Wednesday, October 14, 2020

தினகரன் ஒரு தலைவலி! - புகழேந்தி பொளேர்...

அ.ம.மு.க-விலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி முகாமுக்கு ‘ஜம்ப்’ ஆனவர் புகழேந்தி. அவரை நேரில் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம். முதல்வர் வேட்பாளர் விவகாரம், வழிகாட்டுதல்குழு பஞ்சாயத்து, சசிகலா விடுதலை, தினகரன் மூவ் என அனைத்துக் கேள்விகளுக்கும் கூலாக பதிலளிக்கிறார் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.


“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டதே இல்லை. ஆனால், தற்போது பெரும் மோதலுக்குப் பிறகு, முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப் பட்டிருக்கிறார். ஏன் இந்தப் பதவிச் சண்டை?”


“இது பதவிச் சண்டை அல்ல. அண்ணன் பன்னீர் எங்கேயாவது, ‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்லியிருக்கிறாரா, இல்லையே... சிலர் வேண்டுமென்றே பிரச்னையைக் கிளப்பி, குழப்பத்தில் லாபம் சம்பாதிக்க நினைத்தார்கள். அதை முறியடிக்கவே முதல்வர் வேட்பாளரை அறிவித்தோம்.”


“நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் முதன்முதலில் ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி’ என்றார். அவர்தான் குழப்பத்தில் லாபம் சம்பாதிக்க நினைத்தவரா?”


“இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர் உள்நோக்கத்துடன் அப்படிச் சொல்லவில்லை; ஆர்வக் கோளாறில் சொல்லிவிட்டார். ஆனால், ‘எடப்பாடியே முதல்வர் வேட்பாளர்’ என்று அண்ணன் பன்னீர் அறிவித்தபோதே அந்த பிரச்னைகளெல்லாம் சுக்குநூறாகி விட்டன. அவர்கள் இருவரின் ஒற்றுமைக்கு இதுவே சாட்சி!”


“எடப்பாடி, பன்னீர் என இருவரின் வீடுகளுக்கும் அமைச்சர்கள் மாறி மாறி அணிவகுத்தார்களே... இதுதான் ஒற்றுமையா?”


“வலிமையான வழிகாட்டுதல்குழு அமைக்க வேண்டுமென்றால் ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடக்கத்தான் செய்யும்.”


“நீங்கள் குறிப்பிடும் அந்த வலிமையான வழிகாட்டுதல்குழுவில் செங்கோட்டையன், தம்பிதுரை, பண்ருட்டி ராமசந்திரன், பொன்னையன் போன்ற சீனியர்கள் யாரும் இடம்பெறவில்லையே..?”


“நீங்கள் குறிப்பிடும் சீனியர்கள் கட்சியில் வெவ்வேறு பொறுப்புகளில் இருப்பதாலேயே, வழிகாட்டுதல்குழுவில் இடம்பெறவில்லை.”


“அப்படியென்றால் தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் 11 பேரும் கட்சியில் வேறெந்தப் பொறுப்புகளையும் வகிக்கவில்லையா..?”


“நான் அப்படிச் சொல்லவில்லை... இன்னும் பல குழுக்கள், பொறுப்புகளெல்லாம் இருக்கின்றன அவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, இந்த வழி காட்டுதல் குழுவில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். மற்றபடி யாரையும் ஒதுக்கவில்லை.”


“ஆனால், கட்சியிலேயே பலர் ‘தங்கமணி, வேலுமணி என கொங்கு அமைச்சர்கள் கையிலேயே அதிகாரம் மீண்டும் குவிக்கப்படுகிறது’ என விமர்சிக்கிறார்களே..?”


“விமர்சனத்தில் எள்ளளவும் உண்மையில்லை. எதிர்பார்த்த பணிகளை யாரிடமிருந்து சிறப்பாகப் பெற முடியுமோ, அவர்களுக்குத்தானே கூடுதல் பணிகளை வழங்க முடியும். அவர்கள் இருவரும் மணி மணியாகப் பணியாற்றுவதால்தான் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.”


“முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின்னால் பா.ஜ.க இருக்கிறதா?”


“நிச்சயம் இல்லை. யாரையும் நம்பி அ.தி.மு.க இல்லை.”


புகழேந்தி

“ `சசிகலா விரைவில் விடுதலையாவார்’ என்று செய்திகள் வருகின்றன. சசிகலா, தினகரனுடன் நீண்டகாலம் பயணித்தவர் நீங்கள். அவர் விடுதலைக்காக தினகரன் ஏதாவது செய்துவருகிறாரா?”


“எனக்குத் தெரிந்து சசிகலா 2021, ஜனவரியில் விடுதலையாவார். ஆனால், சசிகலா வெளியே வருவதை தினகரன் விரும்பவில்லை. அ.ம.மு.க-வுக்கு அவர் தலைமை தாங்கவும் தினகரன் விட மாட்டார். ‘சின்னம்மாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று என்னிடமே தினகரன் சொல்லியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை தினகரனெல்லாம் ஒரு தலைவரே இல்லை... அவர் ஒரு தலைவலி! தினகரன் மட்டுமல்ல... மன்னார்குடிச் சொந்தங்கள் பலருமே சசிகலாவின் சொத்துக்காகவே அவரைச் சுற்றிவருகிறார்கள். இது சசிகலாவுக்கும் தெரியும். அவர் வெளியே வந்தவுடன் அவர்களையெல்லாம் துரத்திவிடுவார். அதேசமயம், சசிகலா வெளியே வந்தாலும், அவரால் இந்த ஆட்சிக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படாது.”


“ஆனால், ‘என்னைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க முடியாது’ என்று சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறதே... மீண்டும் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?”


“அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். பிறகு எதைவைத்து அவர் கட்சியைக் கைப்பற்ற முடியும்? வாய்ப்பே இல்லை.”


“அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வந்த அதே நாளில் சசிகலாவின் இரண்டாயிரம் கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?”


“ஒரு தொடர்பும் இல்லை. 2017-லிருந்தே ரெய்டு நடக்கிறது. அதன் பிறகும்கூட சொத்துகளை வாங்குகிறார்கள். இவ்வளவு பணத்தை வைத்திருப்பவர்கள் கஜா புயல், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு என்று 500 கோடி ரூபாய் கொடுத் திருக்கலாமே... வாங்கியே பழக்கப்பட்டவர் களுக்குக் கொடுக்க மனமில்லை. மக்களுக்கு உதவ மனம் வராதவர்கள் எப்போதும் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். அதுதான் தற்போது நடக்கிறது.”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment