Wednesday, September 09, 2020

ஓட்டுக்காகவா அரியர் ஆல் பாஸ்? - அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிரடி

 ‘அரியர் ஆல் பாஸ்’ அறிவிப்பு தொடர்பாக, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனோடு நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா.


கொரோனா பரவல் காரணமாக, ‘மாணவர்கள் அரியருக்குப் பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி’ என அறிவித்தது அரசு. அதற்கு மாணவர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு. அதை வாக்குகளாகத் தக்கவைக்கும் முயற்சியில் அ.தி.மு.க அரசு இறங்கியிருக்கிறது. அதற்கேற்ப விளம்பரங்களும் களைகட்டிக்கொண்டிருக்கின்றன.


இந்நிலையில்தான், ‘தேர்வு நடத்தாமல் தேர்ச்சியை அறிவிக்க முடியாது’ என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) கடிதம் அனுப்பியிருப்பதாகச் சொல்லி, ஆட்சியாளர்களையும் மாணவர்களையும் ஒருசேர அதிரவைத்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா.


‘‘பல்கலைக்கழக இ-மெயில் மூலமாக அந்தக் கடிதம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியாது. தமிழக அரசுதான் இறுதி முடிவெடுக்கும்’’ என்று சூரப்பா சொல்ல, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனோ, ‘‘அப்படி எந்த மெயிலும் ஏ.ஐ.சி.டி.இ அனுப்பவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழகத் துணைவேந்தர்களில் இவர் ஒருவர் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்’’ எனக் கொதித்தார்.


துணைவேந்தர் சூரப்பாவிடம், ‘`அமைச்சரோடு ஏன் மோதல்?’’ என்றபோது, ‘`எங்களுக்குள் எந்தவித மோதலும் இல்லை’’ எனச் சிரித்தபடியே கூறினார். ‘‘அப்படியென்றால், 13 துணைவேந்தர்களில் நீங்கள் மட்டும் `ஆல் பாஸ்’ அறிவிப்பை எதிர்ப்பதாக அமைச்சர் ஏன் கூற வேண்டும்?’’ என்றதற்கு, ‘‘அது குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை” என்றார்.


சூரப்பா


இதையடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


‘‘அரியர் ஆல் பாஸ் அறிவிப்பு தொடர்பாக, உங்களுக்கும் சூரப்பாவுக்கும் மோதல் ஏன்?’’


“அதைப்பற்றி அவரிடமே கேளுங்கள்!”


‘‘எந்தவித மோதலும் இல்லை என்கிறார் அவர். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!”


‘‘என்னைப் பொறுத்தவரையில் அனைவரிடமும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். மோதல் எதுவும் இல்லை.’’


‘‘அப்படியானால், ‘தேர்வு நடத்தாமல் தேர்ச்சியை அறிவிக்க முடியாது’ என ஏ.ஐ.சி.டி.இ அனுப்பிய மெயில் பற்றி சூரப்பா சொன்னபோது நீங்கள் முரண்பட்டது ஏன்?’’


‘‘இ-மெயில் வந்திருக்கிறது என அவர் சொல்கிறார். அது என்ன காரணத்துக்காக வந்திருக்கிறது... அதற்கு முன்னதாக இவர் ஏ.ஐ.சி.டி.இ-க்கு என்ன எழுதினார் என்பது தெரிய வேண்டும். அதன் பின்னர், அவர்கள் என்ன பதில் கொடுத்தார்கள் என்பதையும் நாம் விரிவாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.’’


‘‘ ‘அரியர் வைத்திருந்த மாணவர்களைத் தேர்ச்சி பெறவைத்தது சரியானதல்ல’ என்கிறாரே கல்வியாளர் இ.பாலகுருசாமி?’’


‘‘அவர் அப்படித்தான் சொல்வார். நாளொன்றுக்கு எவ்வளவு பேருக்கு கொரோனா வருகிறது என்று பாருங்கள். தேர்வெழுதப் போய், அதனால் மாணவர்கள் யாருக்காவது கொரோனா வந்துவிட்டால் யார் பொறுப்பேற்பது? மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டுதான் அரியர் தேர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டது.’’


கே.பி.அன்பழகன்

‘‘பல்கலைக்கழகத்துக்கே அதிகாரம் இல்லாதபோது, தேர்ச்சி தொடர்பாக அரசு அறிவிக்க முடியாது என்கிறார்களே..?’’


‘‘பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது. யு.ஜி.சி (பல்கலைக்கழக மானியக் குழு), ஏ.ஐ.சி.டி.இ விதிகளின்படியே அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவு வந்ததால், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடத்தவிருக்கிறோம். மாணவர்களின் நலனுக்காக அரசு எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.’’


‘‘ ‘மாணவர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வேண்டுகோள் வந்த பிறகுதான் இப்படியோர் அறிவிப்பு வெளியானது’ என்கிறார்களே?’’


‘‘அதெல்லாம் தவறான தகவல். கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க, முதல்வரும் அமைச்சர்களும் எந்த அளவுக்கு வேலை பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். மற்ற மாநிலங்களைவிட அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டுவருகிறோம். மார்ச் மாதமே கல்லூரிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி, படுக்கை வசதிகளைத் தயார் செய்தோம். இப்போது மாணவர்களை அங்கே தேர்வெழுதவைப்பது எப்படிச் சரியாகும்?”


‘‘மாணவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கான முயற்சியாக `ஆல் பாஸ்’ அறிவிப்பை எடுத்துக்கொள்ளலாமா?’’


‘‘நிச்சயமாக இல்லை. இதற்கு முன்னதாக 10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் உட்பட பல வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்கிறது. அந்த மாணவர்களுக்கு வாக்கு இருக்கிறதா... பிறகு ஏன் செய்து கொடுத்தோம்? ஏனென்றால், தொலை நோக்குப் பார்வையோடு சிந்திப்பதுதான் அ.தி.மு.க-வின் வழக்கம். தேர்தலுக் காகவும் ஓட்டுக்காகவும் நாங்கள் செயல்படவில்லை. மாணவ சமுதாயத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்படுகிறோம்.’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment