Wednesday, September 30, 2020

ஹேஸ்யம் - ஜோசியங்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது!

மத்திய பா.ஜ.க அரசின் அதிரடிச் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, அதன் கூட்டணிக் கட்சிகளே குமுற ஆரம்பித்திருக்கும் நேரம் இது. ஆதரவு-எதிர்ப்பு, ஆப்சென்ட், ராஜினாமா... என நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பு பற்றியெறிந்தது.இந்தச் சூழலிலும், வழக்கமான அமைதியிலேயே இருக்கும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசினோம்...


“புதிய வேளாண் சட்டங்களின் பாதகங்கள் குறித்து கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வே நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், நீங்கள் எந்தவித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கிறீர்களே..?’’


“மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் உண்மையிலேயே விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கின்றன. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், தவறான புரிதல்களால் விவசாயிகள் மத்தியில் இந்தச் சட்டங்கள் குறித்த அச்சம் நிலவுகிறது. எனவே, ‘விவசாயிகளின் ஐயங்களை விவசாய அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றுதான் நானும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பேசியிருக்கிறேன்.’’


“விவசாயிகளுக்கு நன்மை அளிக்கக்கூடிய சட்டத்தை எதிர்த்தா, பா.ஜ.க கூட்டணிக் கட்சி அமைச்சரான ஹர்சிம்ரத் கௌர் பாதல் ராஜினாமா செய்திருக்கிறார்?’’


“பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம். அவர்கள் வைத்ததுதான் அங்கே சட்டம். அதன் அடிப்படையில்தான் அரசியல் செயல்பாடுகளும் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். எனவே, இது அங்குள்ள அரசியல் சூழல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கிறது. மற்றபடி ஒட்டுமொத்த விவசாயிகளின் நலனை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், புதிய வேளாண் சட்டங்கள் ஒருபோதும் பாதகத்தை ஏற்படுத்தாது... சாதகத்தைத்தான் ஏற்படுத்தும்!’’


“அ.தி.மு.க எம்.பி-யான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் இது குறித்து மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்திருக்கிறாரே..?”


“அ.தி.மு.க-வில் யார், என்ன பேசினார்கள் என்பது குறித்துப் பேச நான் விரும்பவில்லை. அ.தி.மு.க எங்கள் கூட்டணிக் கட்சி. அதன் அடிப்படையில், ‘விவசாயிகளின் நலனுக்காகவே சட்டத்தை ஆதரிக்கிறோம்’ என்று முதல்வர் சொல்வதைத்தான் நான் இறுதியாக நம்புகிறேன். மற்றபடி அதற்கு இடைப்பட்ட சமாசாரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை!”

 

ஜி.கே.வாசன்


“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க-வும் அவைக்கு வராமல் வாக்கெடுப்பைப் புறக்கணித்திருப்பது அதிருப்தியின் வெளிப்பாடுதானே..?’’

“அவைக்கு வராததாலேயே அதை மறைமுக எதிர்ப்பு என்றெல்லாம் சொல்லி விட முடியாது. அப்படிப் பார்த்தால், பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி-க்கள், கூட்டணியிலுள்ள சில கட்சியினரும்கூட அவையில் பங்கேற்கவில்லை. அதற்காக, அவர்களெல்லாம் இந்த மசோதாவை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல முடியுமா... இது ‘கோவிட்-19’ எனும் கடினமான காலம். நாடாளுமன்றத்துக்குப் பலராலும் வர இயலவில்லை. அதற்கும் இதற்கும் ஒருபோதும் முடிச்சுப் போட முடியாது!’’

“இந்த விவகாரத்தில், மக்களவையில் ஆதரவு - மாநிலங்களவையில் எதிர்ப்பு என்ற அ.தி.மு.க-வின் இரட்டை நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“இரட்டை நிலைப்பாடு என்று நான் சொல்ல மாட்டேன். தமிழகத்தின் நிலைக்கு ஏற்றவாறு தங்கள் அரசியல் காய்களை நகர்த்துகிறார்கள். எந்தெந்த விஷயங்களில் மத்திய அரசை ஆதரிக்க வேண்டுமோ, அவற்றையெல்லாம் ஆதரிக்கிறார்கள். எந்தெந்த முறையில் சரி, தவறுகளை எடுத்துச் சொல்ல வேண்டுமோ, அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்கிறார்கள்... அவ்வளவுதான்!’’

“அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமை விவகாரம் கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா?’’

“தமிழகத்தில் எங்கள் கூட்டணியிலுள்ள மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. வரும் சட்டமன்றத் தேர்தலில், எங்கள் கூட்டணி வெல்வதற்கான நல்ல சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். அதற்கேற்றவாறு தங்கள் கோட்பாடுகளை அமைத்துக்கொண்டு கூட்டணிக் கட்சிகளுக்கு நம்பிக்கை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்!’’

“ `2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க-த.மா.கா கூட்டணியைத் தடுத்தவர் சசிகலா’ என்று செய்திகள் வெளிவருகின்றன. மீண்டும் சசிகலா விடுதலையாகி...’’

(அவசரமாக இடைமறித்துப் பேசுகிறார்) “இது போன்ற ஹேஸ்யங்கள், ஜோசியங்களுக் கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. ஒருவர் கட்சிக்குள் வருவாரா... வர மாட்டாரா, ஒருவர் கட்சி தொடங்குவாரா... மாட்டாரா, ஒருவர் வெளியில் வருவாரா... மாட்டாரா’ போன்ற கேள்விகள் எல்லாமே ஹேஸ்யமானவைதான். ‘அப்படி யிருக்கும், இப்படியிருக்கும்’ என்று நானாகக் கற்பனை செய்து பதில் சொல்வதால், வாக்குவங்கி வரும் என்றும் நான் நினைக்கவில்லை!’’

“நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளெல்லாம் தங்கள் தனிப்பட்ட வாக்கு வங்கியை நிரூபித்திருக்கின்றன. த.மா.கா அப்படியான போட்டிக்கே இன்னும் வரவில்லையே... பயமா?’’

“தேர்தலில், தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி நிற்கும்போதுதான், அந்தக் கட்சியின் வாக்குவங்கி என்னவென்று தெரியவருகிறது. அப்படியான ஒரு வாய்ப்பு த.மா.கா-வுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்தாலும்கூட, எங்கள் பலம் தெரிந்து நாங்கள் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளும் எங்கள் பலம் என்னவென் பதைத் தெரிந்துவைத்திருக்கின்றன.’’

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா-வுக்கு ஒரு இடம்தானே கிடைத்தது..?’’

“கடந்த தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் இறுதியாகத்தான் நாங்கள் பங்குபெற்றோம். எனவே, எங்களுக்கு உரிய பங்கின் அடிப் படையில் எங்களுக்கு சீட்கள் கிடைக்கவில்லை. ஆனாலும்கூட, ‘எண்ணிக்கை பெரிதல்ல... எண்ணம்தான் பெரிது’ என்று முடிவு செய்து தேர்தலில் நின்றோம். அதன் பிறகு, த.மா.கா-வின் பலம் உறுதியாகத் தேவை என்றரீதியில், நாடாளுமன்ற மே லவை உறுப்பினர் பதவி ஒன்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் எங்களுக்கு உரிய நியாயமான எண்ணிக்கையில் சீட்கள் கிடைக்கும்; சட்டமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்கும்!’’

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment