Friday, October 23, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றும் சர்ச்சைகள்

பாலகுருசாமி கல்வியாளர் அல்ல! - சூரப்பா கடிதம் எழுதியதில் தவறு இல்லை! - ரிலையன்ஸ் குரூப் கல்வியில் முதலீடு செய்வதில் என்ன தவறு?


மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிடும் வகையில், தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் மேசையில் காத்துக்கிடக்கிறது. `ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுமென்றே தாமதப்படுத்து கிறார்’ போன்ற கடுமையான விமர்சனங்கள் அவர்மீது முன்வைக்கப்பட்டுவருகின்றன. இது ஒருபுறமிருக்க, ஆளுநர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி பேசிய பேச்சு, தமிழக அரசியல் கட்சிகள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பாலகுருசாமி எழுதிய புத்தக வெளியீட்டு விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த 16-ம் தேதி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்றது. விழாவில் “ஏழை மாணவர்களுக்காகக் கல்வித்தரத்தைக் குறைக்கக் கூடாது. ஏழை மாணவர்கள் படிப்பதற் காகத் தனியாகத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி அண்ணா பல்கலைக்குக் கிடைக்கவிருக்கும் சிறப்பு அந்தஸ்தை நிராகரிக்கக் கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை’’ என்று பாலகுருசாமி பேசியதுதான் சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.


அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், ஆளும்கட்சி முதல் அனைத்துத் தரப்பும் ஒருமித்த குரலில் பேசிவரும்போது, பாலகுருசாமியின் இந்தப் பேச்சு, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் அமைந்துவிட்டது. இந்தநிலையில், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்க, கல்விக் கட்டணங்களை வழங்கிவரும், ‘ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் ஆனந்தம் செல்வகுமாரிடம் பேசினோம்.“ `ஏழை மாணவர்கள் மற்ற கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்’ என பாலகுருசாமி சொல்லியிருக்கும் கருத்து மிக மிகத் தவறான ஒன்று. அதேபோல, அண்ணா யுனிவர்சிட்டிக்கு எமினன்ஸ் அந்தஸ்து கிடைத்தால், வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல் படலாம் என்று சொல்கிறார். அதெல்லாம் இப்போதே நடந்துதான் வருகிறது. அதே வேளையில், அண்ணா யுனிவர்சிட்டியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது சரியான முடிவுதான். ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி தரமான மாணவர்களை உருவாக்க, அண்ணா யுனிவர்சிட்டி வளாகக் கல்லூரிகளைப் பயன்படுத்தலாம். ஆராய்ச்சிப் படிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாக அண்ணா யுனிவர்சிட்டியை மாற்ற வேண்டும். அதற்கு, இந்த உயர் சிறப்பு அந்தஸ்து உதவியாக இருக்கும். ஒரு துணைவேந்தராக சூரப்பா கடிதம் எழுதியதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் கருதுகிறேன். 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என மத்திய அரசு உறுதி செய்தால் மட்டுமே நாம் சிறப்பு அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.


“பாலகுருசாமி முன்னாள் துணைவேந்தர் மட்டுமே, கல்வியாளர் அல்ல. அதை முதலில் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், நூறாண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பொறியியல் கல்வியை வழங்கிவரும் நிறுவனம். அதன் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இல்லை. மிகத் தரமான நிறுவனமாகத்தான் ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. ‘ஏழை மாணவர்கள் மற்ற கல்வி நிலையங்களில் படித்துக்கொள்ளட்டும்’ என்ற பாலகுருசாமியின் கருத்து தவறானது. அரசின் கல்வி நிறுவனங்கள், அனைத்து மக்களின் வரிப் பணத்திலும்தான் இயங்குகின்றன. அவை அனைவருக்கும் உரிமையானவை. மாநில அரசு உருவாக்கிய சட்டங்களின் அடிப்படையில்தான் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால், மத்திய அரசின் சொல்படிதான் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்காலத்தில் தனியாரின் கைகளுக்குப் போகும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தநிலை தொடர்ந்தால், ஏழை மாணவர்களின் கல்வி என்பது எட்டாக்கனி ஆகிவிடும்’’ என்பது கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனின் கருத்து.


இறுதியாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியிடம் கேள்விகளை முன்வைத்தோம்.


“ `ஏழை மாணவர்களுக்குத் தனியாகக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும்’ என நீங்கள் சொன்னதாக வெளியான கருத்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறதே..?’’


“ஏழை மாணவர்கள் படிப்பதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றுதான் சொன்னேன். தமிழகத்தில் 600 கல்லூரிகள் இருக்கின்றன. ஏழை மாணவர்கள் அங்கு படிக்கலாமே.!தவிர, ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கலாம். ஆனால், கட்டணம் அதிகமாகும். அதனால் ஏழை மாணவர்கள் படிக்க முடியாது எனச் சொல்லி, அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என்று சொல்வது தவறு. ஐ.ஐ.டி-யிலும்தான் கட்டணம் அதிகமாக வாங்குகிறார்கள். அங்கு ஏழை மாணவர்கள் படிக்க முடியவில்லை என்பதால் மூடிவிட முடியுமா?’’


“ஐ.ஐ.டி-யில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் நுழைய முடியவில்லையே..?”


“ஏழையாக இருப்பதால் படிக்காமல் முன்னேறிவிட வேண்டும் என்று நினைப்பது தவறு. படித்துத்தான் முன்னேற வேண்டும்.’’


“மாநிலத்தின் சமூக, பொருளாதார நிலையைக் கணக்கில்கொள்ள வேண்டாமா?’’


“கணக்கில் எடுக்க வேண்டும். அரசாங்கம்தான் அதற்கான உதவிகளைச் செய்து மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டுமே தவிர, அதற்காகத் தரத்தை மேம்படுத்துவதைத் தடைசெய்யக் கூடாது.’’


“சிறப்பு அந்தஸ்துப் பட்டியலில், 10 தனியார் கல்வி நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. வணிக நோக்கில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களையும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கிவரும் அரசுக் கல்வி நிறுவனங்களையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்ப்பது சரியா?”


“இந்தியாவில் 85 சதவிகித உயர்கல்வி நிறுவனங்கள் தனியாரிடம்தான் இருக்கின்றன. அரசாங்கத்தால் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த முடியாது. தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று.”


பாலகுருசாமி


“இந்தப் பட்டியலிலுள்ள ‘ஜியோ கல்வி நிறுவனம்’ இன்னும் தொடங்கப்படவே இல்லை. அந்த நிறுவனத்தையும் ‘உலகத்தரம் வாய்ந்த சிறந்த கல்வி நிறுவன’ப் பட்டியலுக்கு மத்திய அரசு தேர்வு செய்திருப்பது விநோதமாக இருக்கிறதே?’’


“ரிலையன்ஸ் குரூப்பிடம் நிறைய பணம் இருக்கிறது. அவர்களைக் கல்வியில் முதலீடு செய்ய வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?’’


“இந்தப் போக்கு தொடர்ந்தால், கல்வி முழுமையாகத் தனியார்மயமாகிவிடாதா?’’


“இப்போதும் தனியார் கைகளில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் அமைச்சர்களின், எம்.எல்.ஏ-க்களின், எம்.பி-க்களின் கல்லூரிகள் எவ்வளவு இருக்கின்றன... அதையெல்லாம் மறைத்து அரசியல் செய்துவருகிறார்கள்.”


“ஐ.ஓ.இ அந்தஸ்து கிடைத்தால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் என்று சொல்லப்படுகிறதே?’’


“தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது. இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வராது என அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஐ.ஓ.இ வந்தால் அரசியல்வாதிகளால் கொள்ளை அடிக்க முடியாது என்பதால்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள். 60 லட்சம் வாங்கிக்கொண்டுதான் பேராசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அமைச்சர் அன்பழகனே பணம் வாங்கிக்கொண்டுதான் பணியிடங்களை வழங்கிவருகிறார். அதை அவர் மறுக்கமுடியுமா?’’


“அமைச்சர் மட்டும் எதிர்க்கவில்லையே... எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும்கூட எதிர்க்கிறார்களே?’’


“ராமதாஸ், ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. ஐ.ஓ.இ குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள். தமிழகத்துக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழக்கவைத்துவிட்டார்கள். `சூரப்பாவை பதவி நீக்க வேண்டும்’ என ஸ்டாலின் சொல்கிறார். துணைவேந்தர் என்ன அவர் வீட்டு வேலைக்காரரா?”


“மாநில உரிமை பறிபோய்விடும் என்று சொல்வது பற்றி..?’’


“தரத்தை மேம்படுத்த நாம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தாராள மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நமக்கு வேண்டும்.’’


“சூரப்பா பா.ஜ.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?’’


“அதெல்லாம் இல்லை. அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதுபோல்தான் இருக்கிறது.’’


“நீங்கள் முன்னாள் துணைவேந்தர், ஆனால் கல்வியாளர் இல்லை என்று சிலர் சொல்வது பற்றி..?’’


“ஐம்பது வருடங்களாகக் கல்விக்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்; யூ.பி.எஸ்.இ மெம்பராக இருக்கிறேன். எனக்குக் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. எல்லா துணைவேந்தர்களுமே, கல்வி அமைச்சர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் பதவிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?’’“எல்லோரும் என்றால், நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்துத் துணைவேந்தர் ஆனீர்கள்?’’


“நான் ஏன் பணம் கொடுத்து துணைவேந்தர் ஆகிறேன்... எனக்கு அந்த அவசியம் இல்லை. வட இந்தியாவில் இருக்கும்போது என்னைக் கூப்பிட்டு, துணைவேந்தர் ஆக்கினார்கள். என்னுடைய 36 மாதச் சம்பளத்தைக்கூட நான் வாங்கிக்கொள்ள வில்லை. கோயில் அன்னதானத்துக்குத்தான் கொடுத்தேன்!’’


இந்தப் பிரச்னையில், வாதங்களுக்கும் எதிர் வாதங்களுக்கும் ஏன்... விதண்டாவதங் களுக்குக்கும்கூட பஞ்சமில்லை. இன்னும் இது நீளும் என்பது மட்டும் புரிகிறது!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment