Thursday, October 15, 2020

எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று தெரியும்! - மிரட்டப்பட்ட சூரி.

`சென்னைக்கு மிக அருகில் இடம் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால், பாதையில்லாத இடத்தைக் காட்டி கோடிக்கணக்கான ரூபாயை ஏமாற்றிவிட்டனர்’ - வழக்கமாக சினிமாவில் வசனம் பேசும் நடிகர் ‘பரோட்டா’ சூரி, இம்முறை நிஜவாழ்க்கையில் அழுது புலம்பி, நீதிமன்றப் படியேறியிருக்கிறார். சூரி குற்றம்சாட்டியிருப்பது நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவான முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் என்பதால், இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சூரியின் வழக்கறிஞர் இன்ஃபேன்ட் தினேஷிடம் பேசினோம். ‘‘கடந்த 2015-ம் ஆண்டு, `வீர தீர சூரன்’ என்ற படத்தில் காமெடி ரோலில் நடிப்பதற்காக சூரியை, அப்போது டி.ஜி.பி-யாக இருந்த ரமேஷ் குடவாலா அணுகியிருக்கிறார். இவரின் மகனான நடிகர் விஷ்ணு விஷால்தான் படத்தின் ஹீரோ. அன்புவேல்ராஜன்தான் தயாரிப்பாளர்.


தந்தை ரமேஷ் குடவாலாவுடன் விஷ்ணு விஷால்

படப்பிடிப்பின்போது சென்னையில் இடம் வாங்கப்போவதாக ரமேஷ் குடவாலா, அன்புவேல்ராஜன் ஆகியோரிடம் சூரி கூறியிருக்கிறார். அப்போது, ‘சிறுசேரியில் ஒரு ஏக்கர் 83 சென்ட் இடம் இருக்கிறது. அதை வாங்கிப் போடுங்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்’ என சூரியிடம் அன்புவேல்ராஜன் கூறியிருக்கிறார். இடத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்ன சூரியிடம், ‘நீங்கள் நடிகர் என்று தெரிந்தால், கூடுதல் விலை சொல்வார்கள். பத்திரப்பதிவின்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அன்புவேல்ராஜன் கூறியிருக்கிறார். அந்த இடத்துக்கு 80 அடி சாலை வரவிருப்பதாகக் கூறி, மேலும் சில ஆவணங்களையும் காட்டியிருக்கிறார்கள்.


சிறுசேரி இடத்தை 5,76,45,000 ரூபாய் எனப் பேசி முடித்துவிட்டு, திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2.70 கோடி ரூபாய்க்குப் பத்திரப்பதிவு நடந்துள்ளது. பணத்தை செக், ஆர்.டி.ஜி.எஸ்., டி.டி ஆகியவை மூலம் இடத்தின் உரிமையாளர்கள் லோகநாதன், ஆனந்தன், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோரிடம் சூரி கொடுத்தார். மீதமுள்ள 3 கோடி ரூபாயை சூரி கடன் வாங்கிக் கொடுத்தார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.


அதன் பிறகுதான், வாங்கிய இடத்துக்குப் பாதை இல்லை என்பது சூரிக்குத் தெரியவந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்கவிருப்பதாக அன்புவேல்ராஜனிடம் கூறியிருக்கிறார். உடனே அப்போது டி.ஜி.பி-யாக இருந்த ரமேஷ் குடவாலாவும் அன்புவேல்ராஜனும் அவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். அந்த இடத்தைத் தானே திரும்ப வாங்கிக்கொள்வதாக அன்புவேல்ராஜன் கூறியுள்ளார். பின்னர் 2018, ஜூன் 28-ம் தேதி அக்ரிமென்ட் ஒன்றைப் போட்டவர்கள், அதில் இடத்தை வாங்கிய தொகையாக 2.70 கோடி ரூபாயையும், மீதமுள்ள 3 கோடி ரூபாயை நஷ்டஈடாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தையும் அவர்கள் திருப்பித் தரவில்லை.ஒருகட்டத்தில் சூரி அழுத்தமாகப் பணத்தைக் கேட்டதும், 70 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக் கிறார்கள். மீதிப் பணத்தையும் கேட்டு அவர் நெருக்கடி கொடுத்ததும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, ‘இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கப்போகிறீர்கள். இந்தப் பணத்துக்காக உங்கள் நிம்மதியைத் தொலைத்துவிடாதீர்கள். காலை முதல் இரவு வரை நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்’ என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சூரி முறையிட்டார். ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததோடு, விசாரணை அறிக்கையை 28.10.2020-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது’’ என்றார்.


குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் விஷ்ணு விஷாலிடம் பேசினோம். ‘‘தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன்கிட்ட இடம் வாங்கறது சம்பந்தமா சூரி பேசியிருக்கார். அப்புறம் ஃப்ரெண்ட்லியா என்கிட்டயும் அப்பாகிட்டயும் இதைப் பத்திச் சொன்னார். வழக்கமா சொல்ற மாதிரி, ‘விசாரிச்சு வாங்குங்க’னு சொன்னோம். அந்த இடம் எங்கே இருக்குன்னே எனக்கோ, அப்பாவுக்கோ தெரியாது. அப்புறமா, ‘அன்புவேல்ராஜன் ஏமாத்திட்டார்... நீங்க பேசி திருப்பி வாங்கித் தாங்க’ன்னார். அப்போ என் படத்தோட தயாரிப்பாளர் என்கிற முறையில ‘என்ன நடந்தது?’னு கேட்டோம். அதுக்கு அன்புவேல்ராஜன், ‘இந்த இட விஷயத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?’னு கேட்டார். சரிதானேனு நாங்க விலகிட்டோம்.


சூரி

ஆனா, இப்போ பப்ளிசிட்டிக்காக அப்பா பேரை இழுத்து, அவர் சொல்லித்தான் வாங்கின மாதிரி சூரி பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு. சூரிக்கு இடம் கிடைச்சுது. வித்தவருக்குப் பணம் கெடச்சுது. ஆனா, எனக்கு பண்ணிக்கிட்டிருந்த படம் போச்சு. ஆக்சுவலா பாதிக்கப்பட்டது நான்தான்’’ என்று கொட்டித் தீர்த்தார்.


தயாரிப்பாளர் அன்புவேல்ராஜனிடம் பேசினோம். ‘‘நடிகர் சூரி இடம் கேட்டார். வாங்கிக் கொடுத்துவிட்டேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, `இடத்தைத் திருப்பி வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கேட்டார். நானும் 1.20 கோடி ரூபாய் கொடுத்து இடத்தை வாங்குவது தொடர்பாக சூரியுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். இந்த வழக்கில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் அவரின் அப்பாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்ன காரணத்துக்காக சூரி இப்படிச் செய்கிறார் என்று தெரியவில்லை. சூரி என்னிடம் வாங்கிய பணத்துக்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருக்கிறேன்’’ என்றார் சுருக்கமாக.


நில மோசடியில் சிக்கிக்கொண்டு விழிபிதுங்குவதே காமெடி நடிகர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்போது சூரியின் முறைபோல!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment