Monday, October 19, 2020

சட்டசபை நடக்கலாம்... கிராமசபை கூடாதா?

இந்தியா என்னும் பிரமாண்டமான ஜனநாயகக் கட்டமைப்பில் ‘கிராமங்கள்’ ஒரு சிறிய அலகுதான். ஆனாலும், சிறியதே அழகு! அதனால்தான், ‘கிராமங்கள் இந்தியாவின் இதயங்கள்’ என்றார் காந்தி. ஆனால், கடந்த அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜயந்தியன்று நடத்த வேண்டிய கிராமசபைக் கூட்டத்தை ரத்துசெய்து, ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைத்திருக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. இதைத் தொடர்ந்து அறப்போர் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து, தன்னாட்சி அமைப்பு, வாய்ஸ் ஆஃப் பீப்புள், தோழன் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து, அக்டோபர் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கிராமசபை மீட்பு வாரமாகக் கடைப்பிடித்துவருகின்றன. கிட்டத்தட்ட காந்தியின் அகிம்சைவழி போராட்டம்தான் இதுவும்!தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமாரிடம் பேசினோம். ‘‘ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டியது கட்டாயம். தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையிலிருப்பதால் கடந்த மே 1, ஆகஸ்ட் 15 ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து, கடைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டிருக் கின்றன. இந்தநிலையில், சுமார் எட்டு மாதகால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் 2 காந்தி ஜயந்தி அன்று கிராமசபைக்கான அறிவிப்பு கடந்த செப்டம்பர் 26-ம் தேதியன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது.


கிராம மக்களின் வேலைவாய்ப்பு இழப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், நூறுநாள் வேலைத்திட்டம் உட்பட அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஊராட்சி நலன் சார்ந்த விஷயங்களை விவாதித்து, முடிவெடுப்பதற்காக பொதுமக்கள், இந்த கிராமசபையை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். மேலும், ஊராட்சித் தேர்தல் நடைபெறாத 2,900-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில், இந்தக் கிராமசபைக் கூட்டத்தின் மூலமாக, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த மக்கள் தயாராக இருந்தார்கள். அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டுதல் களின்படி, சமூக இடைவெளிக்கான வழிமுறைகள், கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்கத் தேவையான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர்கள் செய்திருந்தனர்.

இந்தநிலையில்தான், திடீரென்று அக்டோபர் 1-ம் தேதி இரவு, கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை வெளியிட்டார்கள். கொரோனா ஊரடங்கு சூழலிலும், கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அதேபோல தமிழக சட்டமன்றக் கூட்டமும் நடந்திருக்கிறது. ஆனால், மூன்றாவது அரசான கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம் நடைபெறவில்லை. எந்த அளவுக்கு நாடாளுமன்றக் கூட்டமும், சட்டமன்றக் கூட்டமும் அவசியமோ, அதே அளவுக்கு கிராமசபையைக் கூட்டுவதும் மிக அவசியமே” என்றார்.


தொடர்ந்து பேசிய தன்னாட்சி அமைப்பின் தலைவர் கே.சரவணன், ‘‘மத்திய ஊரக வளர்ச்சித்துறை, கடந்த செப்டம்பர் 24-ம் தேதியன்று அனைத்து மாநில கூடுதல் தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியிருக்கும் கடிதத்தில், ‘கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்கவும், வரும் நிதியாண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகள் தொடர்பான முடிவுகளை எடுக்கவும், அக்டோபர் 2 அன்று கிராமசபையையும், அக்டோபர் 3 முதல் நவம்பர் 30-க்குள் ஒரு சிறப்பு கிராமசபையையும் கட்டாயம் கூட்ட வேண்டும்’ என அறிவுறுத்தியிருக்கிறது.

`தமிழகத்தில் படிப்படியாக மூடுவோம்’ என்று சொல்லப்பட்ட டாஸ்மாக் கடைகளே தாராளமாகத் திறக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. ஆனால், கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யும் கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக கிராமசபைக் கூட்டங்களை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்றார். இதைத் தொடர்ந்து மேற்கண்ட அமைப்பினர் கிராமம்தோறும் கிராமசபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்திவருகிறார்கள்.


இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் பேசினோம். “கிராமசபைக் கூட்டத்தைக் குறிப்பிட்ட தேதியில் நடத்த முடியவில்லையென்றால், பிறகு அதை நடத்தவே முடியாது. திரும்பவும் கிராமசபைக்கென்று வரும் தேதியில்தான் நடத்த முடியும். சூழ்நிலைகளைப் பொறுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு, சிறப்பு கிராமசபைக் கூட்டத்தை நடத்த அதிகாரமுண்டு. அதனால், மீண்டும் கிராமசபைக் கூட்டத்தை நடத்த வேண்டு மென்றால், அது கொள்கை சார்ந்த முடிவு. ஆட்சியாளர்கள்தான் அந்த முடிவை எடுக்க முடியும்’’ என்றார்.

நந்தகுமார் - கே.சரவணன்


காந்தி கண்ட கனவை நசுக்கி யிருக்கிறது முதல்வர் பழனிசாமியின் அரசு. காந்தியை ரூபாய் நோட்டில் மட்டுமே அறிந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment