Monday, October 19, 2020

சிறுவனைக் கொலை செய்த சிறுவர்கள்! - எங்கிருந்து வந்தது இவ்வளவு வன்மம்?

காலச்சக்கரத்தின் அபாயகரமான சுழற்சி அச்சமூட்டுவதாக மாறிவருகிறது. ஏற்கெனவே விதவிதமான போதைப் பழக்கங்கள், ரெளடியிசம் எனப் பாதை மாறிப் பயணித்து, பதைபதைக்கவைக்கிறார்கள் சிறுவர்கள். இந்தச் சூழலில் நெல்லையில் சற்றேறக்குறைய 15 வயது சிறுவர்கள் இருவர், மற்றொரு சிறுவனை கொலை செய்து உடலைப் புதைத்ததுடன், கொலையான சிறுவனின் தாயுடன் காவல் நிலையத்துக்கே சென்று எந்தப் பதற்றமும் இல்லாமல் புகாரும் அளித்திருக்கிறார்கள். கொலை செய்யும் அளவுக்குச் சிறுவர்களின் மனதில் மண்டிக்கிடந்த வன்மத்தைக் கண்டு காவல்துறையினரே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்!


நெல்லை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் இசக்கிபாண்டி - முப்பிடாதி தம்பதியர். கூலித் தொழிலாளர்கள். இவர்களின் ஒரே மகன் இசக்கிதுரை. 17 வயதான இவர், ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமலிருந்தார். அதே பகுதியில் வசித்துவரும் இரு மாணவர்கள் இசக்கியின் நண்பர்களாக இருந்தார்கள். ஒருவர், ஐ.டி.ஐ படித்தவர். மற்றொருவர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர். மூவரும் ஒன்றாகவே ஊர்சுற்றிவந்தார்கள். இந்தநிலையில்தான் மூவரும் ஒரே பெண்ணை ஒருதலையாகக் காதலிக்க... இந்த விவகாரம் சண்டையாக முற்றி, கொலையில் முடிந்திருக்கிறது.குலக்கொழுந்தாகக் கருதிய ஒரே மகனைப் பறிகொடுத்த சோகத்தில் நிலைகுலைந்து போயிருக்கிறார் இசக்கிதுரையின் தாய் முப்பிடாதி. அவரால் பேசக்கூட முடியவில்லை. மகனைப் பறிகொடுத்ததையே நம்ப முடியாமல்... “டேய் இசக்கி... ஆத்தாவுக்குக் கஞ்சி ஊத்த வந்துடுடா... யப்பா, குலசாமி... திரும்ப வந்துடுடா... இந்த ஆத்தா மடியில படுத்துக்கடா” என்று அரற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லி மெள்ளப் பேசவைத்தோம்...


“பையன் ஐ.டி.ஐ படிச்சிட்டான்... இனிமே நம்ம கூலிக்காரப் பொழப்பு முடிவுக்கு வந்துடும். சீக்கிரம் அவனுக்கு வேலை கிடைச்சு, குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவான்னு பெரிய கனாவெல்லாம் கண்டேனேய்யா... எப்பவுமே அந்த ரெண்டு பசங்களோடதான் சுத்திக்கிட்டிருப்பான். மூணு பேரும் ஒண்ணுமண்ணாத்தான் பழகுனாங்க. போன ஆறாம் தேதி மீன் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டுப் போனவன்தான். பொறவு அவனைக் காணலை. ராத்திரியும் வரலை. பதைபதைச்சுப்போய், ராத்திரியெல்லாம் பல இடங்கள்லயும் தேடினோம்.அந்த ரெண்டு பசங்களும் எங்களோட சேர்ந்துதான் விடிய விடிய தேடினாங்க. மக்கா நாளு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கலாம்னு அவனுங்கதான் கூட்டிட்டுப் போயி மனு எழுதிக் கொடுத்தாங்க. அப்படியெல்லாம் செஞ்ச பசங்களே அவனைக் கொன்னுருக்காங்கனு தெரிஞ்சதும், என் நெஞ்செல்லாம் பதறுதுய்யா... அவனுங்களையும் என் மவனுங்களாத்தானே நெனைச்சேன்... எங்க குடியை இப்படிக் கெடுத்துட்டானுங்களே... என் குழந்தை உடம்பை மூணு நாள் கழிச்சுத் தோண்டி எடுத்ததால அவனோட முகத்தைக்கூட பார்க்க முடியலைப்பா...” என்றவர் ஆவேசம் வந்ததுபோல எழுந்து, ஒரு கட்டைப்பையில் பேக்கிங்கூட பிரிக்காமலிருந்த ஒரு சட்டை, பேன்ட்டைக் காட்டி, தலையிலடித்துக்கொண்டு அழுதார்... “அவன் காணாமப்போன மக்கா நாளு (அக்டோபர் 7-ம் தேதி) அவன் பிறந்தநாளு. அதுக்காக ஆசையா புது டிரெஸ் வாங்கி வெச்சிருந்தோம். அதை உடுத்திப் பார்க்கக்கூட கொடுத்துவெக்கலியே...” என்று கதறி அழுதவரைத் தேற்ற வார்த்தைகள் இல்லை. இவர் இப்படி நிலைகுலைந்து கிடக்கிறாரென்றால் இன்னொரு பக்கம் தன் மகனின் படத்தை வெறித்துப் பார்த்தபடி முடங்கிக்கிடக்கிறார் தந்தை இசக்கிபாண்டி.


இந்த வழக்கை விசாரித்துவரும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் பேசினோம். “சிறுவனின் வீட்டைச் சுற்றியிருக்கும் தெருக்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தோம். அப்போது ஒரே பைக்கில் இசக்கிதுரையுடன் அவனின் இரு நண்பர்களும் சென்றது பதிவாகியிருந்தது. அதைவைத்து அந்த இரண்டு சிறுவர்களிடமும் விசாரணையைத் தொடங்கினோம். இருவரும், ‘நாங்க கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆத்துல குளிச்சுட்டு, பீர் குடிச்சுட்டு டிரிபிள்ஸ் வந்தோம். வழியில போலீஸ் செக் பண்ணினதால பைக்கை ரோட்டுல போட்டுட்டு ஓடிட்டோம். இசக்கி எங்கே போனான்னு தெரியலை’ என்றார்கள். தகவலை உறுதிப்படுத்த கல்லிடைக்குறிச்சி போலீஸாரிடம் பேசினோம். அவர்களோ, ‘சார்... பசங்க ரெண்டு பேர் மட்டும் `டிரங்க் அண்ட் டிரைவ்’ல வந்ததால பைக்கை பிடுங்கிட்டு, பெத்தவங்களைக் கூட்டிட்டு வாங்கடானு அனுப்பிட்டோம்’ என்று சொன்னார்கள். அப்போதுதான் எங்களுக்குப் பொறிதட்டியது. சிறுவர்கள் இருவரையும் தனித்தனியாக விசாரித்தோம். அதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்கள்” என்றார்.


முப்பிடாதி

சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தில், “நாங்க வீட்டுல பணத்தை வாங்கிட்டு, ஆத்துக்குக் குளிக்கப் போவோம். அப்போ பீர் வாங்கிக் குடிப்போம். நாங்க மூணு பேரும் எங்க ஏரியாவுல இருக்குற ஒரே பொண்ணை ஒருதலையா காதலிச்சோம். அன்னிக்கு ஆத்துல பீர் குடிச்சிக்கிட்டிருக்கும்போது இது பத்திப் பேச்சு வந்துச்சு... அப்ப தகராறு ஏற்பட்டு, பீர் பாட்டிலால இசக்கிதுரை தலையில அடிச்சோம். திருப்பி அடிக்க வந்தவனை ரெண்டு பேரும் சேர்ந்து, கம்பை எடுத்து பலமா அடிச்சதுல அவன் செத்துட்டான்.


உடனே உடம்பைப் பக்கத்துல இருக்குற தோட்டத்துல புதைச்சுட்டு, புதைச்ச தடம் தெரியக் கூடாதுனு இலைதழைங்களைப் போட்டு இடத்தை நிரவிட்டு வந்துட்டோம். நாங்களும் சேர்ந்து அவனைத் தேடினா சந்தேகம் வராதுனு நினைச்சோம். ஆனா, போலீஸார் எங்களைப் புடிச்சிட்டாங்க” என்று கூறியிருக்கிறார்கள்.சுமார் 15 வயதே நிரம்பிய சிறுவர்களுக்குக்கூட கொலை செய்யும் அளவுக்கு வன்மம் ஏற்படுமா... கொலையையும் செய்துவிட்டு, அந்தக் குற்றவுணர்வை வெளிக்காட்டாத பதற்றமில்லாத மனநிலை ஏற்பட்டது எப்படி... என்றெல்லாம் கேள்விக்கணைகள் மனதைத் துளைக்க... இது குறித்து மனநல மருத்துவர் `சினேகா’ பன்னீர்செல்வனிடம் கேட்டோம்.


“வளரிளம் பருவத்தில் சோதனை முயற்சியாக வீபரீத எண்ணங்கள் பலவும் மனதில் எழக்கூடும். சிலர் சாகசத்திலும் ஈடுபடுவார்கள். இப்போது நாம் பார்க்கும் சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் கொலை செய்வதையும், ரெளடியிசம் செய்வதையும் ஹீரோயிசமாகக் காட்டுகிறார்கள். இவையெல்லாம் சிறுவர்களின் மனதில் ஆழப்பதிந்துவிடுகின்றன. தவிர, சூழலும், வளர்க்கும்விதமும்தான் சிறுவர்களின் நடவடிக்கை களைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன.


சோமசுந்தரம் - பன்னீர்செல்வன்

எனவே, வளரிளம் வயதில் குழந்தைகளைப் பெற்றோர் கூடுதலாகக் கண்காணிக்க வேண்டும். அறம் சார்ந்த விஷயங்களைச் சொல்லி வளர்க்க வேண்டும். குழந்தைகளிடம் கடுமையாகத் தாக்குவது, வன்முறைச் சம்பவங்களைச் சொல்லி ஊக்குவிப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்ததால், குழந்தைகளை யாராவது கவனித்துக்கொண்டேயிருப்பார்கள். இப்போது கிராமங்களில்கூட அந்தநிலை மாறிவிட்டது. பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளைச் செயல்படுத்தினால், இந்தநிலை மாறக்கூடும்” என்றார் கவலையுடன்!


நம் குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்ட இந்தச் சமூகத்திடம்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். அந்தவகையில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய கடமை நாம் ஒவ்வொரு வருக்குமே உண்டு!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment