Friday, October 23, 2020

உதயநிதியெல்லாம் ஒரு ஆளா? - அதிரடி வளர்மதி

2016 சட்டமன்றத் தேர்தல் நேரம் அது. ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு காரில் ஏறச் சென்ற ஜெயலலிதா, அருகில் பூங்கொத்துடன் நின்றிருந்த அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதியை அருகில் அழைத்தார். “என்ன வளர்மதி, எலெக்‌ஷன் எப்படிப் போகுது?” என ஜெயலலிதா கேட்க, “அடுத்தும் நாமதான் ஆட்சி அமைக்குறோம்மா” என்று பவ்யம் காட்டினார் வளர்மதி. அன்று ஜெ-வுக்கு வாழ்த்து தெரிவிக்க பல கரைவேட்டிகள் வரிசையில் நின்றனர். வளர்மதிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஜெயலலிதா மற்றவர்களுக்கு அளிக்கவில்லை. சென்னை அ.தி.மு.க தளகர்த்தகர்களில் முக்கியமானவராக அறியப்படும் பா.வளர்மதி அதிருப்தியில் இருப்பதாகவும், கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் செய்யப்போகிறார் என்றும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. என்னதான் நினைக்கிறார் வளர்மதி? அவரிடமே கேள்விகளை முன்வைத்தோம்...
“வழிகாட்டுதல்குழுவில் இடம் அளிக்கப்படாததால் நீங்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறதே..?”

“தி.மு.க-விலிருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர்., முதன்முதலாக தாமரைக் கொடியை ஏற்றித் தனி இயக்கம் கண்ட போதிருந்தே, நான் இந்த இயக்கத்தில்தான் இருக்கிறேன். இதுவரை கட்சித் தலைமையின் உத்தரவை நான் மீறியதில்லை. பதவிகள் அறிவிக்கப்படும்போது எதிர்பார்ப்பேன், தேர்தல் வரும்போது சீட் கேட்பேன்... அது கிடைக்காத பட்சத்தில் நான் கவலைப்படுவதில்லை. கட்சியில் எனக்குரிய மரியாதை எப்போதும் கிடைத்துவருகிறது. இப்போது கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகவும் இருக்கிறேன். ‘பெரியார் விருது’ எனக்கு அளிக்கப்பட்டது. எனக்கு எந்த மனவருத்தமும் அதிருப்தியும் கிடையாது. அப்படிச் செய்திகள் எதுவும் பரவினால் அது வதந்தி.”

“வழிகாட்டுதல்குழுவில் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லையே?”

“கிளைக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை, கட்சிப் பொறுப்புகளுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கும் நடைமுறை அ.தி.மு.க-வில் மட்டும்தான் இருக்கிறது. இந்தக் குழுவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படாதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வெறும் பதினோரு பேர் வழிகாட்டுதல்குழுவில் பெண்களுக்கு இடமளிக்காததால், பெண்களை அ.தி.மு.க மொத்தமாக ஒதுக்குகிறது என்பது அர்த்தமல்ல. இது பெரிய கட்சி; பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டே வருகிறது.”

“அ.தி.மு.க-வில் பிரச்னை உருவாகும் போதெல்லாம் ஆலோசனைக்காக அமைச்சர்கள் டெல்லிக்குச் சென்றுவிடுகிறார்களே... உங்கள் கட்சித் தலைமை டெல்லியில்தான் இருக்கிறதா?”

“இது அபாண்டமான குற்றச்சாட்டு. டெல்லிக்கு அமைச்சர்கள் சென்றாலே, கட்சி விவகாரத்துக்காகத்தான் போகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் தங்கள் துறைசார்ந்த பிரச்னைக்காகக்கூட சென்றிருக்கலாம். அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு என்ன ரோல் இருக்கிறது.. நாங்கள் ஏன் அவர்களிடம் பேச வேண்டும்... எதிர்க்கட்சிகள் கிளப்பிவிடும் இது போன்றக் கட்டுக்கதைகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.”

“தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘இது அடிமை ஆட்சி’ எனக் கடுமையாக விமர்சிக்கிறாரே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவர் அரசியலுக்குப் புதுசு. மூன்று, நான்கு படங்களில் நடித்துவிட்டு நமது முகம் நான்கு பேருக்குத் தெரிந்துவிட்டது என்று அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் போதுமா? ஓ.பி.ரவீந்திரநாத் அரசியலுக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. அம்மா காலத்திலேயே, தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர் அவர். கட்சியில் இணைந்த உடனேயே எம்.பி பதவியை நாங்கள் தூக்கிக் கொடுத்துவிடவில்லை. உதயநிதி கதை அப்படியா? ஒரு தேர்தலில் மைக் பிடித்து ஊர் ஊராகத் திரிந்தவுடன் இளைஞரணி பொறுப்பைத் தூக்கிக் கொடுத்து விட்டார்கள்.அவரெல்லாம் ஒரு ஆளா... உதயநிதியெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே அல்ல. அவர் சொல்வதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை.”


“ `சசிகலா விடுதலையாகி வந்தால் அ.தி.மு.க-வில் பிரளயம் ஏற்படும்’ என்று அ.ம.மு.க-வினர் கூறிவருகிறார்களே?”

“எங்க கட்சியே வேறங்க. எங்களுக்கு இரண்டு தலைவர்கள் இருக்கிறார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெறுவதுதான் எங்கள் நோக்கமே தவிர, மற்றவற்றைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ‘சசிகலா வெளியே வந்தால், நாங்கள் அவருடன் போய்ச் சேர்ந்துவிடுவோம்’ என்று எந்த அமைச்சராவது, கட்சிப் பிரமுகராவது கூறியிருக்கிறார்களா? எங்களுக்குத் தலைமை இல்லாமல், அநாதையாக இருந்தோமென்றால் தலைமையேற்க ஒருவர் வருவார் என நாங்கள் நினைக்கலாம். அப்படி ஒரு நிலை இல்லையே. அண்ணன்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம். ‘இந்த ஆட்சி மூன்று மாதத்தில் முடிந்துவிடும், ஆறு மாதத்தில் காலியாகிவிடும்’ என நினைத்திருந்தவர்களின் எண்ணத்தை உடைத்திருக்கிறார் எடப்பாடி. இப்போது, `ஆட்சி முடிந்துவிட்டால் கட்சி கலைந்துவிடும்’ என்கிறார்கள். அப்படி எதுவும் நடக்காது. 48 வருடங்கள் தமிழகத்தின் நாடி நரம்பில் ஊறிப் போயிருக்கும் அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது. 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம்.”

“பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடருமா?”

“தொடரும் என்பதைத்தான் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் எல்.முருகனே கூறியிருக்கிறாரே... தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுக்குச் சில எதிர்பார்ப்புகள் வருவதுண்டு. அதெல்லாம், பேச்சுவார்த்தையில் சுமுகமாகிவிடும்.”

“சட்டமன்றத் தேர்தலில் உங்கள் போட்டியாளர் யார்?”

“ஸ்டாலின்தான்! 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியடையப்போவதாக அவர்கள் பகல் கனவு கண்டுகொண்டிருக்கலாம்; ஆனால் நிஜம் அதுவல்ல. மீண்டும் நாங்கள்தான் ஆட்சியமைக்கப்போகிறோம். களத்தில் பார்க்கத்தானே போகிறீர்கள்!”

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment