Monday, October 19, 2020

மண்ணின் மைந்தனா... மன்னரின் மைந்தனா? , மண்புழுவா மானமிகுவா?

கழகங்களின் ஆன்லைன் அட்ராசிட்டி!


கொரோனாவுக்குப் பிறகான ‘நியூ நார்மல்’ வாழ்க்கைக்கு மக்கள் பழகிவிட்டனர். வேற வழி?!! அதற்கேற்றாற்போல், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களையும் ஆன்லைனில் பிரித்துமேய ஆரம்பித்துவிட்டனர் கழகக் கண்மணிகள். ஆம்... இந்தத் தேர்தலில் வழக்கமான பிரசார யுக்திகளுக்கு பதிலாக மீம்ஸ்கள், வீடியோக்கள், வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள், ஃபேஸ்புக் டிரெண்டுகள், ட்வீட் ட்விஸ்ட்டுகள்... என இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆன்லைனில் அட்ராசிட்டிகளைத் தொடங்கிவிட்டன!


அதிலும் கடந்த வாரம் அ.தி.மு.க ஐ.டி விங் ஆன்லைனில் வெளியிட்ட போஸ்டர் ஒன்று செம வைரல் ஆனது. ‘செயல் நாயகன்’ என எடப்பாடியின் படத்தையும், ‘அறிக்கை நாயகன்’ என்று ஸ்டாலின் படத்தையும் போட்டு எதிர்முகாமைக் கலங்கடித்தது அது. அத்துடன் விடவில்லை... ‘மண்ணின் மைந்தனா... மன்னரின் மைந்தனா?’ என்று வடிவேலுவின் ‘இம்சை அரசன்’ ஸ்டில்லில் ஸ்டாலினை வரைந்து கிண்டலடித்த போஸ்டரும் வலைதளங்களைத் தெறிக்கவிட்டது.


சும்மா இருக்குமா தி.மு.க... ஒன்றுக்கு நான்காக ஐ.டி விங் வைத்திருப்பவர்களாயிற்றே... உடனடி ரியாக்‌ஷன் காட்டினார்கள். ‘மண்புழுவா... மானமிகுவா?’ என்று எடப்பாடியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு போஸ்டர் வெளியிட்டார்கள்.மீம்ஸ்... ஆப்... ஸ்டாலினுடன் சாட்!


தி.மு.க தரப்பில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனமும், பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான தி.மு.க-வின் ஐ.டி விங்கும் இயங்குகின்றன. இவை தவிர, சபரீசன் தரப்பிலும், உதயநிதி தரப்பிலும் உப ஐ.டி அணிகள் தனி ஆவர்த்தனம் செய்துவருகின்றன. மேற்கண்ட தரப்பில், எடப்பாடி அரசின் மீதான விமர்சனங்களைப் பின்னணியாக வைத்து ஒரு டீம், வீடியோ மீம்ஸ்களைத் தயார் செய்துவருகிறது. ‘எல்லோரும் நம்முடன்’ என்று ஆன்லைன் மூலம் தி.மு.க-வில் உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டமும் செயலில் இருக்கிறது.


‘ஸ்டாலின் அணி’ என்ற புதிய மொபைல் ஆப் ஒன்றையும் உருவாக்கி, அதை பிரபலப்படுத்திவருகிறார்கள். இந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் சமூக வலைதளங் களில் தி.மு.க-வுக்கு ஆதரவான செய்திகளைப் பகிர்பவர்களுக்குக் குறிப்பிட்ட அளவில் பாயின்ட்கள் வழங்கப்படுகின்றன. ‘ஆயிரம் பாயின்ட்களை எடுத்தால், அவர்களுடன் ஆன்லைன் மூலம் ஸ்டாலின் கலந்துரை யாடுவார்’ என்று விளம்பரப்படுத்து கிறார்கள். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த ஆப் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.


இவை போக, அரசுமீதான குற்றச்சாட்டுகளை வீடியோவாகப் பேசி ஸ்டாலின் வெளியிடுகிறார். கடந்த தேர்தலில் ‘நமக்கு நாமே’ என்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த ஸ்டாலின், இந்தமுறை ஆன்லைன் மூலம் மாவட்டவாரியாக நிர்வாகிகள், ஆதரவாளர்களுடன் உரையாட விருக்கிறார். இவை தவிர, ஆளும் அரசின் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே இருப்பதற்காகவே ஏராளமான ஃபேஸ்புக் குழுக்களையும் வாட்ஸ்அப் குழுக்களையும் உருவாக்கியிருக்கிறது தி.மு.க. இவர்களுக்கெல்லாம் ‘பேமென்ட்’ தனி என்கிறார்கள்.சர்ச்சைகள் நோ... சாதனைகள் போதும்!


அ.தி.மு.க தரப்பில் ஐ.டி விங்கை சுனில் கையாள்கிறார். தவிர, முதல்வர் பழனிசாமியின் மகன் மிதுன் தரப்பிலும் ஒரு விங் இயங்குகிறது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு அ.தி.மு.க-வின் ஐ.டி விங் ‘நம்மில் ஒருவர்... நமக்கான முதல்வர்’ என்ற ஸ்லோகனை அறிவித்து அதிரடியைத் தொடங்கியிருக்கிறது. புதிய திட்டமாக ஆன்லைன் மூலம் மாவட்டவாரியாக நிர்வாகிகள், ஆதரவாளர்களை எடப்பாடி சந்தித்து உரையாடவிருக்கிறார்.


எடப்பாடி அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு, அவற்றைப் பழைய எம்.ஜி.ஆர் பாடல் டியூன்களில் ‘பட்டி பார்த்து’, பட்டிதொட்டியெங்கும் வைரலாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘நான் ஆறு பேசுகிறேன்’ என்று சிறுமியின் குரலில் ஆரம்பிக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிடமிருந்து நீரைப் பெற எப்படியெல்லாம் முயற்சி எடுக்கப்பட்டது என்று விவரிக்கிறது அந்த வீடியோ.


இன்னொருபுறம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது எழுந்த ரெளடியிசம், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை வில்லாக வளைத்து, மீம்ஸ் அம்புகளை ஏவிவருகிறது அ.தி.மு.க தரப்பு. இதற்கிடையே, ‘‘எதிர்க்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி சர்ச்சைகளைக் கிளறுவதைவிட, நாம் செய்த சாதனைகளை மக்களிடம் சேர்த்தாலே ஆதரவு பெருகும்’’ என்று ‘நல்லபிள்ளை’யாக சோஷியல் மீடியா டீமுக்கு அட்வைஸ் செய்தாராம் எடப்பாடி. அதன் விளைவாகவே கடந்த ஒரு வாரமாக, ‘மக்களால் நாம்... மக்களுக்காக நாம்’ என்று எடப்பாடி படத்துடன் தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.


எல்லாம் சரி... இரு திராவிடக் கட்சிகளின் பலமே கிராமப்புறங்களிலிருக்கும் சாமானியர்களின் ஓட்டுக்கள்தான். ட்வீட்டர், ஃபேஸ்புக் என இவர்கள் கொடுக்கும் அட்ராசிட்டி விளம்பரங்கள் அவர்களை சென்றடையுமா மிஸ்டர் கரைவேட்டி கைய்ஸ்?


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment