Friday, September 25, 2020

கொரோனாவை மூன்றே வாரத்தில் கட்டுப்படுத்தலாம்!

ராதாகிருஷ்ணன்


மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பினாலும், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. ஐந்தாறு மாதங்களாகத் தாங்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீட்க, இயந்திரங்களாகச் சுழல்கிறார்கள் மக்கள். இந்தச் சூழலில் கொரோனா தடுப்புப் பணிகளில் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அதில் நிலவும் சர்ச்சைகள் குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினோம்.


“தளர்வுகளுக்குப் பிறகு அரசு சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன?”


“மக்கள் முகக்கவசம் அணியாததும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும்தான் முக்கியமான சிக்கல்கள். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை என்ற உண்மையைப் புரிந்துகொண்டு, மக்கள் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த முடியும்.”


“சமீபகாலமாக தினசரி அரசு அறிவிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000, 6,000 என ஒரே மாதிரியாகவே வருகிறது. அதேபோல சென்னையிலும் சுமார் 1,000-ஐ சுற்றியே எண்ணிக்கை வருகிறதே..?”


“ஒரு நாளைக்கு சுமார் 85,000 பேருக்குப் பரிசோதனை செய்கிறோம். அவர்களில் ஆறு சதவிகிதம் பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது. என்ன கணக்கோ, அதைத்தான் சொல்கிறோம்.”


“இப்போது நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது?”


“நோயின் தீவிரம் குறைந்துவருகிறது. மற்ற மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை சற்றுக் குறைந்ததும், பரிசோதனையைக் குறைத்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறோம். இன்று சுமார் 6,000-ஆக இருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, நாளை 10,000 பேராகக்கூட உயரலாம். எண்ணிக்கை பிரச்னை இல்லை. இறப்பைக் குறைக்க வேண்டும்.”“ஆனால், கொரோனா சிகிச்சையிலிருந்த நபர் இறந்தால், ‘தொற்று இல்லை’ என்று தகவல் மறைக்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றனவே?”


“முன்பு கோவிட் மூச்சுத்திணறலால் இறந்தவர்களை ‘கோவிட் மரணம்’ என்றும், மற்ற காரணங்களால் இறந்தவர்களை அந்தக் காரணங்களை குறிப்பிட்டும் பதிவு செய்தனர். இது குறித்த சர்ச்சை எழுந்ததுமே பத்துப் பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அனைத்து மரணங்களின் எண்ணிக்கையையும் ஆய்வு செய்தனர். அதில், விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டு வெளிப்படை யாகவே அறிக்கை கொடுக்கப்பட்டது. பொதுச் சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை மரணங் களை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.”


“அப்படியானால் கோவிட் மரணங்கள் மறைக்கப்படுவதே இல்லையா?”


“வாரந்தோறும் ஒரு குழு எண்ணிக்கையைச் சரிபார்க்கும். அந்தக் குழுவுக்குச் சந்தேகம் வந்தால், அது குறித்து விசாரணையும் நடத்தும். கோவிட் மரணங்களை மறைப்பதில்லை.”


“குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பிற உடல் பிரச்னைகள் வருகின்றனவே... என்ன காரணம்?”


“வைரஸ் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்தால், வேறு சில பிரச்னைகள் வருகின்றன. ஆனாலும், குணமாகிச் செல்பவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. இருந்தபோதும், குணமடைந்த அனைவருக்குமே பரிசோதனை செய்கிறோம். தேவையானவர்களுக்குச் சிகிச்சையும் அளிக்கிறோம்.”


“கிராமப்புறங்கள் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் இருக்கின்றனவா?”


“மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கிடைக்கும் அனைத்து மருந்துகளும், தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைக்கும். கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 83,000-க்கும் அதிகமான புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.”


“எக்ஸிட் டெஸ்ட் எடுக்கப்படாத சூழலில், எதன் அடிப்படையில் குணமடைந்தவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்?”


“அது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவல்ல. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் செய்கிறோம். 11 நாள்களுக்குப் பிறகு வைரஸின் வீரியம் குறைந்துவிடும். இருந்தாலும், டெஸ்ட்டில் இறந்த வைரஸைக் காட்டக்கூடும் என்பதால்தான் `எக்ஸிட் டெஸ்ட் வேண்டாம்’ என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.”


“மழைக்காலம் தொடங்கிவிட்டது. டெங்கு உள்ளிட்ட நோய்கள் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றனவா?”


“தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டு டெங்கு முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கொரோனா தடுப்புப் பணியிலிருக்கும் நபர்களை, மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கான தடுப்புப் பணியிலும் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மக்களும் அவரவர் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.”


“தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஏற்படுமா?”


“ஏற்படாது என்ற நம்பிக்கையில்தான் பணியாற்றிவருகிறோம். அப்படியே ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் திட்டங்கள் தயார்நிலையில் இருக்கின்றன.”


“கொரோனா செலவுக்கணக்கில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதே?”


“கணக்குகள் அனைத்தும் தணிக்கை செய்யப்படும். தவறு செய்திருந்தால், தணிக்கையில் சிக்கிக்கொள்வார்கள். அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.”


“மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?”


“அரசு சொல்லும் தகவல்களை மட்டும் நம்புங்கள்; வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மருத்துவர்கள் அறிவுறுத்தும் மருந்துகளை மட்டுமே உட்கொள்ளுங்கள்.


நாம் ஒரு போரில் இருக்கிறோம், இந்தப் போரில் முகக்கவசமே பெரும் ஆயுதம்.


அனைவரும் முகக்கவசத்தைக் கட்டாயம் அணியுங்கள். தனிமனித இடைவெளியைப் பின்பற்றுங்கள். இப்படி அனைவருமே செய்தால், கொரோனாவை மூன்றே வாரத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment