நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் 19 வயது மகன் நிஷாந்த், மும்பையிலுள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். கொரோனா காலத்தில் ஊருக்கு வந்தவர், கல்லூரியின் ஆன்லைன் வகுப்புகளை அட்டெண்ட் செய்திருக்கிறார். அப்போது பாடத்தை கவனிக்காமல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதை அவரின் பெற்றோர் கண்டித்திருக்கிறார்கள். மனவேதனையடைந்த நிஷாந்த், செப்டம்பர் 19-ம் தேதி விஷத்தைக் குடித்து, தற்கொலை செய்துகொண்டார்.
தேனி, சித்தையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தொட்டணசாமி. இவரின் 15 வயது மகன் சஞ்சய் குமார், செப்டம்பர் 14-ம் தேதி தூக்கு மாட்டி, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கயிற்றில் தொங்கி, துடித்துக்கொண்டிருந்தவரைக் குடும்பத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் விசாரணையில், ஆன்லைன் வகுப்புகளுக்காகவும் கேம் விளையாடவும் மொபைல்போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்துவிட்டதால், சஞ்சய் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நான்கு நாள்களில் உயிரிழந்தார் சஞ்சய்.
கன்னியாகுமரி, மண்டைக்காடு அருகேயுள்ள கருமண்கூடலைச் சேர்ந்த ராஜ்குமார்-கீதா தம்பதியின் 14 வயது மகன், அங்கிருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துவந்த நிலையில் அதில் ஆர்வம் காட்டாத சிறுவன் மொபைலில் கேம் விளையாடியிருக்கிறார். இதை அவரின் பெற்றோர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன், மொபைல்போனை தரையில் அடித்து உடைத்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே புது போன் வாங்கிக்கொடுக்கும்படி சிறுவன் அடம்பிடிக்க, பெற்றோர் மறுத்துவிட்டனர். போன் இல்லாமல் விரக்தியடைந்த சிறுவன், செப்டம்பர் 23-ம் தேதி வாழைத்தோப்புக்கு வாங்கிவைத்திருந்த விஷ மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம், சாயல்குடி அருகேயுள்ள மேலக்கிடாரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன், கடலாடியிலுள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக்கிடந்த சிறுவன், பொழுதுபோக்குக்காக செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் இதற்கு அடிமையான அந்தச் சிறுவன், தன் தாயின் வங்கிக் கணக்கு எண்ணையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒருநாள் சிறுவனின் தந்தை, வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயன்றபோது வங்கிக் கணக்கில் பணம் இல்லை. விசாரித்தபோது ஆன்லைன் சூதாட்டத்தில் 90,000 ரூபாயை அந்தச் சிறுவன் இழந்திருந்தது தெரியவந்தது.
இவையெல்லாம் சில சாம்பிள்கள் மட்டுமே. உண்ணாமல் உறங்காமல் ஒரு நாளைக்கு 20 மணி நேரம்கூட மொபைல் கேமில் மூழ்கிக்கிடப்பது, பெற்றோருடன் நண்பர்களுடன் உரையாட மறுப்பது என்று இன்றைய சிறுவர்கள் பலரது செயல்பாடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. இது பற்றிப் பேசும் நெல்லை அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் ராமானுஜம், “போதையில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று மது, கஞ்சா போன்றவற்றால் கிடைக்கும் போதை. இன்னொன்று, செயல்கள் மூலம் கிடைக்கும் போதை. இதில் ஆன்லைன் விளையாட்டு, ஷாப்பிங் செய்வது, வேலை செய்வதிலேயே மூழ்கிக்கிடப்பது என பல விஷயங்கள் உண்டு.
பாதிப்புகளைப் பொறுத்தவரை இரண்டு வகை போதைகளும் ஒன்றுதான். எனவே, இந்தப் பழக்கத்துக்கு அடிமையாவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் கண்காணிப்புடன் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். இன்று பெற்றோர்கள் பலரும், தாங்கள் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைகளிடம் செல்போன்களைக் கொடுத்துவிடுகின்றனர். ஆன்லைன் கேம் போதைக்கு அடிப்படைக் காரணம் இதுதான். செல்போன்களுக்கு மாற்றாக புத்தகம் வாசிக்கச் செய்யலாம், உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.
பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்திருக்கிறது. இந்தச் சூழலில், சிறுவர்களின் செல்போன் மோகத்தை முழுமையாக மாற்றும் கடமையும் பொறுப்பும் பெற்றோர்களுக்கு இருக்கிறது. ஆனாலும், அரசும் இவை குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டு, சிறுவர்கள் செல்போன் அடிமைகளாவதிலிருந்து மீட்க வேண்டும்.
No comments:
Post a comment