Saturday, October 10, 2020

பார்... பஞ்சாயத்து... பலான விஷயம்... பகீர் கிளப்பும் கல்வியியல் கல்லூரி!

‘பகலில் கல்லூரி; இரவில் மதுப் பிரியர்களின் பார்; விடுமுறை நாள்களில் கட்டப் பஞ்சாயத்துக் கூடாரம்; ‘பலான’ விஷயங்களுக்கும் இங்கு குறைவில்லை. காலையில் கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் காலி மது பாட்டில்களையும், காண்டம் உள்ளிட்ட கண்றாவி களையும் அப்புறப்படுத்திவிட்டுத்தான் வகுப்புக்குச் செல்ல முடியும்’ என்கிறது நம் அலுவலகத்துக்கு வந்த ஒரு புகார்க் கடிதம்.


‘நாகப்பட்டினம் நகரத்தில் அமைந்திருக்கிறது ‘கனிமொழி பன்னீர்செல்வம் கல்வியியல் கல்லூரி.’ தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராகப் பணிபுரியும் பன்னீர்செல்வம் என்பவர், இந்தக் கல்லூரியை அவரின் மனைவி கனிமொழி பெயரில் நடத்துகிறார். கல்லூரியிலிருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள பாலையூர் என்ற கிராமத்திலிருக்கும் நிலத்தைக் காட்டி, அதில் போதுமான கட்டடங்கள் கட்டி கல்லூரியை நடத்தப்போவதாக அப்ரூவல் வாங்கியிருக்கிறார். இன்றுவரை அந்த நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கவில்லை. என்றைக்கு இடிந்து விழுமோ எனும் அபாய நிலையிலிருக்கும் கட்டடத்தில்தான் தற்போது இந்தக் கல்வியியல் கல்லூரி இயங்கிவருகிறது.


இங்கு நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பின் காலம் இரண்டு ஆண்டுகள். மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமில்லை. அண்டை மாநிலங்களில் பணிபுரிபவர்கள்கூட இங்கு படிக்கலாம். ஆண்டொன்றுக்கு 37,500 ரூபாய் கட்டணம்; பணமே பிரதானம். சுமார் 100 மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்லூரியில் சுமார் 70 சதவிகித மாணவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு ஹாஸ்டல் வசதியே கிடையாது. ஆனால், ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதுபோல் கணக்கு காட்டி, ஆதிதிராவிட நலத்துறை மூலம் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு மாணவரின் வங்கிக் கணக்கிலும் தலா 9,200 ரூபாய் வரவுவைப்பார்கள். ஆனால், அந்தப் பணமும் ஏழை மாணவர்களுக்குக் கிடைக்காது. இந்தியன் வங்கியிலுள்ள கல்லூரிக்கான ‘ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாள் டிரஸ்ட்’ என்ற வங்கிக் கணக்குக்குக் கட்டாயப்படுத்தி மாற்றிவிடுவார்கள்.


‘ஆதிதிராவிட நலத்துறை வழங்கும் கல்வி உதவிப் பணம் எங்களுக்குக் கிடைக்கவில்லை’ என்று இரு மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்கள். ஆட்சியரும், இது பற்றி உடனடி நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிட நலத்துறைக்குப் பரிந்துரைத்தார். ஆனால், அதிகாரிகளைப் பணம் கொடுத்து, சரிக்கட்டுவதில் கில்லாடியான பன்னீர்செல்வம், புகாரளித்த மாணவர்களை அழைத்து மிரட்டி, ‘இது நான் எழுதிய புகார் அல்ல. என் பெயரில் யாரோ எழுதிவிட்டார்கள்’ என்று எழுத்து மூலம் பதிலளித்து விவகாரத்தை முடித்துவிட்டார். முதல்வர் உட்பட, 16 ஆசிரியர்கள் பணிபுரிவதாக அப்ரூவல் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆசிரியர்கூட அங்கு இல்லை என்பது கொடுமையான விஷயம். பிரின்சிபல் இன்சார்ஜாக அழகுசுந்தரம் என்பவர் மட்டும்தான் பணிபுரிகிறார். எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் சமுதாயச் சிற்பிகளான ஆசிரியர்கள், இது போன்ற கல்லூரியில் படித்தால் சமுதாயம் உருப்படுமா?’ என்கிறது அந்தப் புகார்க் கடிதம்.


உடனே நாகப்பட்டினம் விரைந்தோம். கல்லூரி வாசலில் பெரிய அளவில் பெயர்ப் பலகைகளும், மாணவர்கள் அட்மிஷனுக்கான விளம்பரப் பலகையும் காணப்பட்டது. கல்லூரியின் வாசல் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தோம், “அது புள்ளைங்க படிக்கிற காலேஜா..? ஏதோ மர்மக் கட்டடம் மாதிரிதான் இருக்குது. உள்ளே என்ன நடக்குதுன்னே எங்களுக்குத் தெரியாது” என்றனர்.


இந்தக் கல்லூரியில் படிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் சிலரிடம் பேசினோம். “ஆசிரியர்களும் இல்லாம, வகுப்பறையில மாணவர்களும் இல்லாம நடக்குற ஒரே கல்லூரி எங்க கல்லூரியாத்தான் இருக்கும். இந்த ரெண்டு வருஷ காலத்துல ரெண்டு நாள்கூட நாங்க கல்லூரிக்குப் போனதில்லை. வெளியில் வேலை செஞ்சு சம்பாதிச்சுக்கிட்டே சர்ட்டிஃபிகேட்டுக்காகப் படிக்கிறோம். பணத்தைக் கட்டிட்டா வேற எதுவும் கேட்க மாட்டாங்க. ஆதி திராவிட நலத்துறை கொடுக்குற பணத்தைப் பிடுங்குறது உண்மைதான். எல்லா விஷயத்துலயும் பணம் பார்ப்பாங்க...” என்றனர்.


இது பற்றி நாகை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்கத் தலைவர் பாஸ்கரனிடம் பேசினோம். புகார்க் கடிதத்திலுள்ள செய்திகளைக் கூறி, அவை எந்த அளவுக்கு உண்மை என்று கேட்டோம். “இந்த பன்னீர்செல்வம் ஏற்கெனவே அ.தி.மு.க-வில்


எம்.பி சீட் கேட்டவர்; கிடைக்கலை. எப்படியோ தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கிட்டார். இது முறையான கல்லூரியா நடக்கலைங்கிறப்பவே, அங்கே முறையற்ற செயல்கள்தானே நடக்கும்? கல்லூரிக்குள் இரவில் தகாத செயல்கள் நடப்பதாக எனக்கும் தகவல் வந்திருக்கு. கல்லூரிக்கு அப்ரூவல் வாங்கின விஷயம் எனக்குத் தெரியலை. மாணவர்களோட பணத்தை முறைகேடா அபகரிப்பது உட்பட எல்லாத் தவறுகளும் நடப்பது உண்மைதான்” என்றார்.


‘அந்தக் கல்லூரியின் ஒரே ஆசிரியரான’ அழகுசுந்தரத்தைத் தொடர்புகொண்டு புகார் குறித்து விளக்கம் கேட்டோம். “நான் டாக்டர் அழகுசுந்தரம், பிரின்சிபல் இன்சார்ஜ்தான். இது சுயநிதிக் கல்லூரி. நான் எந்த விளக்கமும் சொல்லக் கூடாது. நான் இப்போ தஞ்சாவூரில்தான் இருக்கேன். எம்.டி பன்னீர்செல்வம் சாரை உங்களிடம் பேசச் சொல்றேன்” என்றார்.அடுத்த சில மணி நேரத்தில் பன்னீர்செல்வம் நம்மைத் தொடர்புகொண்டார். “என் கல்லூரியில வேலை செஞ்ச ரெண்டு ஆசிரியைகளை வேலையைவிட்டு நிறுத்திட்டேன். அந்தக் காழ்ப்புணர்ச்சியில இதே மாதிரி தொடர்ந்து எல்லா இடத்துக்கும் பெட்டிஷன் போட்டுக்கிட்டு இருக்காங்க. உச்சகட்டமா ஒரு ஆசிரியைமீது போலீஸில் புகாரும் கொடுத்திருக்கேன். எல்லாமே அக்கப்போர் சார்... எனக்குப் பல இடங்களில் சொந்தமா நிலங்கள் இருக்கு. பாலையூரில் இருக்கிற பத்து ஏக்கர்லதான் ஆர்ட்ஸ் காலேஜையும் சேர்த்து கட்டலாம்னு பிளான் வெச்சிருக்கேன். அந்த இடத்தைவெச்சு அப்ரூவல் வாங்கியிருப்பது உண்மைதான். இப்ப காலேஜ் இருக்கிற கட்டடத்தையும் விலைக்கு வாங்கிட்டேன்.


10 வருஷத்துக்குக் கட்டடம் ஸ்ட்ராங்குனு சர்ட்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். கட்டடம் பக்கத்துல ஒரு ரயில்வே பாலம் வருது. அது எந்த இடத்துல அமையுதுனு தெரிஞ்சுக்கிட்டு, இதை இடிச்சுட்டு புதுசா கட்டிடுவேன்.


ஒவ்வொருத்தரோட அக்கவுன்ட்டுக்கும் வர்ற பணத்தை நாங்க இஷ்டப்படி எடுக்க முடியுமா? 16 ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டிய கல்லூரிதான், மறுக்கலை. ஆனா இப்போ


பிஹெச்.டி பட்டம் வாங்கின ஆசிரியர்களைத்தான் நியமிக்கச் சொல்றாங்க. அவங்க குறைந்தபட்சம் 60,000 ரூபா சம்பளம் கேட்கிறாங்க. மாசத்துக்குப் பல லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து ஆசிரியர்களை வெச்சுக்க முடியுமா? ரெண்டு பேர் இருக்காங்க. பார்ட் டைமா சிலர் வருவாங்க. சிரமத்தோடதான் கல்லூரியை நடத்துறேன். நான் ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். ஏதோ பார்த்து செய்யுங்க சார்” என்று பேசி முடித்தவர், மீண்டும் நம்மைத் தொடர்புகொண்டு, “எங்கே வந்து உங்களைப் பார்க்கணும்... நேர்ல வந்து பார்க்கறேன் சார்” என்றார்.


‘யாரையும் சரிக்கட்டுவதில் கில்லாடி’ என்ற புகார்க் கடித வரிகள் நினைவுக்கு வந்தன.


சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல பல்கலைக்கழகங்களில், தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் அஞ்சல்வழியாக, ஓராண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்துவந்தார்கள். அப்படிப் படிப்பவர்கள், ஒரு வார காலமே நடைபெறும் செமினார் வகுப்புகளில் பயிற்சி பெற்று, அதன் பிறகு தேர்வு எழுதி, வெற்றிபெற்று ஆசிரியராகப் பணிபுரிவார்கள். இந்த முறையில் தகுதியான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்ற காரணத்தால்தான் தொலைதூரக் கல்வி முறையை எடுத்துவிட்டு, கல்லூரிகளில் ரெகுலர் கோர்ஸாக ஆசிரியர் பட்டயப் படிப்பைக் கொண்டுவந்ததோடு, ஆசிரியர் தகுதித் தேர்வையும் கொண்டுவந்தார்கள். இது இரண்டு ஆண்டு படிப்பு. ஆனால், இதற்கென தனி அனுமதி வாங்கி நடத்தும் பல கல்லூரிகள், அஞ்சல் வழிக்கல்வியைவிட மோசமாகச் செயல்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.


கல்விக்கூடங்களைச் சந்தைக்கடை ஆக்காதீர்கள்... சமூகம் சாக்கடையாகிவிடும்!


அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்ட கல்லூரி!


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2020-21-ம் ஆண்டில் NCTE-யால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 71 கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டிருக் கிறது. `பட்டியலிலுள்ள கல்லூரிகளில் மாணவர்கள் எவரும் சேர வேண்டாம்’ என அறிவுறுத்தியிருக்கிறது. அவற்றில் இந்தக் கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment