Friday, October 23, 2020

கௌதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல!

“அப்பாவுக்கு, கட்சியில் துணைப் பொதுச்செயலாளர் பதவி கிடைத்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் மகனின் சொத்துகளை முடக்கிவிட்டது மத்திய அமலாக்கத்துறை!” - கூட்டணி வம்புதும்புகளுக்கு இடையிலும் அறிவாலயத்தில் பொன்முடிக்கு எதிராக இப்படிக் கம்பு சுற்றுகிறார்கள் உடன்பிறப்புகள்!


தி.மு.க துணைப் பொதுச்செயலாளரான பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் மத்திய அமலாக்கத்துறையினர், கௌதம சிகாமணிக்குச் சொந்தமான சொத்துகளை அதிரடியாக முடக்கியிருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு தனியார் நிறுவனத்தில், ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்திருக்கிறார் கெளதம சிகாமணி. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் யூனிவர்சல் பிசினஸ் வெஞ்சர் என்ற நிறுவனத்திலும் 55,000 அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார்.‘இந்த முதலீடுகள் மூலம் சுமார் 7,06,57,537 ரூபாய் லாபம் ஈட்டிய கௌதம சிகாமணி, இதை அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்’ என்பதே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் அந்த லாபத் தொகைக்கு ஈடாக அவரது வீடு, நிலம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.


`கௌதம சிகாமணி மீது குற்றச்சாட்டுகள் கிளம்புவது ஒன்றும் புதிதல்ல...’ என்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தில். பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கௌதம சிகாமணி பெயரும் இடம்பெற்றிருக்கிறது. அதனால், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதே சர்ச்சை எழுந்தது. அதேபோல், பொன்முடி 1996-2001 தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, சென்னை மாநகராட்சியின் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வாங்கி வீடுகட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.


2006 தி.மு.க ஆட்சியில் கனிமவள அமைச்சராக பொன்முடி இருந்தபோது, விதிகளுக்கு மாறாக விழுப்புரம் மாவட்டம், பூத்துறையில் தன் மகனுக்கே செம்மண் குவாரி ஒப்பந்தத்தை வழங்கினார். குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட, பல மடங்கு குழி தோண்டி மண் எடுத்த வழக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அதேபோல், பொன்முடி குடும்பத்துக்குச் சொந்தமான கல்லூரிக்கு, பஞ்சமி நிலத்தைப் பயன்படுத்தியதாகவும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலையில்தான், இப்போது அமலாக்கப் பிரிவும் தனது பங்குக்குப் பிடியை இறுக்கியிருக்கிறது.இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் பதவியைத் தலைவரிடம் அடம்பிடித்து வாங்கிவிட்டார். அதேபோல், தன் மகனை எப்படியாவது மாவட்டச் செயலாளராக்கிவிட வேண்டும் என்றும் துடிக்கிறார். `உதயநிதிக்கு நெருக்கமானவர்’ என்று கௌதம சிகாமணி தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். ஆனால், கெளதம சிகாமணி ஒன்றும் உத்தம சிகாமணி அல்ல... அவர்மீது வழக்குகள் இருப்பதை மறைத்தே அவருக்கு சீட் வாங்கினார்கள். கடைசி நேரத்தில்தான் அவர்மீது வழக்குகள் இருப்பது கட்சித் தலைமைக்குத் தெரியவந்தது. இப்போது, ஆளும்கட்சிக்கு எதிராக ஊழல் அஸ்திரங்களை தலைவர் ஸ்டாலின் ஏவிவரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் குடும்பமே முறைகேடு வழக்கில் சிக்கியிருப்பது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.


ஏற்கெனவே ஜெகத்ரட்சன், துரைமுருகன் என்று தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகளைக் குறிவைத்து மத்திய அரசு வழக்குகளைப் பாய்ச்சிவரும் நிலையில், இப்போது அந்தப் பட்டியலில் பொன்முடியும் இணைந்துவிட்டார். பொன்முடி வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். ஆனால், அவர்மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. அந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பொன்முடிக்கு தண்டனை கிடைத்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. இப்போது அவரின் மகன்மீதும் அமலாக்கப் பிரிவு வழக்கைப் பாய்ச்சியிருப்பதால், அவரது பதவிக்கும் சிக்கல் ஏற்படலாம்” என்றார்கள்.


அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் பேசினோம். “பெரா வழக்கில்தான் இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விரைவில் பினாமி சட்டத்தையும் இந்த வழக்கில் பயன்படுத்துவோம். சொத்துகளை முடக்கியதுடன், எங்கள் நடவடிக்கை நின்றுவிடாது. கணக்கு காட்டாத பணத்தை எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்களோ அவற்றை யெல்லாம் முடக்குவோம். அபராதத்தை மட்டும் கட்டிவிட்டு இந்த வழக்கிலிருந்து பொன்முடி தரப்பினர் தப்பிக்க முடியாது. இதற்குப் பின்னால் பல வில்லங்கங்கள் இருக்கின்றன” என்றார்கள்.பொன்முடியிடம் இது குறித்துக் கேட்டோம். “வருமானவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் சரியாகவே கட்டிவருகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற வழக்குகளைப் போடுகிறார்கள். அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்றார்.


இதற்கிடையே தமிழருவி மணியன், “பொன்முடியின் மகனுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி வந்தன? மோசடியான நபரைத்தான் ஸ்டாலின் கடந்த 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்தியிருக்கிறார். ரஜினிகாந்த் மாநகராட்சிக்குச் சொத்துவரி கட்ட மறுக்கிறார் என்று கூப்பாடு போட்டவர்கள், கௌதம சிகாமணி சட்டத்துக்குப் புறம்பாகச் சொத்து சேர்த்த விவகாரம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.


சரிதானே... வாய் திறந்து பதில் சொல்லுங்கள் ஸ்டாலின்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment