Monday, October 19, 2020

இனிமேல்தான் உலகத்தரம் ஆக வேண்டுமா?


அண்ணா பல்கலைக்கழகம் தொடர்பான சமீபகால சர்ச்சைகள்தான் தமிழக அரசியலில் பெரும் புயலாகச் சுழன்றடித்துவருகின்றன. பல்கலைக்கழகம் பிரிப்பு, சிறப்பு உயர் அந்தஸ்து (சீர்மிகு கல்வி நிறுவனம்), துணைவேந்தரின் தன்னிச்சையான செயல்பாடுகள் ஆகிய மூன்றும்தான் பிரச்னைகளுக்கான முக்கியப்புள்ளிகள்!


உலக அளவில் புகழ்பெற்ற ‘அண்ணா பல்கலைக்கழகம்’, 1978-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் பொறியியல் கல்லூரிகளை சென்னையிலிருந்து நிர்வகித்துவருகிறது. நிர்வாக வசதி மற்றும் ஆராய்ச்சிக்காகப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, புதிதாக இணைவு வகை பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவைக் கடந்த மாதம் தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது அ.தி.மு.க அரசு.


இதன் பின்னணியிலுள்ள அரசியல் குறித்துப் பேசுகிறார், தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் (பள்ளிக்கல்வித்துறை) அமைச்சருமான தங்கம் தென்னரசு...


‘‘கடந்தகால தி.மு.க ஆட்சியில், அண்ணா பல்கலைக்கழக நிர்வாக வசதிக்காக கோவை, மதுரை... என மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டன. ஆனால், 2011-ல் மறுபடியும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.தி.மு.க., ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காக தி.மு.க அரசு பிரித்துவிட்டது’ என்று சொல்லி, அனைத்து மண்டலங்களையும் ஒருங்கிணைத்தது. இப்போது மறுபடியும் ‘நிர்வாக வசதிக்காகப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கிறோம்’ என்று சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கிறது. இதன் பின்னணியில் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறது.


தங்கம் தென்னரசு - சூரப்பா

தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவைத் துணைவேந்தராக மத்திய அரசு நியமனம் செய்ததே, இது போன்ற மாற்றங்களைச் செய்வதற்குத்தான். ‘அண்ணா’ என்ற பெயரும், 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் கல்வியறிவு பெற்றுவருவதும் மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. எனவே, முதலில் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, ‘அண்ணா’ என்ற பெயரை நீக்குவார்கள். பின்னர், சிறப்பு உயர் அந்தஸ்து அளிக்கிறோம் என்ற பெயரில் பல்கலைக்கழகத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் மத்திய அரசின்கீழ் கொண்டுவந்து, இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவார்கள். அடுத்து, நிர்வாகரீதியாக மத்திய அரசுக்கு வேண்டிய ஆட்களை நியமனம் செய்து, தங்கள் கொள்கை, கோட்பாடுகளைக் கல்வியிலும் புகுத்துவார்கள். ஐஐடி-யில் எப்படிக் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவருகிறார்களோ... அதேபோல அண்ணா பல்கலைக்கழகமும் மாறிப்போகும்’’ என்றார் ஆதங்கத்துடன்.


இதற்கிடையே, ‘மாநில அரசின் நிதியுதவி இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் நிதி திரட்டிக்கொள்ள முடியும்’ என்று துணைவேந்தர் சூரப்பா, நேரடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இதை மறுத்துள்ள சூரப்பா, ‘‘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள, ‘சிறப்பு அந்தஸ்து’ மூலம் கல்வி ஆராய்ச்சி, கற்றல், புதுமை கண்டுபிடிப்பு போன்ற கட்டமைப்புகள் மேம்படும். இது குறித்து தமிழகத் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தின் அடிப்படையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக நான் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையிலும் மட்டுமே கடிதம் எழுதினேன். எனது கடிதத்தை மாநில அரசிடமும் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், ‘69 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாநில அரசின் நடைமுறை அப்படியே தொடரும்’ என மத்திய அரசு எனக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருக் கிறது’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித் திருக்கிறார்.


பிரின்ஸ் கஜேந்திரபாபு - கே.பி.அன்பழகன்

இந்த விவகாரம் குறித்துப் பேசும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘அண்ணா பல்கலையில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் நேராது என்று எந்த அடிப்படையில் சூரப்பா உறுதி கொடுக்கிறார்? அதற்கான ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டியது தானே... மாநில அரசின் பங்களிப்பு இல்லாமலேயே மாணவர்களிடமிருந்து கட்டணமாக நிதியைத் திரட்டிக் கொள்ள முடியும் என்று ஒரு துணைவேந்தர் எப்படிச் சொல்ல முடியும்? டாக்டர் எம்.அனந்த கிருஷ்ணனில் ஆரம்பித்து மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பல்துறை அறிஞர்களையும் இந்த நாட்டுக்குக் கொடுத் திருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், இனிமேல் தான் உலகத்தரம் ஆக வேண்டுமா? கல்வியைப் பொறுத்த வரையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 246, அட்டவணை 7-ன்படி அதிகாரப் பகிர்வு உரிமை மத்திய அரசுக்குக் கிடையாது; மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. எனவே, பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதாவை, தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’’ என்கிறார் அழுத்தமாக.


அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் விளக்கம் பெற வேண்டி, அவரது உதவி அலுவலரைத் தொடர்புகொண்டோம். “இது விஷயமான எந்தவொரு தொடர்புக்கும் பல்கலைக்கழகப் பதிவாளர் மூலமாக முயற்சி செய்யுங்கள்’’ என்றார். பல்கலைக்கழகப் பதிவாளரின் கவனத்துக்கு நமது கேள்விகளை அனுப்பிவைத்துள்ளோம்.


தமிழக அரசை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் பேசினோம். “அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாகத்தான் செயல்பட்டுவருகிறது. 69% இட ஒதுக்கீட்டை இழப்பதற்கோ, நுழைவுத் தேர்வுகளை அனுமதிப்பதற்கோ, ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்கோ அம்மாவின் அரசு ஒருபோதும் தயாராக இல்லை.


‘சீர்மிகு நிறுவன’மாக மாறினால் மாணவர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்று சொல்கிறார்களோ, அதைவிட சிறந்த வசதிகளை மாநில அரசே ஏற்படுத்தித் தரும். எனவே, தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசுக்கு சூரப்பா கடிதம் எழுதியது தவறு.


கல்லூரிகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் களையவும், ஆராய்ச்சிக் கல்வியை மேம்படுத்தவும் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கிறோம். எந்தவகையிலும் அண்ணாவின் பெயர் மாற்றப்படாது! என்றார்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment