Thursday, October 01, 2020

தி.மு.க-வோடு எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போக முடியாது!

காங்கிரஸ் கட்சியின் இளைய தலைவர்களில், அதிரடி கருத்துகளுக்குச் சொந்தக்காரர் கார்த்தி சிதம்பரம்! தொகுதி சுற்றுப்பயணம், வேளாண் சட்ட எதிர்ப்பு; போராட்டம் என பிஸியாக இருந்தவரிடம் பேசினேன்...


“தமிழக காங்கிரஸின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், ‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும்’ என்று காலையில் பேசிவிட்டு, அதேநாள் மாலையில் ‘தி.மு.க ஆட்சி அமைக்க காங்கிரஸ் பாடுபடும்’ என்று பல்டியடித்துவிட்டாரே..?’’


“கூட்டணி ஆட்சியா, இல்லையா என்ற மாநில அரசியலுக்குள் கட்சியின் மேலிடப் பார்வையாளருக்கு எந்தவிதப் பங்கும் கிடையாது. இங்கிருக்கிற காங்கிரஸ் கட்சியினர்தான் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்ற பிறகு, தி.மு.க-வுக்கு தங்கள் ஆதரவு தேவையா, இல்லையா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். ‘கூட்டணி ஆட்சி அமையுமா, அமையாதா...’ என்ற கேள்விக்கு தேர்தல் முடிவும், அதையொட்டி தி.மு.க எடுக்கும் முடிவும்தான் பதிலாக அமையும். அதுதானே நடைமுறை யதார்த்தம்!’’


“சமீபத்தில், கட்சியின் அகில இந்தியத் தலைமை குறித்து ‘அதிருப்தி கடிதம்’ எழுதியதன் பின்னணியில், உங்கள் தந்தை ப.சிதம்பரமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறதே..?’’


“2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எனவே, கட்சியிலும் கட்சியின் நடைமுறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவது, கட்சிநலன் மீதான அக்கறைதான். அந்த அக்கறையில்தான் அப்படியொரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். நானும் அந்தக் கடிதத்துக்கு உடன்படுகிறேன்.’’


“கட்சித் தலைமைக்கு இது பிடிக்காததால்தானே கடிதம் எழுதியவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது..?’’


“அப்படியில்லை... இது போன்ற ஆக்கபூர்வமான விமர்சனங்களை எல்லோரும் பேசலாம் என்று சொல்லித்தான் கட்சித் தலைமையே ஆறு பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கியிருக்கிறது. கடிதம் எழுதியவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக்கும் அந்தக் கமிட்டியில் ஒருவராக இருக்கிறாரே?’’


கார்த்தி சிதம்பரம்

“ஆனால், ப.சிதம்பரம் பிறந்தநாளுக்கு வழக்கமாக வாழ்த்து சொல்லும் ராகுல் காந்தி, சோனியா காந்தி இருவருமே இந்த வருடம் வாழ்த்து கூறவில்லையே?’’


“அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்களா, இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. நான், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுவிட்டேன். ஒருவேளை தனியே போனில் அழைத்துக்கூடப் பேசியிருக்கலாம்.’’


“தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை ஒப்புதலின்றியே மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்துவருகிறீர்களாமே..?’’


“நான் பொதுவான மக்கள் பிரதிநிதி. இதற்காக நான் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறீர்கள்?’’


“கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஒப்புதல் வாங்க வேண்டாமா?’’


“நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். இதோ காலையில்கூட மூன்று பேர் வந்து என்னைச் சந்தித்தார்கள்... இதை நான் யாரிடம் சொல்ல வேண்டும்? அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரான நான், சிவகங்கை தொகுதிக்கான மக்களவை உறுப்பினரும்கூட. இதையெல்லாம் நான் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது... அப்படியான நடைமுறைகளும் கட்சியில் கிடையாது. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்னுடைய தனிப்பட்ட உரிமை!’’


“தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்களா?’’


“ `கட்சியும் வளர வேண்டும், நாமும் வளர வேண்டும்’ என்று நினைப்பதில் என்ன தவறு... எனக்குள் நிறைய லட்சியங்கள் இருக்கின்றன.’’


“தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற லட்சியமும் உங்களுக்கு இருக்கிறதா?’’


“காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும், மீண்டும் இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்றும்கூட எனக்கு லட்சியங்கள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் நன்றாக இருந்தால்தான், கார்த்தி சிதம்பரத்தின் எதிர்காலமும் நன்றாக இருக்கும்.’’


“மதுவிலக்கு போன்ற விஷயங்களில், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராகக்கூடப் பேசுகிறீர்களே?’’


ராஜஸ்தான், பஞ்சாப், பாண்டிச்சேரி என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயேகூட மதுவிலக்கு அமல்படுத்தப்படவில்லை. பூரண மதுவிலக்கு என்பது உலகம் முழுவதுமே தோல்வியடைந்து விட்ட கொள்கை. தவிர... ‘குடியுங்கள்’ என்று நான் சொல்லவில்லையே.’’


“டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்ட அ.தி.மு.க அரசுக்கு எதிராக தி.மு.க போராட்டம் நடத்தும் சூழலில், நீங்கள் ‘மதுவிலக்கு தேவையில்லை’ என்று சொல்வது தி.மு.க-வை அவமானப்படுத்துவதாகிவிடாதா?’’


“எல்லா விஷயங்களிலும் நான் தி.மு.க-வோடு ஒத்துப்போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கூட்டணி என்பது அரசியல் அடிப்படைக்கான பரந்துபட்ட ஒரு புரிதல்தானே தவிர, எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போக முடியாது. அப்படிப் பார்த்தால், ‘தனி ஈழம்’ கோரிக்கை வைக்கும் வைகோவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்க முடியுமா? கூட்டணியின் மைய நோக்கம்தான் முக்கியம். அந்தவகையில், இந்தி-இந்துத்துவா அரசுக்கு எதிரானதும், தமிழகத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்குமாகத்தான் எங்கள் கூட்டணி. மற்றபடி பொருளாதார விஷயத்தில் நான் ஒரு வலதுசாரிதான்!’’


“வலதுசாரி சிந்தனையில் இருப்பதால்தான், பா.ஜ.க-வினரைப்போல் மகாபாரதக் கதையை உதாரணம் காட்டி நாடாளுமன்றத்தில் பேசினீர்களா?’’


(சிரிக்கிறார்) “இல்லையில்லை... கொரோனா ஊரடங்கை முதன்முதலாக அறிவிக்கும்போது, ‘குருஷேத்திரப் போர் 18 நாள்களில் முடிந்துவிட்டது. ஆனால், கொரோனாவைத் தோற்கடிக்க நமக்கு 21 நாள் ஊரடங்கு தேவை’ என்று பிரதமர் பேசியிருந்தார். ஆனால், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் தோல்வி எல்லோருக்குமே தெரியும். இதைச் சுட்டிக்காட்டத்தான் அவர்களது மொழியிலேயே, மகாபாரதத்திலிருந்து உதாரணம் எடுத்துப் பேசினேன். சக்கர வியூகத்தை அரைகுறையாகக் கற்றுக்கொண்டு, வெளியே வரத் தெரியாமல் திணறி இறந்துபோனவர் அபிமன்யூ. அதைப்போல நமது பிரதமரும் அரைகுறையாகக் கற்றுக்கொண்டு, பண மதிப்பிழப்பு, ஊரடங்கு என நமது பொருளாதாரத்தையே சாய்த்துவிட்டார் என்று ஒப்பிட்டுச் சொன்னேன்.’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment