சொல்லியிருப்பார்கள்” என்றார்கள்.இந்த விவகாரத்தை கலெக்டர் கோவிந்த ராவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். “வருவாய்த்துறை அதிகாரி களை ஆய்வுசெய்ய உத்தரவிட்டிருக்கிறேன். சம்பந்தப்பட்ட நிறுவனம் விதியை மீறி மண் எடுத்திருந்தால், உடனடியாக அனுமதியை ரத்துசெய்வோம்” என்று உறுதியளித்தார்.


‘விவசாயி’ எனத் தன்னை அறிவித்து, பெருமிதப்பட்டுக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, வேளாண் நிலத்தின் மீதும், விவசாயிகளின் நலன் மீதும் உண்மையான அக்கறை காட்டுவாரா?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment