தேர்தல் என்றாலே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. வக்ஃபு வாரியத் தேர்தலும் இதில் விதிவிலக்கல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து, செப்டம்பர் 19-ம் தேதி வாரியத் தலைவராக அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி-யான முகமது ஜானைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதற்கிடையே தபால் ஓட்டுகளில் குளறுபடி ஏற்பட்டதாக எதிர்க்குரல் எழுந்திருக்கிறது.
இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை வக்ஃபு அமைப்புகள் நிர்வகிக்கின்றன. 1995-ம் ஆண்டு வக்ஃபு சட்டப்படி, சொத்துகளை நிர்வகிக்க இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், முத்தவல்லிகள் தரப்பில் தலா இருவர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் தவிர ஷியா, சன்னி சமூகத்தினர், சமூக ஆர்வலர், ஐ.ஏ.எஸ் ஆகிய தரப்புகளில் தலா ஒருவர் நியமனங்கள் மூலம் உள்ளே வருகின்றனர். இவர்கள் ஒன்றுசேர்ந்து வக்ஃபு வாரியத் தலைவரைத் தேர்வு செய்வார்கள்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியம் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கிறது. எம்.பி-யாக இருந்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரான அன்வர் ராஜா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார். சில உறுப்பினர்களின் பதவிகளும் காலியாகின. இதைத் தொடர்ந்து வாரியத்தைக் கலைத்து சிறப்பு அதிகாரியாக சித்திக் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. ஒருவழியாக வழக்குகள் முடிவுக்கு வந்து, செப்டம்பர் 9-ம் தேதி வக்ஃபு வாரியத் தேர்தல் நடந்தது.
இது குறித்து முத்தவல்லிகள் பிரிவில் போட்டியிட்ட அப்துல் கபூர் நம்மிடம் பேசினார். ``நடந்து முடிந்த தேர்தலில், எம்.பி-க்களில் நவாஸ் கனியும், முகமது ஜானும், எம்.எல்.ஏ-க்களில் அபுபக்கரும், செஞ்சி மஸ்தானும் போட்டியின்றித் தேர்வானார்கள். பார் கவுன்சிலில் இஸ்லாமியப் பிரதிநிதிகள் இல்லாததால், மூத்த வழக்கறிஞர்கள் கான் மற்றும் சையது இஸ்மாயில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். முத்தவல்லி பிரிவுக்கான தேர்தலில் நான், அப்துல் ரகுமான், குலாப் பாஷா, ஜாவித் அகமது, முகமது பஷீர், முஜிபுர் ரகுமான் ஆகிய ஆறு பேர் போட்டியிட்டோம்” என்றவர், அதன் பிறகு ஏற்பட்ட சர்ச்சைகளை விவரித்தார்.
``தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே அதிகாரிகள் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். கொரோனா காரணமாக, சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களிலுள்ள 717 வாக்குகளை, தபால் மூலம் பெற முடிவு செய்தனர். இது வக்ஃபு வாரிய விதிக்கு (13(2), 1997) எதிரானது. இதற்கிடையே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறைச் செயலர் சந்திரமோகன், `வாக்குச்சீட்டு வேண்டுவோர், இணைப்பு 2 விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வக்ஃபு வாரியத்தின் மண்டலக் கண்காணிப்பாளரிடம் கையொப்பம் வாங்கி அனுப்ப வேண்டும்; அப்படி வரும் தபால் வாக்குகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று கூறிவிட்டார். மண்டலக் கண்காணிப்பாளர்களிடம் கையொப்பம் வாங்கும்போது, அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காகப் பிரசாரம் செய்தார்கள்; அழுத்தம் கொடுத்தார்கள்.
செப்டம்பர் 10-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் முத்தவல்லிகள் பிரிவில் 668 தபால் வாக்குகள்தான் வந்தன. மீதமுள்ள 48 வாக்குகள் எங்கே என்று தெரியவில்லை. முடிவில் 309 தபால் வாக்குகளையும், சென்னையில் 11 வாக்குகளையும் பெற்று அப்துல் ரகுமானும், 149 தபால் ஓட்டுகளையும், சென்னையில் 38 வாக்குகளையும் பெற்று முகமது பஷீரும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் மூலம் தேர்தல் நடத்தியதாலேயே இவ்வளவு குளறுபடிகள். எங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் வந்து சேரவில்லை” என்றார் கொதிப்புடன்.
முத்தவல்லிகள் பிரிவில் வெற்றிபெற்ற அப்துல் ரகுமானிடம் பேசினோம். ``நான் இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். கடந்த முறை நான் தோல்வியடைந்தபோது, இப்படி எந்தக் காரணத்தையும் சொல்லவில்லை. தபால் வாக்கு முறையில் தேர்தல் சரியாகத்தான் நடந்தது. வக்ஃபு கண்காணிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதில் உண்மையில்லை. தோற்றவர்கள் ஏதாவது காரணத்தைச் சொல்வது இயல்பானது. இந்த விவகாரத்தில் அரசைக் குறை சொல்வதிலும் உண்மை இல்லை” என்றார் உறுதியாக.
தேர்தல் அலுவலரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கூடுதல் செயலருமான ஆண்டியப்பனிடம் பேசினோம். ``தேர்தலை நல்லபடியாக நடத்தி முடித்தோம். எந்தத் தவறும் நடக்கவில்லை. தபால் வாக்குகள் குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை” என்றார் சுருக்கமாக!
சர்ச்சைகள் ஓய்ந்து, நல்ல காரியங்கள் தொடங்கட்டும்!
No comments:
Post a comment