Wednesday, October 07, 2020

விடியலைத் தருமா வியூகங்கள்?- காத்திருக்கும் கட்சிகள்...

பச்சைத்துண்டுடன் வயல்வெளியில் ஸ்டாலின் ‘போட்டோஷூட்’ நடத்துவதாகட்டும், ‘முதல்வர் வேட்பாளர்’ பஞ்சாயத்தை எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்து வதாகட்டும்... இந்த அரசியல் நாடகங்களுக்கான ஸ்கிரிப்டுகள் அனைத்தையும் வகுப்பது தேர்தல் வியூக வல்லுநர்களே. 2014-க்குப் பிறகு இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், கட்சிகளின் சித்தாத்தங்களைவிட கார்ப்பரேட் வியூக வகுப்பாளர்களின் ‘சித்து’ வேலைகளே முன்னிலைவகிக்கின்றன. 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் இந்த வியூக வகுப்பாளர்கள், தேர்தல்களில் இவர்களின் பங்களிப்பு என்ன?


தன்னம்பிக்கையைத் தகர்த்தெறி!


க்ளெம் வொயிட்டேக்கர், லியோன் பாக்ஸ்டர் (Clem Whitaker and Leone Baxter)... அமெரிக்கத் தம்பதியரான இவர்கள்தான் தேர்தல் வியூக வகுப்பாளர்களுக்கெல்லாம் முன்னோடி. 1933-ல் ‘Campaigns, Inc.,’ நிறுவனத்தைத் தொடங்கி, தேர்தலுக்கு வியூகம் வகுத்துக் கொடுப்பதை நிறுவனரீதியாகக் கட்டமைத்தனர். 1934-ல் கலிஃபோர்னியா ஆளுநர் தேர்தலில், ஃப்ராங்க் மெரியமுக்கு ஆதரவாகக் களமிறங்கிய இவர்கள், ஃப்ராங்க்கை எதிர்த்துப் போட்டியிட்ட Upton Sinclair-க்கு எதிராக வியூகம் வகுத்தனர். சின்க்ளேயர் எழுதிய புத்தகங்களிலிருக்கும் வாசகங்களை எடுத்து, அவருக்கு எதிராகவே அவற்றைப் பயன்படுத்திய வியூகம் வாக்காளர்களிடம் நெருப்பாகப் பற்றிக்கொண்டது. கலிஃபோர்னியா ஆளுநராக ஃப்ராங்க் மெரியம் வெற்றிபெற்றார்.


மெரியமின் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்க தேர்தல் கார்ப்பரேட்மயமானது. 1968-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், நிக்ஸனுக்கு ஆதரவாகக் களமிறங்கி, அவரை வெற்றி பெற வைத்தது வொயிட்டேக்கர் - பாக்ஸ்டர் தம்பதியரே. மனரீதியாக எதிர்ப் போட்டியாளரின் தன்னம் பிக்கையை உடைப்பதுதான் இவர்களின் பிரதான வியூகம். இந்த வியூகமே இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.ரொனால்டு ரீகன், ஜார்ஜ் புஷ் சீனியர், டொனால்டு ட்ரம்ப் என அமெரிக்க அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த ரோஜர் ஸ்டோன், இன்று உலகின் நம்பர் ஒன் தேர்தல் வியூக வகுப்பாளராகக் கொண்டாடப்படுகிறார். எதிர்ப் போட்டியாளரைப் பற்றிய மசாலா கதைகளை அவிழ்த்துவிட்டு, நிலைகுலையவைப்பது இவரது பாணி. அதேபோல பெரிய எதிரியுடன் மோதி, தன்னைப் பெரும் பிம்பமாக வடிவமைத்துக்கொள்வதும் இவருக்குக் கைவந்த கலை. பொதுவாக, அரசியல் களத்தில் ஜெயிக்கும் குதிரையின் மீதுதான் பந்தயம் கட்டுவார் ஸ்டோன். இவரது பாலிசியைத்தான் இப்போது பிரசாந்த் கிஷோரும் பயன்படுத்துகிறார். நிதிஷ்குமாருடன் மோதலை உருவாக்கி, தன்னைத் தலைப்புச் செய்தியாக பிரசாந்த் கிஷோர் வரவழைத்துக்கொண்டது ரோஜர் ஸ்டோன் ஸ்டைல்தான் என்கிறார்கள்.


வியூகங்கள் மூன்று வகை


மார்க்கெட்டிங், தரவுகள் சேகரிப்பு, பிராண்டிங் எனத் தேர்தல் வியூகம் வகுப்பது மூன்று வகை. இதில், ஒருவரை மார்க்கெட் செய்வதில் பிரசாந்த் கிஷோர் கில்லாடி. அமெரிக்காவில் ‘அரசியல் நடவடிக்கைக்குழு’ என்று அழைக்கப்படும் அமைப்புகள், தங்களுக்கு ஆதரவான வேட்பாளருக்கு வியூகம் வகுப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இது போன்ற ஒரு குழுவை ‘வெளிப்படை அரசாங்கத்துக்கான குடிமக்கள் அமைப்பு’ என்ற பெயரில் இந்தியாவில் 2013-ல் அமைத்த பிரசாந்த் கிஷோர், மோடிக்காக தேர்தல் பணியாற்றினார்.


2014 நாடாளுமன்றத் தேர்தலில், முதன்முறையாக டிஜிட்டல் வழி பிரசாரத்தை மோடிக்காக அறிமுகப்படுத்தியது பிரசாந்த் டீம். ‘மோடி டீ விற்றவர்’ என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்ததையே, ‘யூ டர்ன்’ வியூகமாக மாற்றி, ‘மோடியுடன் டீ அருந்துங்கள்’ என்றார் பிரசாந்த். பிரதமர் வேட்பாளருடன் மக்கள் நேரடியாகக் கலந்துரையாடுவதுபோல மார்க்கெட்டிங் செய்யப்பட்ட இந்த பிரசாரம், மோடியை வெகுஜனப் பிரபலமாக்கியது. பெரும் வெற்றிபெற்று பிரதமரானார், டீக்கடைக்காரர் மோடி.


எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமாகியிருப்பதைத் தொடர்ந்து, கடந்த 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு ‘நமக்கு நாமே’ போன்ற திட்டங்களை வகுத்துக்கொடுத்த சுனில், இப்போது முதல்வர் பழனிசாமிக்காக வியூகம் வகுக்கக் களமிறங்கியிருக்கிறார்.


மார்க்கெட்டிங், தரவுகள் திரட்டுவது என்பதையெல்லாம்விட, ஒரு வேட்பாளரை ‘தலைவராக’ முன்னிறுத்துவதில்தான் வியூக வகுப்பாளரின் வெற்றி இருக்கிறது. அதில் ஜான் ஆரோக்கியசாமி கைதேர்ந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற வாசகத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது ஜான் டீம். இன்றுவரை, கிண்டலோ கேலியோ... நல்லதோ கெட்டதோ... அன்புமணியென்றால் ‘மாற்றம் முன்னேற்றம்’ என்று நினைக்கும் அளவுக்கு இந்த வாசகம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இதுதான் பிராண்டிங்.


உத்தவ் தாக்கரே, சரத் பவாரின் பேரன் ரோஹித் பவாருக்காக தேர்தல் வியூகம் வகுத்த ஜான் ஆரோக்கியசாமி, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவை அரியணையில் ஏற்றினார். தற்போது கர்நாடகா காங்கிரஸ் தலைவர்


டி.கே.சிவக்குமாருக்கு வியூகம் வகுக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர்கள் மூவரும்தான் இன்று இந்தியாவில் நிறுவனப்படுத்தப்பட்ட வியூக வகுப்பாளர்களாக அறியப்படுகின்றனர்.தமிழகத்தில் எடுபடுமா வியூகங்கள்?


எம்.ஜி.ஆர் ஆட்சியில் 13 ஆண்டுகள் வனவாசம் இருந்தபோது, தி.மு.க-வை கட்டிக்காத்த கருணாநிதிக்கும், 1996 சட்டமன்றத் தேர்தலில் தவிடுபொடியான பிறகு மீண்டு எழுந்த ஜெயலலிதாவுக்கும் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லை. ஆனால், ‘இன்றுள்ள ‘மில்லெனியம்’ இளைஞர்களைக் கவர நாங்கள் அவசியம்’ என்பது வியூக வல்லுநர்களின் வாதம்.


இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் சிலர், “தமிழக வாக்காளர்களில் சுமார் 55 சதவிகிதம் பேர், 40 வயதுக்கு உட்பட்டவர்கள். வழக்கமான தெருமுனை பிரசாரக் கூட்டங்களும் அடுக்குமொழி வசனங்களும் இவர்களைக் கவராது. எந்த நேரமும் மொபைலில் செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் இளம்தலைமுறையினரை அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்த முடியாது. ஒரு விஷயத்தை அரசியல்வாதிகள் பேசி முடிப்பதற்கு முன்னரே அதன்மீது ஆயிரம் விமர்சனங்களை மீம்ஸுகளாக இவர்கள் தெறிக்கவிடுகிறார்கள். அதேபோல ‘டி.வி தருகிறோம், இலவச அரிசி தருகிறோம்’ என்றெல்லாம் இவர்களை ஏமாற்ற முடியாது. பாரம்பர்ய அரசியல்வாதிகளுக்கு இவர்களைக் கவர்வது கடினம் என்பதால், இன்றைக்கு வியூக வகுப்பாளர்களின் தேவை கட்டாயமாகிவிட்டது. இனி இந்தியத் தேர்தல்கள், அமெரிக்கத் தேர்தல் பிரசார பாணியில் பிராண்டிங், மார்க்கெட்டிங் என உருமாறிவிடும்” என்றனர்.


இந்தியாவைப் பொறுத்தவரை வருடம்தோறும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்துகொண்டே இருக்கிறது. எனவே, கரன்ஸி மழை பொழியும் தொழிலாக மாறியிருக்கிறது தேர்தல் வியூகம். நிறைய பொய்கள் - கொஞ்சம் உண்மை, நிறைய தரவுகள் - கொஞ்சம் புத்திசாலித்தனம், அதிரடியான வியூகங்கள் - சரவெடி பிம்பக் கட்டமைப்புகள்... இவை இருந்தால் போதும், கோடிகளை கொட்டிக் கொடுக்கவும் கியூவில் நிற்கின்றன அரசியல் கட்சிகள்.


உடைத்துச் சொல்லப்போனால், இன்றிருக்கும் இளைஞர்களின் மனதைப் படிக்க தைரியமில்லாத, கொள்கைகளற்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் அவநம்பிக்கைகளே வியூக வகுப்பாளர்களுக்கு மூலதனம். 1970-களில் சாதாரண மகிளா காங்கிரஸ் உறுப்பினராக மேற்குவங்கத்தில் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மம்தா பானர்ஜி, தன் போராட்டங்களால் மக்களைக் கவர்ந்து, உலகிலேயே மிக நீண்டநாள் ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, அரியணை ஏறினார். அப்படிப்பட்ட ஒருவருக்கே இன்று வியூகம் வகுத்துக் கொடுப்பதற்கு பிரசாந்த் கிஷோர் தேவைப்படுகிறார் என்றால், இன்றுள்ள இளைய தலைமுறையை, தலைவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.


ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை வியூக வல்லுநர்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு எடுபடும் என்பது தெரியவில்லை.


முதல்வர் பழனிசாமிக்காக வியூகம் வகுக்கும் சுனில், ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற வெடியைக் கிள்ளி அ.தி.மு.க-வுக்குள் எறிந்திருக்கிறார். அது நாலா பக்கமும் வெடித்து, உறங்கிக்கொண்டிருந்த பன்னீரை உசுப்பிவிட்டு முன்வரிசையில் உட்காரவைத்துவிட்டது. ‘ஒருங்கிணைவோம் வா, எல்லோரும் நம்முடன்’ என பிரசாந்த் கிஷோர் டீம் உருவாக்கிய திட்டங்கள் தி.மு.க-வுக்குள்ளேயே அதிருப்தி அலைகளைப் பரவவிட்டிருக்கிறது. கோடிகளைக் கொட்டிக் கொடுத்தும் வெற்றிக்கனி எட்டாக்கனியாகிவிடுமோ என்ற கலக்கம் அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. போகப் போகத்தான் தெரியும் வியூகங்களின் விந்தை முடிவுகள்!


தொண்டனின் மனதைப் படிக்க வக்கற்ற கட்சிகளுக்கு, வியூகங்கள் அனைத்துமே சோகத்திலேயே கொண்டுபோய் நிறுத்தும்!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment