Saturday, October 10, 2020

கடத்தலா... காதலா? - சர்ச்சையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ திருமணம்

‘‘நான் சாதி பார்க்கலை. காதல் திருமணத்துக்கும் எதிரி கிடையாது. ஆனா, 38 வயசான ஒருத்தர், 19 வயசு பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கிறதை எப்படி ஏத்துக்க முடியும்?” - கள்ளக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான பிரபு திருமணம் செய்து கொண்டிருக்கும் சௌந்தர்யாவின் தந்தையான ‘குருக்கள்’ சுவாமிநாதன் இப்படிக் குமுறுகிறார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம்தான் எம்.எல்.ஏ பிரபுவின் சொந்த ஊர். அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை எம்.எல்.ஏ கடத்திச் சென்றுவிட்டதாக அக்டோபர் 1-ம் தேதி முதல் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அன்றைய தினமே பெண்ணின் தந்தையான சுவாமிநாதனைச் சந்திப்பதற்காக விரைந்தோம். ஆனால், அன்று நம்மைச் சந்திக்க மறுத்துவிட்ட அவர், 4-ம் தேதி மாலை சோர்ஸ் ஒருவர் மூலமாக வீடியோ ஒன்றை அனுப்பிவைத்தார்.


‘‘வணக்கம். நான் தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களா இருக்கேன். என் மகள் சௌந்தர்யா திருச்செங்கோட்டுல இருக்கும் கல்லூரியில பி.ஏ இங்கிலீஷ் இரண்டாமாண்டு படிச்சுண்டிருக்கா. என் மகளை ஆசைவார்த்தைகள் கூறி, அவரைத் திசைதிருப்பி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கடத்திட்டார்.ரொம்ப மன உளைச்சலாவும் வேதனையாவும் இருக்கு. ‘நான் எம்.எல்.ஏ. எனக்குப் பொருளாதார பலமும் அதிகார பலமும் இருக்கு. என்னை ஒண்ணும் செய்ய முடியாது. உன் குடும்பத்தையே காலிசெஞ்சுடுவேன். இதையும் மீறி நீ புகார் கொடுக்கப்போனா, உன் பொண்ணையே கொலை செஞ்சுடுவேன்’ என்று ஆள்வைத்து மிரட்டுறார். நான் தனி நபரா இருக்கேன். என்னால காவல் நிலையத்துக்கும் போய் புகார் கொடுக்க முடியலை. தயவுசெஞ்சு என் மகளை மீட்டுத் தாங்க...’’ என்று கைகூப்பிக் கும்பிடுவதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது.


உடனே சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டோம். ‘‘கடந்த 10 வருஷமா ஒரு மகனைப்போல என்கிட்ட பழகிவந்தவர் பிரபு. என்னையும் என் மனைவியையும் `அப்பா, அம்மா...’னுதான் கூப்பிடுவார். செப்டம்பர் 30-ம் தேதி காலேஜுக்குப் போன எம்பொண்ணு வீட்டுக்கு வரலை. ‘ஆசைவார்த்தைகள் பேசி எம்.எல்.ஏ பிரபு அவளை அழைச்சுக்கிட்டுப் போயிட்டாரு’னு கேள்விப்பட்டு அவருக்கு போன் பண்ணினேன். ‘இது சரியில்லை பிரபு. என் பொண்ணை அனுப்பிடு’னு கேட்டேன். அதுக்கு, ‘உன் பொண்ணை 10 வருஷமா லவ் பண்றேன். அப்படில்லாம் அனுப்ப முடியாது. நான் எம்.எல்.ஏ-ங்கறதால சபாநாயகர் உத்தரவில்லாம என்மேல வழக்கு போட முடியாது. உன்னால முடிஞ்சதைப் பாத்துக்கோ’னு மிரட்டலா சொன்னாரு.


சுவாமிநாதன்

10 வருஷமா லவ் பண்றேன்னு எம்.எல்.ஏ சொல்றாரு. அப்படின்னா... அவருக்கு 28 வயசு இருக்கும்போது என் பொண்ணுக்கு ஒன்பது வயசு. நான் சாதி பார்க்கலை. காதல் திருமணத்துக்கும் எதிரி கிடையாது. ஆனா, 38 வயசான ஒருத்தர் 19 வயசுப் பெண்ணைத் திருமணம் செஞ்சுக்கிறதை எப்படி ஏத்துக்க முடியும்?’’ என்று கதறினார்.


விளக்கம் கேட்க எம்.எல்.ஏ பிரபுவைத் தொடர்புகொண்டபோது, ‘‘அவர் அப்படியெல்லாம் சொல்லி யிருக்க மாட்டாரே... இப்போதான் அவர்கிட்ட பேசினேன். உங்களுக்கு யாரோ தவறா சொல்லியிருக்காங்க’’ என்றார் கேஷுவலாக. ‘‘குருக்கள் சுவாமிநாதனின் மகளை நீங்கள்தான் அழைத்துச் சென்றீர் களா... அவர் உங்களுடன்தான் இருக்கிறாரா?’’ என்று நாம் கேட்டதும், ‘‘உடனே கான்ஃபரன்ஸ் காலில் அவரைக் கூப்பிட்டு விட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்றார். ஆனால், அடுத்த நிமிடமே தொடர்பு துண்டிக்கப்பட்டது.


இந்தநிலையில்தான், அக்டோபர் 5-ம் தேதி காலையில் எம்.எல்.ஏ பிரபு - சௌந்தர்யா திருமணக்கோலத்தில் இருக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த விஷயம் பரபரப்பாகிக் கொண்டிருந்த நிலையில், காலை 7 மணிக்கு நம்மைத் தொடர்புகொண்ட சுவாமிநாதன், ‘‘20 வயசு வித்தியாசத்துல நடந்த இந்தக் கல்யாணத்தை என்னால ஏத்துக்க முடியலை. அவங்க வீட்டு முன்னாடியே உயிரை மாய்ச்சுக்கப்போறேன்’’ என்று கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.


பதறிப்போன நாம் உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறி, ‘விபரீதம் எதுவும் நடப்பதற்கு முன்னர் நடவடிக்கை எடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டோம். அடுத்த சில நிமிடங்களில் ஸ்பாட்டுக்கு விரைந்த போலீஸார், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சுவாமிநாதனை மீட்டு அழைத்துச் சென்றனர்.இந்தநிலையில் எம்.எல்.ஏ பிரபுவிடம் மீண்டும் பேசினோம். ‘‘நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் காதலிச்சோம். அதை சௌந்தர்யா வீட்டுல ஏத்துக்கலை. எங்க வீட்டுல ஏத்துக்கிட்டாங்க. அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அரசியல் காரணங்களுக்காக சுவாமியை யாரோ தப்பா இயக்குறாங்க” என்றார்.


சௌந்தர்யாவிடம் பேசியபோது, ‘‘என் அப்பா கோபமா இருந்தப்போ எடுத்த வீடியோவை எங்க கல்யாணத்தன்னிக்கு யாரோ வெளியிட்டிருக்காங்க. என்னை மிரட்டியெல்லாம் கல்யாணம் செஞ்சுக்கலை” என்றார்.


தற்கொலை முயற்சி செய்துகொண்டதற்காக, சுவாமிநாதன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதேசமயம், மகளை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு மனு’ தாக்கல் செய்திருக்கிறார் சுவாமிநாதன்.


இந்தச் சம்பவம் கடத்தலா... காதலா... என்பதையும், மக்கள் பிரதிநிதியான பிரபு, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறாரா என்பதையும் காவல்துறைதான் விசாரிக்க வேண்டும்... ஓர் எளிய தந்தையின் மனக்குமுறலுக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment