Sunday, October 04, 2020

40 தொகுதிகள்... நகர்த்தப்படும் காய்கள்... கதர்களின் பலே கணக்கு!

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுமே சட்டமன்றத் தேர்தல் முன் தயாரிப்புகளில் மும்முரமாகிவிட்டன. தி.மு.க கூட்டணியில், ‘பொன்வைக்கும் இடத்தில் பூ வைத்தாலும் பரவாயில்லை’ என்கிற மனநிலையில் இருக்கிறது டெல்லி காங்கிரஸ் மேலிடம். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான், ஆளுக்கொரு திசையில் பயணித்து கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியிருக் கிறார்கள்.


சமீபத்தில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் இது எதிரொலித்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சீட் பங்கீடு தொடர்பாக ஆளுக்கொரு கருத்துகளைச் சொல்லி தினேஷ் குண்டு ராவைக் குழப்பியடித்தார்கள். இவற்றுக்கெல்லாம் உச்சமாக தினேஷ் குண்டு ராவ் பத்திரிகையாளர் களிடம், “தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்” என்று குண்டு வீச... இதைப் பார்த்து கடுகடுத்த அறிவாலயம், சூட்டோடு சூடாக டெல்லி ஜன்பத் சாலைக்கு போன் போட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அரண்டுபோன தினேஷ் குண்டு ராவ், ``அடுத்த முதல்வராக ஸ்டாலின் வர வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கனவு. அதை நிஜமாக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படும்” என பல்டியடித்தார்.இப்படி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடக் கூடாது என்று டெல்லி காங்கிரஸ் தலைமை, உறவைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறது. ஆனால், இதை பலவீனமாக நினைத்துக்கொண்டு, சீட் பங்கீட்டில் அறிவாலயம் பாதகம் செய்துவிடக் கூடாது என்பதுதான் மாநில `கதர்’களின் கதறலாக இருக்கிறது.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க-வை முழுமையாக நம்ப முடியவில்லை. அரசியல் மற்றும் அந்தக் கட்சி மீதிருக்கும் வழக்குகளின் சூழல் அப்படி. இதனால், எந்நேரம் வேண்டுமானாலும் பா.ஜ.க-வுடன் தி.மு.க அணிசேரலாம் என்கிற சந்தேகம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி உடனிருப்பதால்தான், அந்தச் சந்தேகம் வலுப்பெறவில்லை. அதாவது, தி.மு.க-வின் ‘மதச்சார்பின்மை முகமுடி’ காங்கிரஸ் கட்சியால் மட்டுமே சாத்தியம். இதை அறிவாலயம் புரிந்துகொள்ள வேண்டும். ‘2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கியதால்தான் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்கிற வாதத்தை தி.மு.க-வினர் அடிக்கடி முன்வைக்கிறார்கள். அந்த வாதம் முற்றிலும் தவறு.


காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி யிட்ட தொகுதிகளில், தி.மு.க-வினர் உள்ளடி வேலை செய்ததால்தான் நாங்கள் தோற்றோம். எந்தெந்தத் தொகுதிகளில் தி.மு.க-வினர் தேர்தல் பணியாற்றவில்லை என எங்கள் வேட்பாளர்களிடம் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பட்டியல் எழுதி வாங்கியது அறிவாலயத்துக்கு நினைவிருக்கிறதா? அறந்தாங்கித் தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசின் மகன் ராமச்சந்திரன், தனக்கு எதிராக தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஒருவர் எப்படியெல்லாம் உள்ளடி வேலை பார்த்தார் என்று 28 பக்கங்களில் புகார் மனு கொடுத்தாரே... அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தனக்கு முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்காக, காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமானைத் திட்டமிட்டுத் தோற்கடித்தார் கே.என்.நேருவின் மறைந்த தம்பி ராமஜெயம்.கருணாநிதி இருந்தவரையில் கூட்டணி சீட் பங்கீட்டில் நெகிழ்வுத்தன்மை இருக்கும். ஆனால், ஸ்டாலினிடம் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அதேசமயம், தி.மு.க ஆட்சியில் அமர வேண்டுமானால், காங்கிரஸின் தயவு அவசியம். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெறும் 23.9 சதவிகித வாக்குகள் பெற்றதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இல்லாததே காரணம். இதையெல்லாம் டெல்லி மேலிடத்திடம் எப்படிப் பேசி புரியவைக்க வேண்டும், என்ன மாதிரியான வியூகம் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.


ஒருவேளை ரஜினி தீவிர அரசியலுக்குள் வந்துவிட்டால், தி.மு.க கூட்டணியில் தங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று கருதுகிறது காங்கிரஸ். அப்போது 40 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். ஆனால், எது நடந்தாலும் 20-25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறது தி.மு.க. அதேசமயம், தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றால், தி.மு.க-வின் வெற்றியை பாதிக்கும் வகையில் காய்நகர்த்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தயாராகிவருகிறார்கள். இதை அறிவாலயம் மட்டுமல்ல, டெல்லி ஜன்பத் சாலைகூட தடுப்பது சிரமம்தான்!


தமிழகத்துக்கு நெருக்கமான தினேஷ் குண்டு ராவ்!


தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தினேஷ் குண்டு ராவின் குடும்பம், தமிழர்களுக்கு நெருக்கமானது. தினேஷ் குண்டு ராவுக்கு ஓரளவுக்குத் தமிழ் பேச வரும். இவரது பெங்களூரு காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் சரிபாதி எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர். தினேஷின் தந்தை ஆர்.குண்டு ராவ் கர்நாடகா முதல்வராக இருந்தவர். பெங்களூருவுக்கு எம்.ஜி.ஆர் செல்லும் போதெல்லாம் குண்டு ராவின் வீட்டில் உணவருந்துவதை வழக்கமாக வைத்திருந் தாராம். ரஜினிக்கும் குண்டு ராவ் குடும்பம் நெருக்கம். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் அவரைத் தமிழக மேலிடப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது கட்சித் தலைமை!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment